வேலூர்: ''ராணுவ ரகசியங்கள் வெளியே கசிந்து விடாமல் காக்கப்படுகிறது,'' என, மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் ராமராவ் பாம்ரே கூறினார்.
மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் ராமராவ் பாம்ரே நேற்று வேலூர் வந்தார். காலை, 11 மணிக்கு, வேலூர், சிப்பாய் புரட்சியில் உயிர் இழந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பா.ஜ., அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில், ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி நடக்கிறது. இந்திய ராணுவத்துறையில் உள்ள ஆராய்ச்சி மையங்களில், 86 சதவீதம் ராணுவ தளவாடங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இதற்கு முன்பிருந்த, காங்., ஆட்சியில், ராணுவ தளவாடங்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு, இவை தயாரிக்கப்படுகிறது. அதேசமயம், ராணுவ ரகசியம் வெளியே கசிந்து விடாமல் காக்கப்படுகிறது. இந்திய சுதந்திரம் குறித்து, இன்றைய தலைமுறைகளுக்கு தெரியவில்லை. அவர்கள் அறிந்து கொள்ள, சுதந்திர போராட்டம் நடந்த, 72 இடங்களை, 72 மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். ஆய்வுக்கு பின், 72 இடங்கள் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இந்த இடங்கள் பிரபலப்படுத்தப்படும். வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி தான், இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டது. இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ., தேசிய துணைத் தலைவர் அவினாஷ் தாய், மாநில செயலாளர் ராகவன், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.