தமிழனாகப் பிறந்தார் இந்தியனாக வாழ்ந்தார்| Dinamalar

தமிழனாகப் பிறந்தார் இந்தியனாக வாழ்ந்தார்

Added : ஆக 26, 2016
Advertisement
 தமிழனாகப் பிறந்தார் இந்தியனாக வாழ்ந்தார்

“தொழிலாளர் அன்னை; பெண்கள்உயர்விற்கே உழைக்கும் தோழி;செழுந்தமிழ்ப் பெரியார்; தென்றல்;தீஞ்சுவைப் பேச்சின் தந்தை;விழிநகர் திராவிடத்தின்விடுதலை விழைந்த வீரர்…” என்பது கவிஞர் வாணிதாசன், திரு. வி. கலியாணசுந்தரனார் குறித்துத் தீட்டி இருக்கும் அழகிய சொல்லோவியம்.

இலக்கிய உலகில் பெரும் புலவராக, - சமய உலகில் சான்றோராக, - அரசியல் உலகில் தலைவராக - பத்திரிகை உலகில் வழிகாட்டியாக - தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சியவர் அவர்.

திரு.வி.க.வின் இல்வாழ்க்கை நீண்ட காலம் நிலவவில்லை; ஆறே ஆண்டு நடைபெற்றது. அவரது குடும்ப வாழ்க்கை குழந்தைச் செல்வம் இரண்டினைப் பெற்று இழந்தது. அருமைத் துணைவியார் கமலாம்பிகை எலும்புருக்கி நோயால் தாக்குண்டு இறந்து போனார்.

அவர் இறந்த இரண்டு மாதங்களுக்குள் திரு.வி.க.வின் சுற்றத்தினர் மறுமணப் பேச்சினை
எடுத்தனர். 'மறுமணம் செய்து கொள்ளக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த திரு.வி.க.
எவரது பேச்சுக்கும் இணங்கவில்லை. “எனக்கு மனைவி என்பவள் ஒருத்தி தானே? இன்னொரு பெண்மணி எனக்கு எப்படி மனைவி ஆவாள்? அவள் எனக்குச் சகோதரி ஆவாள்” என்று அவர் தம் உள்ளக் கருத்தினைத் தெளிவுபடுத்தினார்.

பெண்ணின் பெருமை :

ஆங்கிலப் பேச்சைப் போல் தமிழில் மேடைப் பேச்சினை ஒரு தனிக்கலையாக வளர்த்ததிலும் திரு.வி.க.வுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர் ஒரு 'பிறவிச் சொற்பொழிவாளர்'; 'இன்றைய மேடைப் பேச்சுக் கலையின் தந்தை'. ஏனைய சொற்பொழிவாளர்களுக்கும் திரு.வி.க. வுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.

அவர் ஒருபோதும் அவையோரின் நிலைக்குக் கீழே இறங்கி வந்து பேசமாட்டார்; கொச்சைச் சொற்களையோ வசைக் குறிப்புக்களையோ கையாள மாட்டார். மாறாக, ஒட்டுமொத்த
அவையினரையும் தம் உயர்ந்த நிலைக்கு மேலே கூட்டிச் செல்லும் அளப்பரிய ஆற்றல்
அவரிடம் குடிகொண்டிருந்தது. அவையினருக்கும் தமக்கும் இடையே ஓர் ஆன்மிகக்
கூட்டுறவை - ஏற்படுத்துவதில் திரு.வி.க. கை தேர்ந்தவராக விளங்கினார்.

மனைவியின் மரணத்திற்குப் பிறகும் திரு.வி.க. மனம் உடைந்து முடங்கிப் போய் விடாமல், பல வகையான பணிகளில் முனைப்புடன் ஈடுபாடு கொண்டார்; பெண்ணின் பெருமை இவ்வுலகில் நன்கு விளங்க அரும்பாடு பட்டார்; தம் நுால்களில் இயலும் வகைகளில் எல்லாம் பெண்ணின் பெருமையினைப் பேசினார். “ஆண் எனும் அரக்கனாக வாழ்வதினும், பெண் எனும் தெய்வமாக வாழ்வதில் எனக்கு விருப்புண்டு” என ஒரு முறை அவர் எழுதினார்.

