'வரும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி இருக்காது' என, கூறி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 'காங்கிரசார், அதற்கான மாற்று ஏற்பாடுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்' என்றும் கூற துவங்கி உள்ளார்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 41 இடங்களில் தமிழக காங்கிரஸ் போட்டியிட்டு, எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், தமிழக காங்கிரஸ் சார்பில், மாவட்டங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அந்த கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசார் எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து, கூட்டங்களில் நிறைய பேசும் அவர், 'உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வோடு கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பவில்லை; அதனால், மாற்று ஏற்பாடுகளுக்கு தயாராக வேண்டும்' என, கூறி வருகிறார்.
இது குறித்து, தமிழக காங்., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அரசியல் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர் சிதம்பரம். அவருக்கு, அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் அத்துப்படியாக தெரியும். அதை வைத்து தான், அவர், 'வரும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வோடு கூட்டணி இருக்காது' என, தெரிவிக்கிறார்.
அதனால், அவர் தரப்பில் இருந்து மாற்று ஏற்பாடுகளும் துவங்கி உள்ளன. ஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், 'மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்' என, பேசி வருகிறார். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் தயாராகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -