கஜானா காலி ஊழியர்கள் ஜாலி!

Added : ஆக 23, 2016
Share
Advertisement
கஜானா காலி ஊழியர்கள் ஜாலி!

''காலம் ரொம்ப கெட்டுப்போச்சுக்கா...'' என, நொந்து கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் மித்ரா.''காலம் கெட்டு ரொம்ப நாளாச்சு; உனக்கு இப்பத்தான் தெரியுமா?'' சோபாவில் உட்கார்ந்தபடி, பேப்பர் படித்துக் கொண்டிருந்த சித்ரா சிரித்தபடி கேட்டாள்.
''பின்னே... சிங்காநல்லுார் பக்கத்துல, கட்டின புருஷனையே கொல்ல, நாகப்பாம்பை வீட்டுக்குள்ள விட்டிருக்கா சம்சாரம். நான் அதை சொல்ல வந்தேன்,'' என்றவாறு எதிர் சோபாவில் அமர்ந்தாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''அதை விடு. நம்ம ஊரை பெரிய தொழில் நகரம்னு சொல்லிக்கிறோம். ஆனால், கிணத்துக்குள்ளாற விழுந்த, பிளஸ் 2 பையனோட 'பாடி'ய மீட்க, தூத்துக்குடி முத்துக்குழி வீரர்கள் வர வேண்டியதா போச்சு. இனியாவது, நம்ம தீயணைப்பு துறைக்கு தேவையான உபகரணங்களையும் பயிற்சிகளையும் அளிச்சா பரவாயில்லை,'' என்றாள்.
''அதே போல, நம்ம தேசிய கட்சிக்கும் எப்படி அரசியல் செய்றதுன்னு பயிற்சி கொடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும்,'' என்றாள் மித்ரா.
''விவரமா சொல்லு மித்து,'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''சொல்றேன்...தி.மு.க., ஆட்சியில இருந்தப்ப, அடிப்படை வசதி பிரச்னைகளுக்காக, அ.தி.மு.க.,காரங்க ஒவ்வொரு வார்டுலயும் போராட்டம் நடத்துனாங்க. அவங்கள போல நாமளும் போராட்டம் நடத்தி, மக்கள் மனசுல இடம் பிடிக்கணும்னு, பா.ஜ., காரங்க முடிவு பண்ணுனாங்க. ஆனா, அவங்க எதிர்பார்த்த அளவுக்கு கட்சியிலேயும், ஜனங்க கிட்டயும் 'ரெஸ்பான்ஸ்' இல்லையாம்,'' என்றாள்.
''அது சரிதான் மித்து. இவங்களுக்குத்தான் திராவிட கட்சிக்காரங்களப்போல, அரசியல் சாதுர்யம் பத்தாதே. ஆமா, இதை கேள்விப்பட்டியா... புது ஆர்.டி.ஓ., எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசறாராம். டிரைவிங் ஸ்கூல் உபயத்தோட, தன்னோட ரூம்ல 'ஸ்பிளிட் ஏசி' போட்டு குளுகுளுன்னு வச்சிருக்காராம்,'' என்றாள் சித்ரா.
''இப்பல்லாம் சூரிய 'உதயம்' சீக்கிரமே வந்துருதுல்ல...அதனாலதான் அவருக்கு 'ஓசி'ல 'ஏ.சி' தேவைப்படுது போல,'' என கமென்ட் அடித்தவாறு
சிரித்தாள் மித்ரா.
'டிவி'யில் சேனலை மாற்றிக் கொண்டிருந்த சித்ரா, ''பார்த்தியா, 'அப்பா' சினிமா 'கிளைமாக்ஸ்' மாதிரி ஆயிடுச்சு,'' என்றாள்.
அதற்கு மித்ரா, ''என்னாச்சு?'' என்று கேட்டாள்.
''ஆமா மித்து, வெங்கிட்டாபுரத்துல இருக்கிற மாநகராட்சி ஸ்கூல் ஒன்பதாம் கிளாஸ் பையன் பாபு, சாணிப்பவுடர் குடிச்சு உயிரை விட்ட விவகாரத்துல, இதுவரைக்கும் ஒருத்தர் மேலேயும் நடவடிக்கை எடுக்கலை,'' என, அங்கலாய்த்தாள்.
''ஏன்... என்னாச்சு? தற்கொலைக்கு தூண்டுனதா டீச்சர்ஸ் மேல கேஸ் பதிவு பண்ணுனாங்களே,'' என கேட்டாள் சித்ரா.
''அந்த பையன் எழுதுன லெட்டரை போலீஸ், ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க. சட்டசபை நடக்குறதுனால பணம் கொடுத்து, பிரச்னையை அமுக்க பார்க்கறாங்க. மாநகராட்சி சப்பைக்கட்டு கட்டுது,'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் சரி, மாநகராட்சி நிதி நிலைமை சரியில்லைன்னு பேசிக்கிறாங்களே. சம்பளம் கொடுக்கக்கூட பணம் இல்லையாமே,'' என கேட்டாள் சித்ரா.
''நிதி பற்றாக்குறை இருக்கறது உண்மைதான். சட்டசபை தேர்தல் நடந்த நேரத்துல, வளர்ச்சி பணிகள் செய்யக்கூடாதுன்னு, மானியத்தை நிறுத்தி வச்சிட்டாங்க. அதனால, ஏகப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாம மாநகராட்சி தடுமாறிடுச்சு,'' என்றாள் மித்ரா.
''இருந்தாலும், இவ்ளோ பெரிய மாநகராட்சியில வருவாய் பத்தலைன்னு சொல்றது, நிர்வாகம் சரியில்லைன்னு தானே அர்த்தம்,'' என சித்ரா கேட்டாள்.
