ரெய்டு போலீசுக்கு பெய்டு போலீஸ் வெடி!| Dinamalar

ரெய்டு போலீசுக்கு 'பெய்டு போலீஸ்' வெடி!

Added : ஆக 16, 2016
Share
தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணியில் சித்ராவும், மித்ராவும் சங்கமித்திருந்தனர். பேரணி, செஞ்சிலுவை சங்க கட்டடத்தை சுற்றி அரசு கலைக் கல்லூரி ரோட்டில் நுழைந்தது.''கேள்விபட்டியாக்கா... இந்தவாட்டி டீச்சர்ஸ் பதவி உயர்வு, பொது மாறுதல் கவுன்சிலிங் நியாயமா நடக்குதாம். காலியிடங்களை கரெக்டா காண்பிச்சிருக்காங்கன்னு டீச்சர்ஸ் எல்லாம் படு ேஹப்பியாம்,''
ரெய்டு போலீசுக்கு 'பெய்டு போலீஸ்' வெடி!

தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணியில் சித்ராவும், மித்ராவும் சங்கமித்திருந்தனர். பேரணி, செஞ்சிலுவை சங்க கட்டடத்தை சுற்றி அரசு கலைக் கல்லூரி ரோட்டில் நுழைந்தது.
''கேள்விபட்டியாக்கா... இந்தவாட்டி டீச்சர்ஸ் பதவி உயர்வு, பொது மாறுதல் கவுன்சிலிங் நியாயமா நடக்குதாம். காலியிடங்களை கரெக்டா காண்பிச்சிருக்காங்கன்னு டீச்சர்ஸ் எல்லாம் படு ேஹப்பியாம்,'' என்றாள் மித்ரா.
''நானும் கேள்விப்பட்டேன் மித்து. ஆனா, டிரான்ஸ்பருக்கு மினிஸ்டர்சை பிடிச்சு லட்சக்கணக்குல லஞ்சம் குடுத்த டீச்சர்ஸ் நிலைமைதான் பரிதாபம். அவங்க 'எய்ம்' பண்ணியிருந்த காலி இடத்தையெல்லாம், 'ஓப்பனா' பட்டியல் போட்டுட்டாராம்,'' என்றாள் சித்ரா.
''கரெக்ட், இதுக்கு காரணம் அந்த கல்வி அதிகாரிதானாம். இணை இயக்குனரா பதவி உயர்வு கிடைக்கப்போற நேரத்துல எதுக்கு வம்புன்னு, இந்த நல்ல காரியத்தை செஞ்சிருக்காரு. சங்கத்துக்காரங்க எல்லாம் மகிழ்ச்சியாம்,'' என்று என்றாள் மித்ரா.
''முருகா... உன்னருள் இருந்தால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்,'' என்று அர்த்த புஷ்டியுடன் சிரித்தாள் சித்ரா.
பேரணி அரசு மருத்துவமனையின், இடது புற வழியாக சென்று கொண்டிருந்தது.
''மித்து, நம்ம ஜி.எச்.,ல, போன வாரம் லேடி டாக்டர் ஒருத்தங்க திடீர்னு சொல்லாம கொள்ளாம, ஒரு நாள் டூட்டிக்கு வரலையாம்; லீவும் அப்ளை பண்ணலையாம். இதனால அவங்க பார்த்துட்டிருந்த ஒரு நோயாளி, சரியான சிகிச்சை கிடைக்காம உயிர விட்டுட்டாராம்,'' என்றாள் சித்ரா.
''ம்ம்... அப்புறம்?''- கேட்டாள் மித்ரா.
