உயிர் உருகும் சொந்தம் | Dinamalar

உயிர் உருகும் சொந்தம்

Added : ஆக 16, 2016 | கருத்துகள் (1)
Advertisement
உயிர் உருகும் சொந்தம்

முகம் பார்த்துப் பேசுபவர்களை விட, சிரிப்பவர்களை விட இன்று அலைபேசியை பார்த்துப் பேசுபவர்களும் சிரிப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு உறவுகளை வரவேற்கக் கற்றுத் தருகிறார்களோ இல்லையோ, டாடா காட்டக் கற்றுக் கொடுக்கிறார்கள்!2050ல் தொலைக்காட்சி ஒன்றில் விநாடி - வினா நிகழ்ச்சி. பள்ளிப் பிள்ளைகள் பங்கேற்கின்றனர். இந்தப் பிள்ளைகளெல்லாம் யார் தெரியுமா? இன்று வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளைகளாக வளர்ந்து, தாங்களும் ஒற்றைப் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கிறார்களே, அந்தப் பிள்ளைகள் வருங்காலத்தில் பெற்றெடுக்கும் ஒற்றைப் பிள்ளைகள்!
முதல் சுற்று ஆரம்பிக்கிறது. : பலுானைக் கண்டு பிடித்தது யார்? மாண்ட் கோல்பர்! டைனமோ - மைக்கேல் பாரடே! டைனமேட் -- ஆல்பர்ட் நோபல்! கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பதில்கள் பறந்து வருகின்றன. வெரிகுட், வெரிகுட், பாராட்டுக்கள்!இரண்டாம் சுற்று ஆரம்பிக்கிறது. சித்தப்பா என்றால் யார்? பிள்ளைகளிடம் மவுனம்! ஒருவரை ஒருவர் புரியாமல் பார்க்கின்றனர். சித்தி? மாமா? மாமி? பிள்ளைகளிடம் நீண்ட மவுனம்! பாஸ்..பாஸ்.. பதில் தெரியாமல் அடுத்த அணிக்குக் கடத்தி விடுகின்றனர். இதுதான் இனிவரும் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் நடக்கப் போகிறது.உறவுகளற்ற சமூகம் உறவுப் பெயர்களைச் சொல்லி அழைப்பதற்கு நேரடி உறவுகளற்ற ஒரு தலைமுறை வரப்போகிறது. இப்போது உறவுகள் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்த தலைமுறைக்கு உறவுப் பெயர்களின் அர்த்தம் கூடத் தெரியப் போவதில்லை!மனிதனின் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கைத் தீர்மானங்களும், வருங்காலம் குறித்த திட்டமிடலும் ஒற்றைப் பிள்ளைக் கலாசாரத்தை வளர்த்து வருகிறது. அழைத்து மகிழ்வதற்கும் உறவாடிக் களிப்பதற்கும் உறவுகளற்ற ஒரு சமூகம் உருவாகி வருகிறது.இன்று நாம் உறவினர் அல்லது நண்பர்களின் இல்லங்களுக்குச் சென்றால் சிறார்கள் முதல் வளர்ந்த பிள்ளைகள் வரை யாரையும் பார்க்க முடிவதில்லை. “பிள்ளைகள் எங்கே?” என்று கேட்டால், அறைக்குள் முடங்கிக் கிடப்பவர்களை பெற்றோர் அழைக்க, ஒரு விநாடி தலைகாட்டிவிட்டு காணாமல் போய் விடுகின்றனர்.அவர்களுக்கு அங்கே படிப்பு உலகமோ, ஆன்ட்ராய்டு அலைபேசி உலகமோ இருக்கிறது. அந்த உலகத்தில் ஆழ்ந்து தனித் தீவுகளாக மாறிவருகின்றனர்.ஒருகாலம் இருந்தது. வீட்டு வாசலுக்கு விருந்தினர் வந்து விட்டால், இன்னார் வருகிறார்கள் என்று மகிழ்ச்சியோடு வீட்டில் முதலில் அறிவிப்பவர்கள் பிள்ளைகளாக இருந்தனர். ஆனால் இன்று, இவர் நமக்கு இன்ன உறவு என்று அறிமுகப்படுத்தினால் அவர்கள் ஒரு புன்னகையோடு கடந்து சென்று விடுகின்றனர். அந்த ஒற்றைப் புன்னகையில் ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.நல்லது கெட்டதில் பங்கேற்றல் இதற்கெல்லாம் என்ன காரணம்? இன்று உறவுகள். நண்பர்கள் குடும்பங்களில் நடைபெறும் நல்லது கெட்டது எதற்கும் நாம் பிள்ளைகளை அழைத்துச் செல்வதில்லை. அழைத்துச் சென்றால்தானே அறிமுகங்கள் கிடைக்கும்.“பிள்ளைகளை ஏன் அழைத்து வரவில்லை?” என்று கேட்டால் படிப்பு இருக்கிறது, பரீட்சை இருக்கிறது என்ற பதில்கள் தான் வந்து விழுகின்றன.பிள்ளைகளை நல்லது கெட்டதுக்கு அழைத்துச் சென்றால்தானே அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியவரும்.திருமணம் போன்ற விசேஷங்களுக்கு அழைத்துச் செல்லும் போது, அவர்களுக்கு உறவுகளின் அறிமுகமும் நெருக்கமும் கிடைக்கும். அவர்கள் வயதில் புதிய நட்பைப் பெறுவார்கள். மேலும் அங்கு நடக்கும் நிகழ்வு முறைகளை அறிந்து கொள்வார்கள். அங்கு நிலவும் மகிழ்வுகளை, உறவாடல்களை உள்வாங்குவார்கள்.