இணையத்தில் தொலையும் இளைஞர்கள் வாழ்க்கை!

Added : ஆக 13, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன், நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் அங்கம் போலவே மாறிவிட்ட மொபைல் போனின் மாய வளையத்தில், நம் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறோம். இதிலிருந்து மீள்வது சற்று கடினம் தான். ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகமே
இணையத்தில் தொலையும் இளைஞர்கள் வாழ்க்கை!

இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன், நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் அங்கம் போலவே மாறிவிட்ட மொபைல் போனின் மாய வளையத்தில், நம் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறோம். இதிலிருந்து மீள்வது சற்று கடினம் தான்.

ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகமே மொபைல் போனிற்குள் அடங்கி விட்டது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், நம் இணைய தேடல்களுக்காக, 'பிரவுசிங் சென்டர்'களுக்கு சென்றோம். ஆனால், இப்போது நம் கையடக்க மொபைல் போனிலேயே, இணைய வழி சேவைகளை பயன்படுத்துகிறோம்.

சமூக வலைதளங்கள் பெருகிவிட்டன. அதில் உறுப்பினர்களாகும் விடலைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு, படிப்பில் நாட்டமின்மை, மன உளைச்சல், பாலியல் வக்கிர எண்ணங்கள் உருவாகி விடுகின்றன.

பல மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டு, மொபைலில் இன்டர்நெட் சலுகைகளையும், 'டாக் டைம்' சலுகைகளையும் தாராளமாக வழங்குகின்றன. இப்போதைய கணக்குப்படி, இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 100 கோடியை தாண்டியுள்ளது; இது, இனி வரும் காலங்களில், மேலும் அதிகரிக்கக்கூடும்.

அப்போது, இணைய வழி குற்றங்களும் அதிகரிக்கக் கூடும். அக்காலங்களில் சாலையில் போவோர் யார், வருவோர் யார் என்ற, புறச்சூழலில் பயணித்தோம். சுற்றுலா போன்ற தலங்களுக்கு செல்லும் போது, போகும் வழியில் இயற்கையை ஆனந்தமாக ரசித்து பயணித்தோம்.

ஆனால், இன்று அப்படியா? சாலையில் சென்றால் பசை ஒட்டியது போல, மொபைல் போனை காதில் ஒட்டிக் கொண்டே, பேசி செல்கிறோம்.

அதோடு விட்டோமா... எதிரே வாகனங்கள் வருவது கூட தெரியாமல், மொபைல் போனில் முகம் புதைத்து நடக்கிறோம். வாகனம் ஓட்டும்போது, மொபைலை காதில் அணைத்த படியே பேசிச் சென்று, விபத்துக்கு ஆளாகிறோம் அல்லது மற்றொருவரை விபத்துக்கு உள்ளாக்குகிறோம்.

பஸ்சுக்கு காத்திருக்கும் அக்குறுகிய நிமிடத்தில் கூட, நாம் வெளி உலகை ரசிப்பதில்லை. அப்போதும் கூட மொபைலில் மூழ்கி திளைக்கிறோம். மொத்தத்தில் நாம் சாலையில் குனிந்த தலை நிமிராமல், மொபைலை காதலித்த படியே செல்கிறோம்.

'இணையதளம் வழியாகவே, 100 சதவீத ஆபாச காட்சிகள் பரப்பப்படுகின்றன; ஆபாசக் காட்சிகளை பார்த்து, இளைஞர்கள் பாலியல் துாண்டலுக்கு ஆளாகின்றனர்; இவ்வாறு பாதிக்கப்படுவதில், 80 சதவீத ஆண்களும், 60 சதவீத பெண்களும் அடங்குவர்' என, சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

மொபைல் பாங்கிங், இன்டர்நெட் பாங்கிங் போன்றவற்றில் கவனக் குறைவால் பணத்தை இழந்த, படித்த, 'மேதை'களும் உண்டு. இப்படியாக இணையத்தில் வீழ்ந்த கதைகள் பல நீள்கின்றன.