''பிரச்னை பெருசானது தெரிஞ்சதும், பேஷன்டோட மெடிக்கல் ரிப்போர்ட்டை மாத்திட்டாங்களாம். கூட டிரீட்மென்ட் குடுத்த சீனியர் டாக்டர் ஒருத்தர் கேட்டதற்கு, கண்டமேனிக்கு அவர திட்டியிருக்காங்க. மேட்டர் டீன் வரைக்கும் போனதால, இப்ப அதப்பத்தி விசாரிக்க, தனி கமிட்டி போட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''மனசாட்சி இல்லாம நடந்துக்கிட்ட அவங்க யாருக்கா?'' ஆவலை அடக்க முடியாமல் கேட்டாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''நீயும் டாக்டர் ஆயிரேன்; உன் பேருக்கும் அதற்கு யோகமிருக்கு,'' எனக்கூறி மேட்டருக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சித்ரா.
''சரி, சரி புரிஞ்சுது... அதவுடு. அதே ஜி.எச்.சுல கிணத்தையே, காணோம்ங்கற ரேஞ்சுக்கு கொள்ளை நடக்குதுக்கா,'' என்றாள் மித்ரா.
''ம்ம்...சொல்லு,'' என்றாள் சித்ரா.
''குளத்தேரியில இருந்து மருத்துவக் கல்லூரிக்கு, தண்ணீர் எடுத்திட்டிருந்த பம்ப்பிங் ஸ்டேஷன்ல இருந்து, தண்ணி எடுக்கறத நிறுத்தி 10 வருஷமாச்சு. ஆனா, போன மாசம் வரைக்கும், அங்க வேலைல இருக்கறதா சொல்லி வாட்ச்மேனுக்கு சம்பளம் குடுத்துருக்காங்க,'' என்றாள்.
''அப்ப பத்து வருஷமா அந்த காசு யாருக்கு போச்சு?'' என்று கேட்டாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''அது மட்டுமில்லாம... மெடிக்கல் காலேஜ் 'ஆர்ச்' சுத்தப்படுத்த மட்டும், 1.75 லட்சம் ரூபா மதிப்புல 'கருத்துரு'ன்னு, பல வழிகள்ல கவர்மென்ட் பணத்தை சுருட்டறாங்களாம்,'' என்றாள்.
இதற்குள் பேரணி திருச்சி ரோட்டில் திரும்பியிருந்தது.
''ஹெல்மெட் போடணும், வண்டி ஓட்டும்போது போன் பேசக்கூடாதுன்னெல்லாம், போலீஸ்காரங்க விழிப்புணர்வு பேரணி எல்லாம் நடத்துனாங்க. ஆனா, சீருடையோட பைக் ஓட்டுற போலீஸ்காரங்க சிலபேரு, 'ஹெல்மெட்' போடறதில்லை,'' என்று அடுத்த மேட்டருக்குள் புகுந்தாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''உண்மைதான்க்கா. இவங்களுக்கு யாரு பைன் போடறதாம்,'' என கேள்வி எழுப்பினாள்.
''போலீஸ்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., டிரான்ஸ்பர் ஆகிப்போறதுக்கு முன்னால, 21 இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆர்டர்ல கையெழுத்து போட்டாரு...'' என, சித்ரா கூறி முடிப்பதற்குள், குறுக்கிட்ட மித்ரா, ''ஆனா, கரன்சி விளையாடுனதால, அந்த உத்தரவை நிறுத்தி வச்சிட்டாங்களாமே...,'' என்றாள்.
அதற்கு சித்ரா, ''சரியான முந்திரிக்கொட்டடி நீ. நான் சொல்ல வந்ததே வேற. அந்த டிரான்ஸ்பர் லிஸ்ட்டுல, சில நியாயமான டிரான்ஸ்பர்களும் இருக்காம். வாங்குறத வாங்கிட்டு காரியத்தை முடிச்சு கொடுக்கறதா, எட்டு பேர் கிட்ட கை நீட்டுனவரு, 'மகிழ்ச்சியா' இருக்காரு. இந்த விஷயம் டி.ஜி.பி., ஆபீஸ் வரைக்கும் போயிருக்கு. ஒரு வருஷத்துக்குள்ள டிரான்ஸ்பர் போடணும்னா, டி.ஜி.பி., ஆபீஸ்ல உத்தரவு வாங்கணுமாம். அந்த விதிகள பின்பற்றாம டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டதால இப்ப பிரச்னையாயிருக்கு,'' என்று முடித்தாள்.