ஆமோதித்த மித்ரா, ''ஆமாக்கா, வரியை முறையா வசூலிச்சா, கஜானா நிரம்பி வழியும். ஆனா, வரி வசூலர்கள் ஜாலியா ஊர் சுத்துறதால, வசூல் மந்தமா இருக்கு. ஏகப்பட்ட கோப்புகளை, 'கமிஷன்' எதிர்பார்த்து, கிடப்புல போட்டுருக்காங்களாம்,'' என தகவலை விளக்கினாள்.
''அறநிலையத்துறை பணிகள் கிடப்புல கிடக்கறது பத்தி விசாரிக்க, துறை கமிஷனர் வீரசண்முகமணி போன வாரம் நம்மூருக்கு வந்தாரு,'' என்று அடுத்த மேட்டருக்கு 'ஜம்ப்' ஆனாள் சித்ரா.
''ம்ம்...ஏதாவது விசேஷம் உண்டா?''- கேட்டாள் மித்ரா.
''விசேஷம் இல்லாமலா... மருதமலை, பேரூர் கோவில்கள்ல ஆய்வு நடத்தும்போது, கூட வந்த அறநிலையத்துறை உயர் அதிகாரியை பார்த்து, 'உங்க மேல ஏகப்பட்ட புகார் வந்திருக்கு; ஜாக்கிரதை. இதான் கடைசி வார்னிங்ணு டோஸ் விட்டாராம். இதை எதிர்பார்க்காத அவர், 'ஷாக்' ஆகிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
அப்போது மொபைல் போன் ஒலித்தது. எடுத்து பேசிய சித்ரா, ''அத்தை, 'பாரதியார் கவிதைகள்' புக்கை, பரிதி கிட்ட குடுத்திருக்கேன்னு, உன்கிட்ட எத்தனைவாட்டி சொன்னேன்; மறந்துட்டீங்களா?'' என்றாள்.
அப்போது மித்ரா, ''இப்பதான் ஞாபகம் வருது...அந்த மலையோர பல்கலைக்கழகத்துல காலியா இருக்கற, 64 பேராசிரியர்கள் வேலைக்கு பல இடங்கள்ல இருந்து சிபாரிசு வருதாம்; எல்லாம், பணம் படுத்தும் பாடு,'' என்றாள்.
''நம்மூரு போலீஸ் உளவாளி ஒருத்தரு, இப்படிதான் துட்டு வெட்டுறாராம்,'' என்று காக்கி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''ம்ம்...மேல சொல்லுக்கா,'' 'டிவி'யை பார்த்தபடி கேட்டாள் மித்ரா.
''கோவை மாநகரத்துல இருக்கிற, சிங்காரமான ஸ்டேஷன்ல, புதுசா வந்த ஒரு இன்ஸ்பெக்டருக்கும், அந்த ஏரியா உளவுப் போலீஸ் எஸ்.ஐ.,க்கும் 'வசூல்' விவகாரத்துல லடாய் ஆயிடுச்சாம்,'' என்றாள் சித்ரா.
''அப்புறம்...என்னாச்சு?'' - கேட்டாள் மித்ரா.
'' சுதாரிச்சிக்கிட்ட உளவு போலீசு, இன்ஸ்பெக்டர பத்தி மேலிடத்துல போட்டுக்கொடுத்து வேற ஸ்டேஷனுக்கு மாத்த வெச்சிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
''யாரு மேல குத்தமோ?'' என, ஆச்சரியப்பட்டாள் மித்ரா.
''மித்து உனக்கு தெரியுமா... நம்ம ஜி.எச்., அவசர சிகிச்சை பிரிவு லேடி டாக்டர் ஒருத்தங்க, சரியா வேலைக்கே வர்றதில்லையாம். இதனால மத்த டாக்டருங்க, இவங்க வேலையையும் சேர்த்து பாக்க வேண்டியிருக்காம். வேலைக்கு வராட்டியும் பரவாயில்ல; ஆனா, என்னைக்காவது ஒரு நாள் வந்து, பல நாட்களுக்கு சேர்த்து, வருகைப் பதிவேட்டுல கையெழுத்து போட்டுர்றாராம். மத்த டாக்டர்க எல்லாம், செம கடுப்புல இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அப்புறம், கடுப்பாக மாட்டாங்களா என்ன? எப்படி அவங்களுக்கு இவ்வளவு தைரியம்?'' என்று கேட்டாள் மித்ரா.
''இத பத்தி கேட்டா, 'நான் யார் தெரியுமா? முக்கியமான மினிஸ்ட்டர் ஒருத்தரோட பி.ஏ.,வோட அக்கான்னு' எகிறிக் குதிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.
அப்போது, 'டிவி'யில் ஓடிக்கொண்டிருந்த, 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில், நடிகர் ரஜினி ஆவேசமாக டயலாக் பேசிக் கொண்டிருந்தார்.
'டிவி'யில் இருந்து பார்வையை அகற்றிய மித்ரா, ''போன வாரம் நாம, கிணத்தை காணோம்ங்கற ரேஞ்சுக்கு, கொள்ளை நடக்குதுன்னு பேசினோம்லக்கா,'' என்றாள்.
''ஆமா...அதுக்கென்ன இப்போ?'' என்று கேட்டாள் சித்ரா.
''அந்த கிணற்றை ஜி.எச்.,கிட்ட ஒப்படைக்க, பி.டபிள்யு.டி., முடிவு பண்ணிருச்சாம்,'' என்றாள் மித்ரா.
''இனி அங்க ஒண்ணும் சம்பாதிக்க முடியாதுனு தெரிஞ்சுருக்கும். அதான் இப்படி முடிவு பண்ணிருப்பாங்க,'' என கண் சிமிட்டி சிக்னல் காட்டிய சித்ரா, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X