வீட்டில் இருந்து வெளியே செல்ல, மொபட்டை கிளப்பினாள் சித்ரா. ""வண்டியில், ஆர்.சி., புக், டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் காப்பி எல்லாம் சரியாக இருக்கா?'' என கேட்டாள் மித்ரா.
""அதெல்லாம், எப்போதும் ஒரு காப்பி வண்டியில் இருக்கும். அது சரி, இப்ப எதுக்கு அதை கேக்கற?'' என்று வினவினாள் சித்ரா.
""சிட்டியிலே, போக்குவரத்து போலீஸ்காரங்க, எல்லா இடத்திலயும் நின்னு சோதனை நடத்துறாங்க. ரூல்ஸ் மீறும் வண்டிகளுக்கு, அதிகபட்சமாக என்ன பிரிவெல்லாம் போடலாமோ, அதிலெல்லாம் "சார்ஜ்' போடறாங்க. விதிமீறலை தவிர்க்க, இந்த வழியை போலீசார் பின்பற்ற ஆரம்பிச்சுருக்காங்க,'' என விவரித்தாள் மித்ரா.
""இதனால, வழக்கு எண்ணிக்கை குறைந்திருக்கிறதா' என்று, சந்தேகத்தை சித்ரா கிளப்பினாள்.
""நல்ல பலன் கிடைச்சிருக்குக்கா. அது போக, வாகன விதி மீறல் அபராதம், இப்ப பல மடங்கு அதிகரிச்சிருக்கறதால, விதிமீறல் ஆசாமிகளும் கொஞ்சம் திருந்த ஆரம்பிச்சுருக்காங்க,'' என்றாள் மித்ரா. அதை ஆமோதித்தவாறே, வண்டியை கிளப்பினாள் சித்ரா.
""போலீஸ்காரர்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வழக்கு பதிவு செய்யறாங்க. அந்த ரகசியம் தெரியுமா'' என, அடுத்த விஷயத்துக்கு தாவினாள் சித்ரா.
""புது அதிகாரிகங்க வந்திருக்கறதால, போலீஸ்காரங்க கொஞ்சம் சுறுசுறுப்பை காட்டுறாங்களோ,'' என, தன் சந்தேகத்தை கேட்டாள் மித்ரா.
""புது அதிகாரிகங்க வரவால, தங்களுக்கு மாறுதல் வருமோங்கிற பயம் தான், பலருக்கும் இருக்கு. ஆனா, வழக்கு போடற விஷயமே வேறு'' என பொடி வைத்தாள் சித்ரா.
""அது என்ன விஷயம்,'' என ஆவலோடு கேட்டாள் மித்ரா.
""பொதுவாக இது சிட்டி, ரூரலில் என எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலும் நடக்குது. எல்லா ஸ்டேஷன்களிலும், போலீசார் இரண்டு அணியாக இருப்பாங்க. இதுல ஒரு அணி மாமூல் வாங்கிட்டு கண்டு கொள்ளாமல் விடுகிற சில விஷயங்களை, எதிரணி மோப்பம் பிடித்து, தேடிப்போய் மடக்கி, வழக்கு போடுறாங்களாம். மது, கஞ்சா, லாட்டரி, சீட்டாட்டம் என்று பல பகுதிகளில், தற்போது வழக்கு பதிவுகள் அதிகளவு இருப்பதற்கு, இது ஒரு காரணமாம்,'' என்றாள் சித்ரா.
""இது ஒரு பக்கம் நடந்தாலும், வழக்கு போட தயங்கி, சில பிரச்னைகளை போலீசார் விட்டுறாங்க. ஊத்துக்குளி ரோடு டி.எம்.எப். எதிரே, ரயில்வே லைனுக்கு வடபுறம், முட்புதர்கள் மண்டி கெடக்குது. அந்த பகுதியில், எந்நேரமும் கஞ்சா பேர்வழிங்க இருக்கிறாங்க; இதுல, சின்ன பையன்களும் அடக்கம். இதுபத்தி போலீசுக்கு தகவல் சொன்னதும், அங்கு போன போலீஸ்காரங்க, பசங்களை மட்டும் மிரட்டீட்டு, அவங்க மேல எந்த கேஸும் போடாம வந்துட்டாங்களாம்,'' என்று சித்ரா கூறினாள்.
""டோக்கன்' கொடுத்துட்டாங்க; சீக்கிரம் பட்டா கிடைச்சுடும்னு போயிருக்காங்க,'' என, அடுத்த மேட்டாருக்கு தாவினாள் மித்ரா.
