""சட்டசபையில, தெற்கு எம்.எல்.ஏ.,வோட கன்னிப்பேச்சு, களேபரத்தையே ஏற்படுத்திடுச்சு பார்த்தியா'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
""வா சித்ரா. காபி சாப்பிடலாம். அது சரி, எம்.எல்.ஏ., அப்படியென்ன பேசுனாரு,'' எனக்கேட்டாள் மித்ரா.
""தி.மு.க., நடத்தின நமக்குநாமே பயணம் பத்தி, விமர்சனம் செஞ்சு, அவர் பேசின பேச்சுதான், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை உசுப்பேத்தி, சபையிலிருந்து வெளியேற்ற வெச்சுடுச்சு. தமிழகமே, பரபரப்பா பேசப்படுது. கன்னி பேச்சிலயே, அவர் பிரபலமாயிட்டாரு,'' என்றாள் சித்ரா.
""ஆனா, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, திருப்பூர் தி.மு.க.,காரங்க, ரொம்பவே மெனக்கெட்டாங்க, தெரியுமா,'' என, மித்ரா சொல்லி முடிப்பதற்குள், ""இதில் என்ன இருக்கு,''என்றாள் சித்ரா.
""தமிழ்நாடு பூராவும், உடனே களமிறங்கி, சபாநாயகருக்கு எதிரா, தி.மு.க.காரங்க போராட்டம் நடத்தினாங்க. திருப்பூரில், மூன்று மணி நேரம் கட்சிக்காரங்க தயங்கி நின்னாங்க. மத்த இடங்களில் என்ன நடக்குது; பல்லடம், தாராபுரம், அவிநாசி பகுதிகளில் என்ன நடந்ததுன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு, பிரச்னை இல்லைன்னு தெரிஞ்ச பிறகு, இங்க போராட்டத்தில் இறங்கினாங்க. அப்பவும் கூட, போலீசார் வந்து, நீண்ட நேரம் காத்திருந்து, பேச்சு நடத்தி, போராட்டம் இருக்கா இல்லையா எனக் கேட்ட பிறகே, சபாநாயகரோட உருவ பொம்மையை எரிச்சாங்க,'' என்று மித்ரா விவரித்தாள்.
"கட்சிப் பிரச்னைக்கே தி.மு.க.,காரங்ககிட்ட போராட்ட குணம் இந்த லெவலுக்கு இருந்தா, மக்கள் பிரச்னைக்கு எப்படி போராட்டம் செய்வாங்க,''என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினாள் சித்ரா.
""உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கறதுக்கு முன்னாடியே, "சீட்' பேரம் துவங்கிடுச்சு'' என்று மித்ராவின் பேச்சு தேர்தல் பக்கம் திரும்பியது. ""எந்த கட்சியில?'' என்று சித்ரா கேட்டாள்.
""ஆளுங்கட்சியிலதான். எப்படியிருந்தாலும், மாவட்டம் தான், தலா மூணு பேரை தேர்வு செஞ்சு அனுப்புவாரு. அதுல ஒருத்தருக்கு "சீட்' கெடைக்கும். அதுக்குதான் சிலர், இப்பவே பேரம் பேசிட்டு இருக்காங்களாம். மேயர் பதவியை, கட்சி மேலிடம் முடிவு செய்யும். துணை மேயர், மண்டல தலைவர் பதவி, எம்.எல்.ஏ.,வுக்கு நிகரான பதவியா இருக்கே? அதனால, "சீனியர்'கள் சென்னையில் முகாம் போட்டு, "காய்' நகத்துறாங்களாம்,''
"" இப்ப கவுன்சிலரா இருக்கறவங்களும், புதுசா பதவிக்காக தவம் இருக்கறவங்களும், "20 "எல்' வரைக்கும் கொடுக்க தயாராக இருக்கோம்; மண்டல தலைவராக்குங்க'ன்னு, ஒவ்வொரு பக்கமாக பேரம் பேசிட்டு இருக்காங்க. இதில், தெற்குல எம்.எல்.ஏ., கை ஓங்கியிருக்கறதால, அவருகிட்டயும் "சீட்'டுக்காக நடக்க ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""அது சரி, தி.மு.க.,- ம.ந.கூ., என்ன பண்ணிட்டு இருக்காங்க?'' என்று மீண்டும் கொக்கி போட்டாள் சித்ரா.
""திருப்பூர் மாநகராட்சிய பொறுத்த வரை, ஆளுங்கட்சிக்கு சரியான போட்டியா, ம.ந.கூட்டணி தான் இருக்குது. காங்., முடிவு தெரியாம, தி.மு.க., தவிக்குது. ம.ந.கூ., போட்டியிடறது முடிவாகிடுச்சு; இப்ப, பதவியிடங்கள் பங்கீடு நடந்துட்டு இருக்கு. களமிறங்க, "கேப்டன்' சைகைக்காக காத்திருக்காங்க,'' என்று முடித்தாள் மித்ரா.
""விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலே பிரச்னையாமே?'' என்று சித்ரா கேட்டாள்.
""இப்போ இருக்கற இணை இயக்குனர் விவரமா பேச விடறதில்லைனு விவசாயிகள் அதிருப்தியோட சொல்றாங்க. முன்னாடி இருந்தவரு, பக்குவமா சொல்லுவாங்க; இவரு,"ஆர்டர்' போடறமாதிரி பேசினா, ஏத்துக்க முடியாதுன்னு, விவசாயிகள் கொதிச்சு போயிருக்காங்க,'' என்று முடித்தாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE