மூலதனம் முயற்சி மட்டுமே!| Dinamalar

மூலதனம் முயற்சி மட்டுமே!

Added : ஆக 23, 2016 | கருத்துகள் (5)
மூலதனம் முயற்சி மட்டுமே!

முயற்சியின்றி வாழ்க்கையை தொடங்குகிறவன் ஓட்டைப் படகில் பயணத்தை தொடங்குகின்றான். 'என் விதி அப்படி' என்று சொல்கிறவன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான விதிகளை அறியாதவன். என்னால் முடியாது என திண்ணையில் படுத்துத் துாங்குகிறவனுக்கு வாழ்க்கை என்பதே துக்கமாகத்தான் முடியும். மனித ஆற்றலை செயல்படுத்த போடப்படும் 'சுவிட்ச்' தான் 'முயற்சி'. ஆற்றல் மனிதனுக்கு வெளியில் இல்லை. அவனுக்கு உள்ளே தான் உள்ளது. தனக்குள் இருக்கும் அந்த ஆற்றலை அவனே தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.சோம்பேறிகள் எப்போதும் சுகபோகமாய் பேசுவார்கள். எதற்கும் சுலபத்தில் விளக்கம் சொல்லுவார்கள். எல்லாமே அவர்களுக்குத் தெரியும், ஒன்றைத் தவிர; அது தான் முயற்சி. பட்டுக்கோட்டை அழகாக பாடியுள்ளார், இரண்டு வரிகளில்.'சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக் கொள்வார்''திருவள்ளுவர் கூட, தெய்வத்தாலாகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'' - என்று பாடியுள்ளார். சிலர் அதிர்ஷ்டமில்லை என்று சர்வசாதாரணமாகச் சொல்லுவார்கள். சந்தர்ப்பங்களின் சேர்க்கை தான் அதிர்ஷ்டம். சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டியவர்கள் மெத்தனமாக இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்றால் என்ன அர்த்தம்.
விடா முயற்சியில் சாதனை : ஆங்கில எழுத்தாளர் தாமஸ் கார்லைன், பிரஞ்சுப் புரட்சி பற்றி நுால் எழுதி, கையெழுத்துப் பிரதியை அரசியல் சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஜான் ஸ்வேர்ட்மில்லிடம் படிக்க கொடுத்தார். சில தினங்கள் கழித்து அதை திரும்பப்பெற சென்ற போது, மில் சொன்ன பதில் அவரை பிரமை கொள்ள வைத்தது. மில்லின் வேலைக்காரி அதை ஏதோ பழைய காகிதம் என அடுப்பெரித்து விட்டாளாம். இரவு, பகல் பாராமல் அவர் உழைத்த உழைப்பு, எரிந்ததை நினைத்து சோர்ந்து விடவில்லை. அவர் லட்சியம் பிரஞ்சு புரட்சி பற்றி நுால் எழுதுவது. மறுபடியும் புத்தகத்தை எழுத துவங்கி விட்டார். இலக்கியத் தரம் வாய்ந்ததாக கருதப்படும் அந்த புத்தகம் அவர் இரண்டாவதாக எழுதிய புத்தகம்.சர் ஜசக் நியூட்டன் தன் பரிசோதனை குறிப்பினை தனது மேசை மீது வைத்துவிட்டு திரும்பி வருவதற்குள், அவரது செல்ல நாய் மேசை மீதிருந்த எரியும் மெழுகுவர்த்தியை தட்டிவிட்டதில் அவரது குறிப்புகள் அனைத்தும் எரிந்து போயின. மீண்டும் நினைவுபடுத்தி குறிப்புகளை எழுதினார். விடாமுயற்சிக்கு இதைவிட நல்ல உதாரணம் சொல்ல முடியாது.
நம்மால் முடியும் : சிலர் ஒரு விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்தால் இது நம்மால் முடியுமா? நமக்கு ஒத்துவராது என முன்னேற்றப் பாதைக்கு தடைக்கல்லாக பேசுவார்கள். பிரிஸ்டல் என்ற ஆராய்ச்சியாளர் கருத்துப்படி, வலிமையான நமது எண்ணங்கள் மற்றவர்களை பாதிக்கிறது.'