கனவுகளைக் கைப்பற்றுவோம் 38| Dinamalar

சிறப்பு பகுதிகள்

நீங்களும் தொழிலதிபராகலாம்

கனவுகளைக் கைப்பற்றுவோம் 38

Updated : ஆக 25, 2016 | Added : ஆக 24, 2016
Advertisement
கனவுகளைக் கைப்பற்றுவோம் 38

அன்பு தோழமைகளே நலமா? இந்த வாரம் மக்கள் தொடர்பின் மகத்துவம் குறித்து காணப்போகின்றோம்.
நம் வீடுகளில் , பள்ளி, கல்லூரிகளில் அலுவலகம் , பொது இடங்கள் உட்பட எந்த துறையிலும் மக்கள் தொடர்பு மிகவும் முக்கியமானது. அறிவை, பணத்தை சம்பாதிப்பது போல் மக்களை சம்பாதிக்கத் திறமை வேண்டும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அறிமுகங்களை விசாலப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும் , அறிவு, பணம், உறவு இவை போல நட்பும் ஒரு பெரிய பலம். உறவுகளை விட நட்பை முக்கியமாகக் கொள்ளும் இக்காலக் கட்டத்தில் உதட்டளவில் இல்லாமல் உள்ளன்புடன் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் முதலில் மக்களை குறித்த தெளிவு நம்மிடையே இருக்க வேண்டும். உலகில் மொத்தம் நான்கு வகை மனிதர்களே உள்ளனர். முதல் வகையினர்- பிறரைக் காரணமின்றி அழிப்பதிலேயே ஆனந்தம் காட்டும் கொடிய மனிதர்கள்... பணம் , புகழ் பதவி சாதிக்காக எதையும் செய்யத் துணியும் சுயநலத்தின் மொத்த உருவம் , ஏழை எளியோரை வதைப்பது கொல்வதும் கூட இவர்களுக்கு இயல்பாக வரும். இரண்டாவது வகையினர்... தன்னலத்திற்காக பிறர் நலத்தை அழிக்கும் மனித மிருகங்கள் இதை செய்தால் எனக்கு என்ன லாபம் என்று உறவுகளைக் கூட வணிகமயமாக்கும் , வர்த்தகமயமாக்கும் சுயநலவாதிகள். மூன்றாவது வகையினர்.. சுயநலமும் பொதுநலமும் கலந்த சாதாரண மனிதர்கள் , தன்னை தாண்டி தானம், தர்மம், செய்து சுயநலத்தைக் கடக்க முயல்பவர்கள்.. நான்காவது வகையினர் பிறர் வாழத் தாம் வாழும் சான்றோர் . தான் பசியோடு இருந்தாலும் பிறர் உண்ண உணவளித்து மகிழ்வார் சுயநலத்தைக் கொன்றொழித்து ஒடுக்கப்பட்டோரின் உரிமை வாழ்வுக்காகப் போராடும் மாமனிதர்கள் உலகப்பொருட்களின் மீது நம்பிக்கை வைக்காது கடவுளின் மீது நம்பிக்கை வைத்து ஏழைகளின் சிரிப்பில் அமைதியில், நிறைவில் இறைவனைக் காண்பவர்கள் .
இன்றைய சினிமாக்களும் , சின்னத்திரை மெகா சீரியல்களும், பழி வாங்கும் உணர்வைத் தான் நம்மில் தூண்டி விட்டு எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கின்றன இன்றைய அழகியலானது மேலை நாட்டினரால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே கருப்பு என்பது அசிங்கம் என்ற எண்ணமானது நமது மனங்களில் ஆழமாகப் படிந்துள்ளது . கருப்பு நிறத்தவரை வெறுக்கின்றோம் . நம்மிடம் கருப்பு நிறம் இருந்தால் அதனை மாற்ற பல முயற்சிகளை மேற்கொள்கின்றோம். மக்களோடு தொடர்பு கொள்கையில் இத்தகைய எண்ணங்களை கைவிட வேண்டும்..... பயணத்தின் போது நம்மை பார்த்துக் குரைக்கும் நாய்களையெல்லாம் கல்லால் எறிய நாம் நின்றால் நம் இலக்கை அடைய மாட்டோம் என்பது பழமொழி .நம்பிக்கைத் துரோகங்களும் எதிர்ப்புகளும் நம்மை முடக்கி போடும் சாத்தான்கள். எதிர்மறை எண்ணங்கள் இன்று நம்மிடையே வெறுப்புணர்வினையும் பகைமை உணர்வினையும் வளர்க்கின்றன.சமூகத்தின் வளர்ச்சிக்கு கேடாக உள்ள இக்குறுகிய எண்ணங்கள் .நாகரீகம் வளர வளர மனித மனங்கள் சுருங்கிக் கொண்டேயிருக்கின்றன . தகவல் புரட்சி யுகத்தில் மனித இதயங்கள் ஈரமற்றுப் போகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது .நடந்ததை நினைத்து புழங்குவதை விட நம் பொறுப்புகளை உணர்ந்தவர்களாக துணிவோடு செல்வோம்.
நதியே உன் மாறாத ஓட்டத்தில் மறக்க முடியாத நிகழ்வு எது?நுரை சிரிப்போடு நதி சொன்னது முண்டும் முடிச்சுமான மரக்கட்டை ஒன்றில்ஒரு குழந்தையைக் காப்பாற்றி கரை சேர்ததே...
- இது ரசால் சம்சதேயின் கவிதை... நாம் வாழும் இந்த அற்புதமான வாழ்வில் இயந்திரமாக இல்லாமல் சக மனிதர்களோடு நல்ல நட்புறவாடுவதில் தான் நம் வாழ்வின் முழு அர்த்தமும் அடங்கியுள்ளது. உறவுகள் மேம்படப் பேசுவதில் நிதானம் , விவேகம், அமைதி அன்பு கலந்த நட்பு , சொல்வதை செய்வது எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் , நெருக்கடிகள் கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டாலும் நல்ல தன்னம்பிக்கை ஆகிய குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் . மனிதர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் திறமை. பிறரது நுட்ப மான உணர்வுகளைத் துல்லியமாக உணர்வதே இதன் அடிப்படை பிறரது உணர்வுகளையும் மனநிலைகளையும் நாம் புரிந்து கொண்டால் . ஒருவர் என்ன செய்கிறார் என்பதை மட்டுமில்லாமல் ஏன் செய்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம் . . ஒவ்வொரு மனிதரின் நடத்தையையும் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. அவர்கள் சுபாவம், பின்னணி, பழக்கம், அப்போதைய மனநிலை, சுயநலம், பொதுநலம், அச்சம், தயக்கம், துணிச்சல் எனப் பல காரணிகள் ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும் உள்ளன. மனித நடத்தையைத் தீர்மானிக்கும் அம்சங்கள் இவை. இவற்றைக் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் நமக்கு இருந்தால் தான் அந்த நிகழ்வுகளை அவற்றின் பின்னணி யோடு புரிந்துகொள்ள முடியும். மனித உணர்வுகளையும் தேவைகளையும் நாம் புரிந்து கொண்டால் மனித நடத்தைக்குப் பின்னால் உள்ள காரணங்களைத் தர்க்கபூர்வமாக அறியலாம் . அறிந்து கொண்டால் அவர்களிடம் மாற்றம் ஏற்படுத்தும் திறமையும் நம்மிடம் இருக்கும்..