'வாட்ஸ் ஆப்' மொபைல் போன் அப்ளிகேஷனில், பல அரசியல்வாதிகளின் அந்தரங்க உரையாடல்கள் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. தான் எடுக்கும், 'செல்பி'யை ஏதாவது ஒரு சமூக வலைதளத்தில் வெளியிடும் போது, அதன் விமர்சனங்கள் நேர்மாறாக இருந்தால், மிகுந்த மன அழுத்தத்திற்கு அந்த நபர் ஆளாகுகிறார். இதனால், தாழ்வு மனப்பான்மையும் உருவாகிறது.

'செல்பி' எடுக்கிறேன் பேர்வழி என, பின்னால் சென்று மாடியில் இருந்து கீழே விழுந்து மாய்ந்தவரும் உண்டு.

இரண்டிலிருந்து, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, மொபைலை ஒரு ஆர்வமான பதைப்புடன் எடுத்து, எடுத்து பார்க்கிறோம். இது ஒரு, மன நோய்க்கான அச்சாரம் எனவும், மொபைலில் நீண்ட நேரம் பேசுவது மற்றும், 'ஹெட்செட்'டில் நீண்ட நேரம் பாட்டு கேட்பது போன்றவற்றால், செவித்திறன் குறைபாடு, மூளை செல்கள் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

இணையம் மற்றும் மொபைலை நீண்ட நேரம் ஒரே இடத்திலிருந்து பல மணி நேரம் உற்று நோக்குவதால், கண்கள் களைப்படைந்து, வறட்சி அடைந்து, கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. உடல் அசைவின்றி, ஒரே இடத்தில் இருப்பதால் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தண்டுவட பாதிப்பு, கழுத்து வலி, மன நோய், பசி இன்மை, மலச்சிக்கல், ஆண்மைக் குறைவு போன்ற கணக்கில் அடங்கா நோய்களுக்கு வழி வகுக்கிறது என்றும் மருத்துவ ஆய்வு கூறுகிறது.

ரயில் அருகில் வருவது கூட தெரியாமல், ஹெட்செட்டில் தன்னை மறந்து பாட்டு கேட்டவாறு சென்று, எத்தனை மாணவ, மாணவியர் ரயில் மோதி பலியாகி உள்ளனர். இவையெல்லாம், ஜீரணிக்க முடியாத பெரும் சோகம்.

இந்த இயந்திர வாழ்வில் மொபைல் மற்றும் இணைய பயன்பாடு முக்கியமானது இல்லை என, சொல்லவில்லை. இச்சேவைகளை ஆக்கப்பூர்வமான வழியில், சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம்.

அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அண்ணன், சகோதரி, மனைவி, மக்களுடன் கூடி மகிழாமல், ஒரு கை அளவே உள்ள உயிரற்ற ஜடப் பொருளின் மேல் ஏன் இவ்வளவு பாசம், பைத்தியம்?

நம் மூதாதையர் தாத்தா, பாட்டி கதைகள் கேட்டுத் தானே நல்லொழுக்கமுடன் வளர்ந்தனர். அப்போது, பாசமும், நேசமும் நிரம்ப இருந்தது. ஆனால், இப்போது இதுபோன்ற ஜடப் பொருட்களின் மீது, நாம் பாசம் காட்டுவதால், பாசத்தையும், நேசத்தையும் மறந்து விட்டோம்.

மொபைல் மற்றும் இணையத்தை அளவுடன் பயன்படுத்தி, அதில் பெரும் பகுதி நேரத்தை தொலைக்காமல், நம் உறவுகளோடு கூடி மகிழ்வோம்.

இ-மெயில்: isaipriyann@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

mrsethuraman - Bangalore,இந்தியா
19-ஆக-201615:46:00 IST Report Abuse
mrsethuraman  பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வாரத்திற்கு 1 மணி நேரம் கட்டாய லைப்ரரி வகுப்புகளை அமுல் படுத்தினால் மாணவர்களை ஓரளவு இவைகளிலிருந்து திசை திருப்பலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X