அப்போது மித்ரா, 'ஸ்ஸ்ஸபா... வேகமா நடக்க முடியலை...டயர்டா இருக்கு. வர்றியாக்கா...பேசாம இந்த வாரம் மசாஜ் எடுத்துக்கலாம்,'' என கேட்டாள்.
''அய்யோ நான் வரலை...சிட்டி ஸ்பெஷல் போலீஸ் டீம் ரெய்டால, சில ஆயுர்வேத மசாஜ் சென்டர்களோட சுயரூபம் தெரிஞ்சிருச்சி,'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''இந்த நல்ல காரியத்தை செஞ்ச ஸ்பெஷல் டீம் மேல, அபாண்டமா பழி போட்டு முடக்க, அந்தந்த ஸ்டேஷன் போலீஸ்காரங்க முயற்சி பண்றாங்களாம். ஸ்பெஷல் டீம் பிடிச்சு கொடுத்த கேசுக்கு, எப்.ஐ.ஆர்., போடுற போலீஸ்காரங்க, கை நீட்டி காசு வாங்குன கையாலயே எப்.ஐ.ஆர்.,ல கையெழுத்து போட வச்சுட்டாங்களேன்னு கொதிச்சு போயிருக்காங்களாம்,'' என்றாள்.
''இது பரவாயில்லை. ஆனா, ஒரு கையெழுத்துக்காக டயாலிசிஸ் நோயாளிகள வாரக்கணக்குல காத்திருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அது எங்கே?''- கேட்டாள் மித்ரா.
''இ.எஸ்.ஐ., மருத்துவக் கழகத்துல, ஒரு ஆபிசரு வாரத்துக்கு ஒரு தடவைதான் கோவை வர்றாராம். சென்னையிலிருந்து இங்க மாத்தலாகி வந்த அவர், வாரத்துல ஒரு நாள் வந்து எல்லா கையெழுத்தையும் மொத்தமா போட்டுட்டு மறுபடியும் போயிர்றாராம். டயாலிசிஸ் பண்ற பேஷன்ட்ஸ்லாம், அவசரத்துக்கு இவரோட கையெழுத்து இல்லாம கஷ்டப்படுறாங்களாம்,''என்றாள் சித்ரா.
பேரணி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த சித்ராவும், மித்ராவும், சோபாவில் சோர்வுடன் அமர்ந்தனர். மித்ரா 'டிவி'யை 'ஆன்' செய்தாள். 'டிவி' யில் ஓடிக் கொண்டிருந்த திருவிளையாடல் பட காட்சியில், 'நக்கீரா நன்றாக பார்; என்னை உற்றுப்பார்' என, கர்ஜித்துக் கொண்டிருந்தார் நடிகர் திலகம்.
''தி.மு.க.,வுல முன்னாள் மாவட்ட செயலாளரோட கர்ஜனையெல்லாம் அடங்கிருச்சாமே...,'' என்று அரசியலுக்குள் புகுந்தாள் மித்ரா.
''ஆமா மித்து, தி.மு.க., ஆர்ப்பாட்டத்துல ஆதரவாளர்களோட அவர் வந்திருந்தாரு. பக்கத்துலேயே, பொறுப்புல இருக்கற நிர்வாகிக நின்னுட்டிருந்தாலும், யாரும் முகம் குடுத்து பேசலை. கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், தலைமை கழக பேச்சாளர்கள்னு ஏகப்பட்ட பேருக்கு பேச சான்ஸ் குடுத்தாங்க. இவருக்கு கடைசி வரைக்கும் மைக் கொடுக்கலை. அவிநாசி தொகுதியில போட்டி போட்ட ஆனந்தனும், கூட்டத்தோட கூட்டமா நின்னுட்டு போயிட்டாரு,'' என்றாள் சித்ரா.
