கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, சித்ராவும், மித்ராவும் வெளியே வந்தனர். ""உன் ராசிக்கு, குருப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கு,'' என்று, சித்ரா கேட்டாள்.
""பரிகாரம் செஞ்சுட்டா, அமோகமாக இருக்கும்னு போட்டிருக்கு. பரிகாரம்னு சொன்னதும் நியாபகத்துக்கு வருது; திருப்பூரிலே, பரிகாரம் செய்யறதா சொல்லி, பணம் பறிக்கும் கும்பலோட அட்டகாசம் அதிகமாயிட்டே வருது,'' என்றாள் மித்ரா.
""அது என்ன விவகாரம்,'' என, ஆச்சரியத்தோடு கேட்டாள், சித்ரா.
""ரோட்டோர நடைமேடையே இவங்க இருப்பிடம். ஜோதிடம் பார்க்கிறேன்னு சொல்லி, கிளி ஜோதிடம், கைரேகை, ஜாதகமுன்னு, பல வகையில் ஜோதிடம் கூறும் இவங்க, வாடிக்கையாளர்களிடம் இல்லாதது, பொல்லாததைக் கூறி, பீதியை கிளப்புறாங்க. பரிகாரம் செய்யறதா சொல்லி, ஆயிரக்கணக்கில பணம்
கறக்கறாங்க,'' என்று விளக்கினாள் மித்ரா.
""அடப்பாவமே. இப்படியும் மோசடி செய்யறாங்களா?'' என்று, சித்ரா ஆச்சரியப்பட்டாள்.
""இதுக்குன்னு, ஒரு கும்பலே செயல்படுது சித்ரா. வெளியூரில் இருந்து வரும் இந்த கும்பல், மக்கள் நடமாட்டம் இருக்கிற ஏரியாவில, இடம் பிடிச்சு உட்கார்ந்து, "தொழிலில்' இறங்கிடுறாங்க. தினமும் ஒரு நபருக்கு ரெண்டு பேர் கிடைச்சாலே போதும்; நல்லா காசு பார்த்திடறாங்க,'' என்று, மித்ரா ஆதங்கப்பட்டாள்.
""ஏமார்றவங்க இருக்கற வரைக்கும், ஏமாத்தறவங்களும் இருப்பாங்க,'' என்று, சித்ரா சலித்து கொண்டாள்.
""போன வாரம் பலன் சொல்லி ஒரு பொண்ணுகிட்ட ரெண்டாயிரத்தை, ஒரு ஜோதிடர் வாங்கிட்டாரு. அவர் கணவருக்கு இது தெரிஞ்சு, பணம் கேட்டு, ஜோதிடர்கிட்ட தகராறு செஞ்சிருக்காங்க. தகவல் தெரிஞ்ச குரூப்பை சேர்ந்த மத்த ஆளுங்க, 500 ரூபாய் "பிடித்தம்' செஞ்சுட்டு, அந்த பெண் கிட்டே பணத்தை கொடுத்து, பிரச்னை வராம சமாளிச்சிட்டாங்களாம்,'' என, மித்ரா சொல்லி முடித்தாள்.
""அரசியல் விஷயம் எதுவும் இருக்கா,'' என ஆவலுடன் சித்ரா கேட்டாள்.
""இல்லாமலா? அவிநாசி எம்.எல்.ஏ.,வா இருக்கிற, சபாநாயகர் தனபால், தனது தொகுதிக்கு ஏதாவது செஞ்சாகணுமுன்னு, ஆர்வமா இருக்காறாம். அவிநாசியில் அரசு கல்லூரி துவங்கினா, காலத்துக்கும் பேர் இருக்கும்னு சிலர், யோசனை சொல்ல, அவரும் அதை ஆமோதிச்சிருக்கார்; கல்லூரி அமைக்க, இடம் இருக்கான்னு கேட்டிருக்கார். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை, அதிகாரிங்க, கைகாட்டியிருக்காங்களாம். இப்ப, அந்த இட விவரங்களை, அதிகாரிகள் சேகரிச்சுட்டு வர்றாங்க,'' என்றாள் மித்ரா.
""அப்படியா... அவிநாசிக்கு அரசு கல்லூரி யோகம் அடிச்சுருக்குன்னு சொல்லுங்க,'' என்றாள் சித்ரா.