முயன்றால் நடக்கும். முயலும் போது நடக்கும். முயற்சி நடத்தி வைக்கும்'. நம்மை நம்பி முயற்சியுடன் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைத்தால் வெற்றி பெறலாம். நடந்து போகையில் நிற்க நினைத்தால் உடல் நிற்கிறது. மனம் நிற்கிறதா? உடலும் மனமும் சேர்ந்து கஷ்டப்பட்டு முயலாமல், இஷ்டப்பட்டு முயன்றால் வாழ்க்கையில் முன்னேறலாம். இன்று தொழில் வளர்ச்சியில் முன்னேறி, உலக அரங்கில் வல்லரசுகளுடன் போட்டியிடும் ஜப்பான் சிறிய நாடு. வளமான பூமி இல்லை. எரிமலை, பூகம்பம், சூறைக்காற்று போன்ற எல்லா இயற்கை சீற்றத்திலும், அணுகுண்டு வீச்சினால் நிர்மூலமாகப் போன நாடு, இன்று முன்னேறியுள்ளது என்றால் காரணம் உழைப்பு, முயற்சி, நாட்டுப்பற்று.
என் விதி அப்படி : விதியைப் பற்றி விளக்கம் சொல்ல வந்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் 'சீட்டு விளையாட்டில் குறிப்பிட்ட சீட்டு விழுவதை விதி என்று வைத்தக் கொண்டால், விழுந்த சீட்டுக்களை வைத்துக் கொண்டு நீ எப்படி விளையாடி ஜெயிக்கிறாய் என்பது உன்னுடைய மதியைப் பொறுத்த விஷயம்' என்கிறார். வாழ்க்கையின் முன்னேற்றப்பாதையில் 100 பேர் பயணம் செய்கிறார்கள் என்றால் முதல் புறக்கணிப்பிலே 90 சதவீதம் பேர் நின்று விடுகிறார்கள். மீதம் உள்ள 10 பேர் மட்டுமே பயணத்தை தொடங்குகிறார்கள். 'மனிதர்கள் கடன்பட்டிருப்பது மூளைக்கன்று முயற்சிக்கே! கடவுள் வரங்களை விற்கவே செய்கிறார். முயற்சியே அவற்றின் விலை' என்கிறார் எடிசன். பலருடைய பாதையில் தடையாக இருக்கும் கல், பலமுற்றவருடைய பாதையில் படிக்கல்லாக மாறிவிடும்.
நெப்போலியன் கணக்கு : நெப்போலியன், பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் மிகவும் கடினமான கணக்கு ஒன்றைப் போட்டார். நெப்போலியன் வகுப்பறையில் 72 மணி நேரம், அந்த கணக்கை போட்டு முயன்று விடை கண்டுபிடித்தார். அவருடைய இந்த முயற்சி கணக்கு, இன்று வரை 'நெப்போலியன் கணக்கு' என வழங்கப்பட்டு வருகிறது. ஆங்கிலக் கவிஞர் வேட்ஸ்வொர்த் ஒரு பாடல் எழுதினார். அந்த பாடலில் குயிலின் சிறப்பியல்பை விளக்க, நல்ல அடைமொழி தேடினார். அவருக்கு கிடைக்கவில்லை. பல ஆண்டுகள் ஆயின. ஒரு அடைமொழி கிடைக்காமல் அந்த பாடல் முழுமை பெறவில்லை. பாதியிலே நின்றுவிட்டது. பின்னர் 43ம் ஆண்டில் அவருக்கு அடைமொழி கிடைத்தது. பாடலை எழுதி முடித்தார். 43 ஆண்டுகள் முயன்று வெற்றி.முயற்சித்தால் தான் முன்னேற்றம்
பாடப் பாடத்தான் ராகம்எழுத எழுதத்தான் எழுத்துபடிக்க படிக்கத்தான் படிப்புமுயற்சிக்க முயற்சிக்கத்தான் முன்னேற்றம்.
பூமியை முட்டிக் கொண்டு போட்ட விதை முளைக்க காரணம் விதையின் முயற்சி. எழுதிய எழுத்தில் பிழை இருக்கலாம். எழுதா எழுத்தில் ஏது பிழை? முயற்சியின்மை ஓர் எழுதா எழுத்து போலத்தான்.
புதிய மலர் - பழைய விதை!புதிய முயற்சி - பழைய நோக்கம்!மாண்டெக்ச்யூ என்பவர் தன் நுாலைப் பற்றி தன் நண்பரிடம், நீங்கள் சிலமணி நேரங்களில் படித்து முடித்து விடுவீர்கள். ஆனால் அதற்காக நான் எடுத்துக் கொண்ட முயற்சி எனது கறுப்பு முடியை வெளுப்படையச் செய்து விட்டது ' என்று கூறினார். 'நீ முயற்சி செய்து சாதித்தால் சாதனையாளர் இல்லையென்றால் வேதனையாளர்'. முயற்சி செய் வெற்றி உனக்கே! வெற்றி என்பது முயற்சியின் விளைவே!
- மு.சுலைகாபானுஆசிரியை, மதுரை.

sulaigabanu@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X