''அரசியல்னாலே, ஏற்றமும் இறக்கமும் வழக்கம்தானே...ஆளுங்கட்சி வட்டார தகவல் ஏதுமில்லையா,'' என, கிளறினாள் மித்ரா.
அதற்கு சித்ரா ''ஆளுங்கட்சியில, இப்ப, 80 கவுன்சிலர் இருக்காங்க. ஒவ்வொருத்தர பத்தியும், உளவுத்துறையினர் தகவல் திரட்டி, அனுப்பியிருக்காங்க. 40ல இருந்து 50 பேர் வரை, ஜனங்ககிட்ட கெட்ட பேர் சம்பாதிச்சு வச்சிருக்காங்கன்னு, 'ரிப்போர்ட்' போயிருக்கு. அதனால, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்னு சொல்றாங்க. எந்தெந்த வார்டு, லேடீசுக்குன்னு தெரியாம, கட்சிக்காரங்க புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள்.
''அதெல்லாம் சரி, மாநகராட்சியில எதை கேட்டாலும், மேலிட சமாசாரம்னு சொல்லி தப்பிக்கிறாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
''ஆமா மித்து, மாநகராட்சியில மண்டல சுகாதார ஆய்வாளரா அஞ்சு பேர நியமிக்கணும். இதுக்கு, கவர்ன்மென்ட் உத்தரவு போட்டிருக்கு. ஆனா, யாரையும் நியமிக்காம இருக்கறதால, 'இன்சார்ஜ்' பணியிலயே பலபேரு காலத்தை ஓட்டுறாங்க. மாநகராட்சில வேலை பார்க்க தகுதியே இல்லாத ஒருத்தரு, மண்டல சுகாதார ஆய்வாளரா இருக்காருன்னா பார்த்துக்கோ. ரொம்ப நாளா இந்த பிரச்னை ஓடிட்டு இருக்கு. ஆக்ஷன் எடுக்க வேண்டிய அதிகாரிங்க, 'மேலிட சமாசாரம்'னு சொல்லி, தட்டிக்கழிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''மாநகராட்சியில எப்படியோ, போஸ்டல் டிபார்ட்மென்டுல இனி யாரும் எதையும் சொல்லி தட்டிக்கழிக்க முடியாது. புதுசா வந்துருக்கற மேற்கு மண்டல தபால் தலைவர் சாரதா சம்பத், வேலையில ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாம். தேவையில்லாத செலவுகளையெல்லாம் குறைத்து தபால்துறைக்கு செலவை மிச்சம் பிடிக்கறாராம். சமீபத்துல நடந்த ஒரு நிகழ்ச்சியில கூட, சாப்பாட்டு செலவை மிச்சப்படுத்த, வீட்டுல இருந்து தயிர் சாதம் கட்டிக்கிட்டு வந்துட்டாராம். டிபார்ட்மென்டுல அனாவசிய செலவு செய்றவங்கள, 'கடி' 'கடி' ன்னு கடிக்கிறாராம்,'' என்றாள்.
உடனே சித்ரா, ''போஸ்ட் ஆபீசுல அவரு 'கடிக்கிறார்'னா, கலெக்டர் ஆபீசுல கொசுக்கடி தாங்க முடியலையாம். அலுவலக வளாகத்தை சுத்தமா வைக்க ஆக்ஷன் எடுக்க வேண்டிய கலெக்டர், டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டிருக்கற ரத்தினபுரி, மதுக்கரை ஏரியாக்கள்ல ஆய்வு நடத்தி அட்வைஸ் பண்றாராம். இதை எங்க போயி சொல்ல,'' என, புலம்பியபடியே ஷூவை கழற்றி விட்டு உள்ளே சென்றாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X