துப்பும் பழக்கம் தவிர்ப்போம்!| Dinamalar

துப்பும் பழக்கம் தவிர்ப்போம்!

Added : ஆக 22, 2016 | கருத்துகள் (8)
 துப்பும் பழக்கம் தவிர்ப்போம்!

'நாடு முழுவதும் சுற்றுப்புறத்தைத் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்பதில் பிரதமர் மோடி அதிக ஆர்வமாக இருக்கிறார். இந்த ஆர்வத்தின் முதல்படியாக 'துாய்மை இந்தியா' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. சுற்றுப்புறத் துாய்மை விஷயத்தில் இன்னும் இந்தியா விழிப்படையவில்லை என்பது நிதர்சனம். எனவே பொது இடங்களில் எச்சில் துப்பினால், தெருக்களில் சிறுநீர் கழித்தால், குப்பை கொட்டினால் அவற்றைக் குற்றமாகக் கருதி அபராதம் மற்றும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.எச்சில் என்பது எச்சம் அல்ல!
வாயில் சுரக்கும் உமிழ்நீர்தான் எச்சில். இது எச்சம் (கழிவுப் பொருள்) அல்ல; உணவு செரிமானமாகத் தேவைப்படுகிற அத்தியாவசியப் பொருள்; இது உணவைக் கரைக்கிறது. வாய்க்குள் நுழையும் பாக்டீரியாக்களை அழிக்கிறது; வாயை உலரவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதில் 'அமிலேஸ்' எனும் 'என்சைம்' இருக்கிறது. இது நாம் சாப்பிடும் உணவில் உள்ள மாவுச் சத்தை செரிக்க உதவுகிறது. இத்தனை பண்புகளைக் கொண்ட எச்சிலை வெளியில் துப்பி வீணாக்கக் கூடாது. விழுங்கிவிட வேண்டும்; இதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது.ஆனால் நடப்பது என்ன? தெருக்கள், பொதுக் கழிப்பறை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், ரயில் பெட்டி, ஆட்டோ நிறுத்தம், சந்தை, சினிமா தியேட்டர், கோயில்,
சுற்றுப்புறம் என்று திரும்பும் திசை எங்கும் மக்கள் எச்சிலைத் துப்பித் தீர்க்கிறார்கள். எச்சிலை மட்டுமா? வெற்றிலை, பான்பாரக், சளி போன்றவற்றையும் இடம் பொருள் பார்க்காமல் துப்பி, சுற்றுப்புறத்தை நோய்த் தொற்றுப்புறமாக மாற்றி விடுகின்றனர். வாகனங்களில் பயணம் செய்யும்போது பின்னால் யாராவது வருகிறார்களா என்று திரும்பிக் கூடப் பார்க்காமல், எச்சில் மழை பொழிபவர்களும் உண்டு. இந்த விஷயத்தில் படித்தவர், படிக்காதவர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.
நோய்கள் பரவும் ஆபத்து :புகைபிடிப்பவர், பான்பராக், வெற்றிலை போடுபவர்களுக்கு எச்சில் துப்பும் உணர்வு சற்று கூடுதலாகவே இருக்கும். இவர்கள் போன்று சுவாச நோயுள்ள பலருக்கும், சளியைத் துப்புவது தவிர்க்க முடியாத பழக்கமாகவே ஆகியிருக்கும். எச்சிலைத் துப்பும்போது, அதனுடன் வெளியேறும் கிருமிகள் மற்றவர்களின் மூச்சுக்காற்றில் கலந்து, அவர்களுக்கும் நோயைப் பரப்பும்.
எச்சில், சளி போன்றவை உணவின் மீதோ, பானங்களிலோ படும்போது அவற்றைச் சாப்பிடுபவர்களுக்கும் கிருமிகள் பரவி, நோயை ஏற்படுத்தும்.சாதாரண 'புளூ' காய்ச்சல் முதல் 'நிமோனியா', காசநோய், மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், 'சார்ஸ் மெர்ஸ்' வரை பல ஆபத்தான நோய்கள் நம்மைத் தாக்குவது இப்படித்தான். அதிலும் குறிப்பாக, குழந்தைகளை இந் நோய்கள் மிக விரைவில் தொற்றிக்கொள்ளும். இந்த மாதிரியான நோய் பரவல் மூலம் நம் நாட்டில் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர், காசநோய் வந்து உயிரிழக்கின்றனர். சென்ற ஆண்டில், பன்றிக் காய்ச்சல் பரவி, பலர் மரணத்தைத் தொட்டது நினைவிருக்கலாம்.
திறந்தவெளிக் கழிப்பறைகள் :நாட்டில் சுற்றுப்புறம் மாசு அடைவதற்கு, திறந்த வெளிகளில் மலம் கழிப்பதும் ஒரு முக்கிய காரணம். அதிலும் தெருக்களைக் கழிப்பிடங்களாக பயன்படுத்தும் போது, அந்த வழியாகச் செல்வோருக்கு அசுத்த வாடை பிடிக்காமல், காறித் துப்பத் தோன்றும். இதனால், அந்தத் தெரு இன்னும் கூடுதலாகவே அசுத்தமாகும்.இந்தியாவில் 60 கோடி பேர் வீட்டில் கழிப்பறை இல்லாமல், திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர். இந்தக் கழிவுகளில் ஈ, கொசு, பூச்சிகள் மொய்க்கும். இவை மனிதர்களையும், வீட்டில் மூடிவைக்காத உணவுகளையும் மொய்க்கின்றன. இந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை, அப்படியே சாக்கடை வாய்க்கால்களிலும், ஆறுகளிலும் கலக்கின்றன.