""கல்லூரி வர்றது இருக்கட்டும்; அப்படீன்னா, பள்ளி எப்படி தொடர்ந்து செயல்படும்னு ஒரு தரப்பு கேட்கறாங்க. பள்ளி இடப் பிரச்னையை கொண்டு, அரசியல் செய்யவும், ஒரு குரூப் தயாராகி வருது,'' என, மித்ரா சொன்னாள்.
""வேற என்ன விசேஷம் இருக்கு,'' என்று சித்ரா கேட்க.
""சகாயம் வந்துட்டு போனதும், வி.ஏ.ஓ.,க்கள் கிராமத்திலேயே தங்கணும்னு அரசு உத்தரவு போட்டிருக்கு பாத்தியா?''என்று, அடுத்த விஷயத்துக்கு மித்ரா தாவினார். ""அவர் வர்றதுக்கும், உத்தரவுக்கும் என்ன சம்மந்தம்?'' என்று சித்ரா கேட்டாள்.
""திருப்பூர் நிகழ்ச்சியில் பேசின சகாயம், "கலெக்டரா இருந்தப்ப, வி.ஏ.ஓ.,க்கள் அந்தந்த கிராமத்தில் தங்கனும்னு, சட்ட விதிமுறையை அமலாக்கினேன். அது பிடிக்காம, சங்கங்கள் போராட்டம் நடத்தி, எனக்கு "டிரான்ஸ்பர்' வாங்கி தந்தாங்க'ன்னு பேசினாரு. இது, "தினமலர்' பக்க வாத்தியம் பகுதியிலே வந்திருந்தது. அடுத்த ஒரு வாரத்திலே, "வி.ஏ.ஓ.,கள் அந்தந்த கிராமத்திலேயே கட்டாயமா தங்க வேண்டும்னு' அரசு உத்தரவு போட்டிருக்கு,'' என்ற மித்ராவின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.
""வக்கீலுக்கும், பாலத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டு, மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செஞ்சது தெரியுமா?'' என்று, சித்ரா கேட்டாள். ""அடடே, புது விஷயமா இருக்கே,'' என, மித்ரா பரபரத்தாள்.
""திருப்பூர் காமராஜ் ரோட்டில் பாலம் கட்டறாங்க. அதை, நீளமா கட்டறதுக்காக தயாரிச்ச, அதே மதிப்பீட்ல, நீளம் குறைவா, இப்ப பாலம் கட்றாங்களாம். அதை விசாரிக்கணும்னு, அவிநாசி வக்கீல் ஒருத்தர், சென்னை ஐகோர்ட்ல மனு போட்டார். வக்கீல் போராட்டம் நடக்கும் நேரத்தில் இதை விசாரித்த கோர்ட், "பாலம் கட்றதில் குறை சொல்ல, நீங்க இன்ஜினியரான்னு கேட்டு, மனுவை தள்ளுபடி செஞ்சுருச்சாம். பாவம், அந்த வக்கீல் அப்செட் ஆயிட்டாராம். திருப்பூர் யூனியன் கவுன்சில் மீட்டிங் பத்தி ஏதோ சொல்ல வந்தையே, என்ன மித்ரா அது?'' என்று சித்ரா கேட்டாள்.
""யூனியன் கவுன்சில் மீட்டிங்ல, கவுன்சிலருங்க கிட்ட கொடுத்த தீர்மான நகலில், 17 தீர்மானம் மட்டும்தான் இருந்துச்சாம்.
ஆனா, 23 தீர்மானம் நிறைவேற்றியிருக்காங்க. இது சம்பந்தமா, ஒரு கவுன்சிலர் கேட்டும், "கூட்டம் முடிஞ்சிடுச்சுன்னு'னு சொல்லி, தலைவர் போயிட்டாராம். கவுன்சிலர்களுக்கே தெரியாம, இப்படி தீர்மானம் நிறைவேத்தினா செல்லுபடியாகுமா? "மினிட்' நோட்டிலே கவுன் சிலர்கிட்ட கையெழுத்தே வாங்கல; இது சம்பந்தமா, கலெக்டர் கிட்ட மனு கொடுக்க, கவுன்சிலருங்க முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' என்று கூறி முடித்தாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE