நாமக்கல்: ''மணல் இரண்டாம் விற்பனை ரத்து, ஒரே விலையில் மணல் விற்பனை என்ற கோரிக்கைகளை ஏற்காவிட்டால், மூன்று கட்ட போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராசாமணி கூறினார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. தலைவர் செல்லராசாமணி பேசியதாவது: கடந்த, ஐந்து ஆண்டுகளாக, மாவட்டம் தோறும் மணல் சேமிப்பு கிடங்கு அமைத்து, மணல் இரண்டாம் விற்பனை செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த விலையை காட்டிலும், மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்வதால், பொதுமக்களும், லாரி உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். மணல் இரண்டாம் விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்து, குறைந்த விலையில் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளுக்கு, காரணமாக உள்ள, தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசே மணல் ஏற்றும் பணியில் ஈடுபட வேண்டும். கடந்த, 2003ல் அரசு ஆணைப்படி, சிறிய லாரிகளுக்கு, இரண்டு யூனிட், 1,000 ரூபாய், பெரிய லாரிகளுக்கு (டாரஸ்), மூன்று யூனிட், 1,500 ரூபாய்க்கும் மணல் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி, பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்படும். நிறைவேற்றாத பட்சத்தில், முதல் கட்டமாக மணல் லாரிகளை, அந்தந்த கலெக்டர் அலுவலகம் முன் நிறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக, சென்னையில் மிகப் பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள, மணல் இரண்டாம் விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.