தன் பிறந்த நாளையொட்டி, கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கவும், உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்து கேட்கவும், விஜய காந்த் முடிவு செய்து உள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு வரும், 25ம் தேதி பிறந்த நாள். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், பொதுமக்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் நலத் திட்ட உதவிகள் வழங்குவது விஜயகாந்தின் வழக்கம். இதற்கான செலவுகளை, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் ஏற்றுக் கொள்வர்.
தேர்தல் தோல்வியை அடுத்து, கட்சியினர் மாற்று கட்சிகளுக்கு செல்வதால், கட்சி கரைந்து வருகிறது. மாவட்ட செயலர்கள் பலரும் கூட, கட்சி மாறி விட்டனர். இதனால், தன் தீவிர விசுவாசிகளை மாவட்ட செயலர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் விஜயகாந்த் நியமித்து உள்ளார்.
ஆனால், அவர்களிடம் கட்சியை வழிநடத்தும் அளவுக்கு பணம் இல்லை. சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதால், நிறைய பணத்தையும் இழந்தனர். தற்போது, பணம் இல்லாமல் தவிக்கின்றனர். அதனால், கட்சியினர் பலரும் கட்சி செயல்பாடுகளில் ஆர்வமில்லாமல்
உள்ளனர்.
கட்சி முன் போல, எழுச்சியாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காக, அவர்களுக்கு மேற்கொண்டு சிரமம் அளிக்க விஜயகாந்த் விரும்பவில்லை. இதனால், சொந்த செலவில் பிறந்த நாள் கொண்டாட, விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு, அன்றைய தினம்மட்டன் பிரியாணி விருந்தளிக்க விஜயகாந்த், ஏற்பாடு
செய்துள்ளார். கிட்டதட்ட, ௧,௦௦௦ பேருக்கு அன்றைய தினம் விருந்தளிப்பதோடு, அவர்களிடம் உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாடு குறித்து கருத்து கேட்கவும், விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
- -நமது சிறப்பு நிருபர் --