""என்ன விஷயம்?'' என்று கேட்டாள் சித்ரா.
""கவுன்சிலருங்க தூண்டி விட்டதால, சுதந்திர தினவிழாவுல பட்டா கொடுப்பாங்கனு நம்பி, பலரும் கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்காங்க. மனுவ வாங்கி வச்சிட்டு, அதுக்கான ரசீதை கொடுத்து அனுப்பியிருக்காங்க. கலெக்டர் ஆபீசுல கொடுத்த ரசீது வாங்கி பார்த்துட்டு,""டோக்கன் கொடுத்தாச்சு! இனி, சீக்கிரம் பட்டா கிடைச்சுடும்.
""நான் வாங்கி கொடுக்காம போக மாட்டேன்'னு, கவுன்சிலர்கள் சில பேர், மக்கள் கிட்ட நல்ல பெயர் எடுத்துட்டாங்க. இதை நம்பி அப்பாவிகள் சிலரும், "டோக்கன்' வந்துட்டதால, சுதந்திர தினத்தன்னிக்கு, பட்டா கிடைச்சிடும்னு நம்பிக்கையா இருக்காங்க. பட்டா விஷயத்தில, மக்களை தூண்டிவிட்டு, சிலர் "குளிர்'காய ஆரம்பிச்சுட்டாங்க,''என்றாள் மித்ரா.
""அது ஒருபக்கம் இருக்க; இங்க, அவிநாசி தொகுதிக்காகவே, மாவட்ட நிர்வாக இயந்திரம், தனியா இயங்க வேண்டியிருக்கு, '' என்றாள் சித்ரா.
""சபாநாயகர் தொகுதியாச்சே; சும்மா இருக்க முடியுமா?'' என்றாள் மித்ரா.
""ஆமா, நீ சொன்ன மாதிரிதான். சபாநாயகர், தொகுதி பின்னடைவுல இருக்குதுனு, கலெக்டர் உட்பட, அனைத்து துறை அதிகாரிகளையும் அழைச்சு, அவிநாசியில மீட்டிங் போட்டு, வறுத்தெடுத்துட்டாரு. எல்லா காலனிக்கும், அடிப்படை வசதியை செஞ்சு தரணும்னு உத்தரவு போட்டிருக்காரு. கலெக்டர், இதுக்காகவே தனியாக ஒரு ஆய்வு கூட்டம் நடத்தியிருக்காங்கன்னா பார்த்துக்கோயேன். எப்படியாவது, நிதி வாங்கி, வேலை நடந்தாத்தான், சபாநாயகர் சாந்தமாவாரு,'' என்றாள் சித்ரா.
""கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம், காலேஜ் பக்கத்திலே நடத்தினாங்களே தெரியுமா?'' என்று, ஆளுங்கட்சி மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா.
""எந்த காலேஜ் பக்கம் நடத்தினாங்க?'' என்றாள் சித்ரா.
""குமரன் காலேஜ் பக்கத்தில நடந்திருக்கு. போன வாரம், மாவட்ட அமைச்சர், காலேஜூக்குள்ள ஆய்வு செஞ்சிட்டு போனாரு. அப்போது, "மாஜி' அமைச்சரால வரமுடியலை. அதனால, கட்சி சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி, "நானும் இருக்கேன்'னு மாஜி அமைச்சர் காட்டியிருக்காரு,'' என்றாள் மித்ரா.
""உள்ளாட்சி தேர்தலுக்குள்ள, நல்ல பேரு வாங்கணுமுன்னு, செஞ்சுட்டு இருக்காங்க போல. போன வாரம் கூட, மாவட்டத்திலிருந்து, 750 பேரை கூட்டிட்டுபோயி, சி.எம்., முன்னாடி, கட்சியில சேர்த்திருக்காரு. அப்படியே, உறுப்பினர் சேர்க்கை முகாம், பகுதி வாரியான செயல்வீரர் கூட்டம் நடத்திட்டு இருக்காரு. அதில்லாம, மறுபடியும் "வாய்ப்பு' கிடைக்கனுமுன்னு, கோவில், குளம்னு போயி வேண்டுதல் நடந்திட்டு இருக்கு,'' என்று கூறிய வாட்சை பார்த்து விட்டு, ""ஓகே.,டைம் ஆயிடுச்சு நான் கிளம்பறேன்,' என்றவாறே மொபட்டில் கிளம்பினாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE