திண்டுக்கல்: -எட்டு பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்தவரை கைது செய்த போலீசார், மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மதுரையைச் சேர்ந்தவர் சலாமியா பானு, 28. இவர், மதுரை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், 'காதர் பாட்சா, 32, என்பவர், அருப்புக்கோட்டை வங்கியில் பணியாற்றுவதாகக் கூறி, என்னை திருமணம் செய்தார். இதுபோல, அவர், எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்' என, தெரிவித்திருந்தார். இதையடுத்து, துாத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர் பாட்சாவை, போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திகாயினி, 27, என்ற பெண்ணுக்கு, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, காதர் பாட்சா, மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அம்மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் இருக்கும் காதர் பாட்சாவை, இந்த வழக்கில் கைது செய்து, நாளை, திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.