திண்டுக்கல்: திண்டுக்கல் பெண் உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்தவர், ஆசிரியை வேலைவாங்கி தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரை புதுார் இ.பி., காலனியை சேர்ந்தவர் சலாமியா பானு,28. இவர் மதுரை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு:மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் காதர்பாட்சா,32. இவர் அருப்புக்கோட்டை வங்கியில் பணியாற்றுவதாக கூறி என்னை திருமணம் செய்தார். கடந்த மேயில் திருமணம் நடந்தது. பின்பு என்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாய், 8 பவுன் நகை, ஏ.டி.எம்., கார்டுகளை எடுத்துச் சென்றார். ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். எட்டு திருமணங்கள்: எனது கணவருக்கு ஏற்கனவே சென்னையை சேர்ந்த நிர்மலாவுடன் திருமணமாகி 3 குழந்தைகள், திண்டுக்கல்லை சேர்ந்த ஜமுனாராணியை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் வத்தலக்குண்டு மகாலட்சுமி உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்தேன் என கூறியிருந்தார். அவர்மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
மோசடி வழக்கு:திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி அருகே வசிப்பவர் கார்த்திகாயினி,27. இவரது கணவர் மோகன்ராஜ்,30. இவர்கள் வீட்டருகே குடியிருப்பவர் மூலம் காதர்பாட்சா பழக்கமானார். அவர், கார்த்திகாயினிக்கு சிங்கப்பூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
ஆனால், பேசியபடி ஆசிரியை வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. தற்போது தலைமறைவாகி விட்டார். இது குறித்து கார்த்திகாயினி புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காவேரி வழக்குப்பதிவு செய்தார். தனிப்படை அமைத்து, காதர்பாட்சாவை தேடி வருகின்றனர்.