இறப்பு வீடுகளுக்கு அழைத்துச் செல்லும்போது, அங்கு நடைபெறும் நிகழ்வு முறைகளோடு கவலைகளையும் அழுகைகளையும் உள்வாங்குவார்கள்.பாரம்பரியப் பதிவாளர்கள் உறவுகளையும், குடும்பத்தின் பெருமைகளையும், ஊர் உறவின் பாரம்பரிய சிறப்புகளையும், வாழ்வின் வளமான அனுபவங்களையும் வளரும் தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பவர்கள் குடும்பங்களில் உள்ள முதியோர் தான். ஆனால் அவர்களோடு நேரம் செலவிடுவதற்கும் உறவாடுவதற்கும் இன்றைய வளரும் தலைமுறைக்கு காலமும் இல்லை, மனசும் இல்லை. பெற்றோர்களும் அதற்கான முக்கியத்துவத்தைத் தருவதில்லை. பேரக் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுகின்ற சுந்தரப் பொழுதுகளை எல்லாம் 'டிவி' உலகமோ, ஆன்ட்ராய்டு உலகமோ, அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற ஆர்வ உலகமோ திருடிக் கொள்கிறது.பெரும்பாலான வளரும் பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டிகளோடு ஒன்றாக வாழும் வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. வெளியூர், வெளிநாடு சார்ந்த சம்பாத்தியத்திற்கான வாழ்க்கை, வளரும் தலைமுறைக்கும் முதியோர்களுக்கும் எத்தனை பேரிழப்பைத் தந்து கொண்டிருக்கிறது?வீடுகளில் முதியோர் இருந்தால், அவர்களின் மதிப்பைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். அவர்களோடு நேரம் செலவிட பிள்ளைகளை அனுமதியுங்கள். அந்த நெருக்கம் பிள்ளைகளுக்கு உண்மையான அன்பையும் பாசத்தையும் உணர்த்தும். அனுபவங்களைக் கற்றுத்தரும்.கதை சொல்லிகள் தாத்தா பாட்டிகள் சிறந்த கதை சொல்லிகள் ஆவர். அவர்கள் கைபிடித்து அழைத்துச் செல்லும் கதை உலகத்தில் குழந்தைகள் சஞ்சரிக்கும் போது, மகிழ்ச்சிக்கும் கற்பனைக்கும் ஊடாக நல்ல வாழ்வியல் விழுமியங்களை அவர்கள் பெறுவார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிக்கால கட்டத்தில் பேரன் பேத்திகளின் உறவாடல், முதியோர்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும் மருந்தாக அமையும்.“உலகில் எது அழகானது என்று தெரியாத காரணத்தினால்தான் பலர் ஏழைகளாக இருக்கிறார்கள்” என்று கவிஞர் அல்லாமா இக்பால் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் குறிப்பிடுவது காசுபணம் இல்லாத ஏழைகளை அல்ல; உறவுகள் இருந்தும் அதைக் கொண்டாடி மகிழாதவர்களை.குழந்தைப் பருவத்திற்கு ஓர் அழகு இருப்பது போல் முதுமைக்கும் அழகு உண்டு. முதியவர்களோடு உறவாடி, அவர்களுக்குப் பணிவிடை செய்து ரசிப்பவர்களே அந்த அழகின் அருமையை உணர முடியும்.விடுமுறைகளில் சந்திப்பு வெளியூர், வெளிநாடுகளில் பணி நிமித்தமாக குடும்பத்துடன் வாழ்பவர்கள் விடுமுறைக் காலங்களில் ஊருக்குச் சென்றால், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் சென்று பார்க்க வேண்டும். குறிப்பாக வயதானவர்களையும் நோய்வாய்ப்பட்டோரையும் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டும். போகும் போது பிள்ளைகளையும் அழைத்துச் செல்ல வேண்டும்.உடல் நலிவு, முடியாமை, தனிமை என முடங்கிக் கிடக்கும் முதியோர்களுக்கு நமது வருகை குதுாகலத்தைத் தரும். இயலாமையின் விளிம்பில் நிற்கும் அவர்களுக்கு, நமக்கும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்ற தெம்பைத் தரும். இப்படி பிள்ளைகளோடுசென்று முதுமையை மகிழ்ச்சிப்படுத்திப் பார்ப்பது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிக உயர்ந்த செயலாகக் கருதுங்கள்.- முனைவர்மு.அப்துல் சமதுஉத்தமபாளையம்93642 66001வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RENGARAJAN VARADHARAJAN - chennai,இந்தியா
23-ஆக-201614:15:29 IST Report Abuse
RENGARAJAN VARADHARAJAN அருமையான நிதர்சனமான கட்டுரை வாழ்த்துக்கள் அப்துல் சமது அவர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X