சிறந்த அணுகுமுறையால் சக ஊழியர்கள் , வாடிக்கையாளர்கள் , முதலீட்டாளர்கள் வங்கி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோரிடமும் புத்திசாலித்தனமாகவும் , கவர்ச்சியாகவும் பேசி பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் தொழிலும் பணியிலும் வெற்றி காண்பதற்கு மனித உறவுகள் அவசியம் மக்கள் தொடர்பு சரியாக அமையாவிட்டால் வெற்றி காண்பதில் சிக்கலான பிரச்னைகள் , பின்னடைவுகள் ஏற்படலாம் ,
மனிதர்களுடன் உறவாடும் தொழிலுக்குப் பிறரது உணர்வுகளையும் சிந்தனை முறைகளையும் புரிந்துகொள்ளும் தன்மை வேண்டும். தனி நபர்களிடையே காணப்படும் வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப அவர்களிடம் நடந்துகொள்ளும் திறமை வேண்டும்.
தொழிலைத் தேர்ந்தெடுக்கும் போது தங்களிடமுள்ள இதுபோன்ற திறமைகளைப் பலரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் மனித வளம், மனித உறவுகள் ஆகியவை மிகவும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் இயந்திரம் ஒழுங்காக இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பதில்லை. இயந்திரத்தை இயக்கும் மனிதர் நன்றாக இருக்கிறாரா என்பதையும் பார்ப்பதே நவீன அணுகுமுறை.
சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும், மனித உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்; பொருளாதாரம் மனிதனின் மதிப்பை நிர்ணயம் செய்வது சமூக அவலமாகும்.; மனிதன் சக மனிதனை நேசிக்கப் பழக வேண்டும்
எல்லோரிடமும் நன்றாகப் பழகி ஒத்து போனால் தான் சமூகத்தில் நன்கு வாழ முடியும் . மனித இயல்பு என்பது அன்பு இரக்கம் கருணை முதலிய நல்லுணர்வுகள் அடங்கியதே ஆகும். சமூகத்தில் நேர்மையான வழிகளில் தனக்கென்று ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பது அவசியம். விசாலமான பார்வை, கம்பீரமான தோற்றம் உயர்ந்த கற்பனை , பிரம்மாண்டமான எண்ணங்கள் இவை நம்மை சிகரத்தில் ஏற்றிக்காட்டக் கூடியவையாகும்...
தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம், திட்டமிடுதல், உழைப்பு ஒழுக்கம் ஆகியவை எந்த அளவிற்கு இருக்கிறதோ அதைவிட தொடங்கிய பின்னர் இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். எதிர்பார்ப்பு இருந்தாலும் அதிகம் ஆசைப்படாமல் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒரு போதும் இழக்காமல் பிறரோடு சுமூக உறவில் உழைப்பு உழைப்பு, கடின உழைப்பு இதுவே நாம் எப்பொழுதும் உச்சரிக்கும் நாடித்துடிப்பாக இருந்தால் வெற்றி நம் கைகளில்..
ரோஸ்லின்.9842073219aaroseline@gmail.com

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X