சில நேரங்களில் இது குடிநீரிலும் கலந்து வீட்டுக் குழாய்களில் வருகிறது. இப்படிப் பல வழிகளில் மக்களை அடைந்து 'டைபாய்டு', 'மலேரியா', மஞ்சள் காமாலை, 'காலரா', வயிற்றுப்போக்கு என தொற்றுநோய்களைப் பரப்புகின்றன. 'வீட்டுக்கு வீடு கழிப்பறை' திட்டத்தை முனைந்து செயல்படுத்தினால் மட்டுமே, மக்கள் தெருவோரங்களில் மலம், சிறுநீர் கழிப்பதைத் தடுக்க முடியும்.தொற்றுநோய்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் பொதுச்சுகாதாரக் குறைவு. 'தொழில் வளர்ச்சி' எனும் பெயரில் ரசாயனப் புகையால் காற்றை மாசுப் படுத்திவிட்டோம். மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால்தானே மக்களுக்குச் சளி பிடிக்கிறது. அந்தச் சளியைத் துப்ப வேண்டும் என்ற உணர்வும் ஏற்படுகிறது!
மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மட்டும் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு தொழிற்சாலைக் கழிவுகளால் நிலம், நீர், காற்று மாசடைவதைத் தடுத்துவிட்டால் மக்களுக்கு சளி பிடிப்பது குறையும். அப்போது சளியைத் துப்ப வேண்டிய அவசியமும் ஏற்படாது.புகைப்பதை மறப்போம் புகையிலை, 'பான்பராக்' போடும் பழக்கம் உள்ளவர்களுக்குதான் அவற்றைத் துப்பும் பழக்கமும் இருக்கிறது. எனவே புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான பிரசாரத்தை மத்திய, மாநில அரசுகள் இன்னும் வலுப்படுத்த வேண்டும். புகையிலை சார்ந்த பொருட்களுக்கு மக்கள் அஞ்சத்தக்க வகையில், வரியை உயர்த்த வேண்டும். கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து, 'பான்பராக்' விற்பனையைத் தடை செய்ய வேண்டும். இதுபோன்று சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் எல்லா வழிகளையும் அடைப்பதற்கான வழிமுறைகளை, ஆட்சியாளர்கள் முழு உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.
பண்புகளை வளர்ப்போம்!
துப்பும் பழக்கம் என்பது அநாகரிகம் என்பதையும், பொது இடங்களில் எச்சில் துப்புவோர் யாராக இருந்தாலும், மற்றவர்களின் பார்வையில் கண்ணியம் குறைந்தவர்களாகவே கருதப்படுவார்கள் என்பதையும், குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும்.தெருக்களில் நடந்து செல்லும்போது, காலணி அவசியம் அணிந்துகொள்ள வேண்டும். காலணியின் அடிப்புறத்தைக் கைகளால் தொடக்கூடாது. தரையில், தெருவில் விழுந்த தின்பண்டங்களை எடுத்துச் சாப்பிடக்கூடாது.
காய்கறிகள், பழங்களைக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சாப்பிட வேண்டும். தெருக்களில் விற்கப்படும் பாதுகாப்பில்லாத உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது. ஈ மொய்க்கும் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும், முகத்தைக் கைக்குட்டையால் மறைத்துக்கொள்வது நல்ல பழக்கம்.பொது இடங்களில் துப்பும் பழக்கத்தைத் தவிர்க்க சபதம் எடுப்போம்!தொற்றுநோய்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் பொதுச்சுகாதாரக் குறைவு. 'தொழில் வளர்ச்சி' எனும் பெயரில் ரசாயனப் புகையால் காற்றை மாசுப் படுத்திவிட்டோம். மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால்தானே மக்களுக்குச் சளி பிடிக்கிறது. அந்தச் சளியைத் துப்ப வேண்டும் என்ற உணர்வும் ஏற்படுகிறது!


- டாக்டர் கு.கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்gganesan95@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X