“திரு.வி.க. என்ற மூன்றெழுத்துள் ஓர் உலகமே அடங்கியுள்ளது. பஞ்சாக்கரத்தினுள் ஆன்மிக உலகம் அடங்கி இருப்பது போல், திரு.வி.க. என்ற மூன்றெழுத்துள் தமிழ் இலக்கணம், இலக்கியம், சமயம், சமரசம், அரசியல் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன என்று கூறினால் மிகையாகாது” என மொழிவார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்.

'தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர்' என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில எழுத்தாளருக்கு பெயர் உண்டு. தமிழ் மொழியில் ஒருவருக்கு அப்பெயரைச் சூட்ட வேண்டும் என்றால், அவர் திரு.வி.க.வே என்று உடனே கூறி விடலாம். உரைநடை, சொற்பொழிவு,
பத்திரிகைக் கட்டுரை, கவிதை, உரை, பதிப்பு முதலான பல்வேறு துறைகளின் வாயிலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட்டவர் திரு.வி.க.

உரைநடை வளர்ச்சி

இருபதாம் நுாற்றாண்டின் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பாரதியார் ஆணிவேராய் விளங்கியது போல், உரைநடை வளர்ச்சிக்குத் திரு.வி.க. மூலவராய்த் திகழ்ந்தார். 'உரைநடைக் கம்பர்' எனச் போற்றத் தக்க அளவிற்கு அவர் உரைநடையில் நுால்களை எழுதிக் குவித்தார். 'முருகன் அல்லது அழகு', 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை', 'இந்தியாவும் விடுதலையும்', 'உள்ளொளி', 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' முதலான நுால்கள் இவ் வகையில்
சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

“தோழர்களே! உங்கள் முன்னிலையில் யான் நிற்கிறேன். ஏன் நிற்கிறேன், தெரியுமா? 'மேடைத் தமிழ்' என்னும் நுாலுக்கு 'அணிந்துரை' கூறப் போகிறேன். இக் கூற்று உங்கட்கு வியப்பூட்டலாம். 'அணிந்துரைக்கா மேடை! தோழர்களே என்ற விளிப்பு! நன்று! நன்று!' என்று உங்களிற் சிலர் நகைக்கலாம்; சிலர் எள்ளலாம்.” இவ்வாறு சொற்பொழிவுக் கலை பற்றிய நுாலுக்குப் பேச்சு நடையிலேயே திரு.வி.க. முன்னுரை எழுதி இருப்பது வித்தியாசமானது.

மாவடு போன்ற நடை

திரு.வி.க. 'தேச பக்தன்' பத்திரிகையின் ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் இருந்தார்; 'நவசக்தி' இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் பணியாற்றினார். 'திரு.வி.க.வின் பத்திரிகை நடை வாயில் நீர் ஊறச் செய்யும் மாவடு போன்றது' என்பர் அறிஞர். 'தேச பக்தன்' இதழில் 4.1.1918- ல் திரு.வி.க. எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி இதோ:

“தமிழ்நாட்டைத் திருத்தத் தமிழ் நுால்களே சாலும். இப்பொழுது திருவள்ளுவரைப் படிப்பவர் யார்? தொல்காப்பியரைத் தொடுபவர் யார்? புறநானூற்றைப் போற்றுவோர் யார்?
சிலப்பதிகாரத்தைச் சிந்திப்பவர் யார்? மணிமேகலையை மதிப்போர் யார்? பத்துப்பாட்டைப் படிப்போர் யார்? பலரில்லையே. இந்நுால்களின் பெயர்களைக் கேட்டுள்ளவர் ஆயிரத்தில்
ஒருவரோ? இருவரோ? அறிகிலேம்.”

இங்ஙனம் அருமையும் அழகும் இனிமையும் எளிமையும் உணர்ச்சியும் உயிரோட்டமும் கொலுவிருக்கும் நடையாகத் திரு.வி.க.வின் பத்திரிகை நடை விளங்கியது.மனித
வாழ்க்கைக்கு ஓர் இலக்கியம் “என்னுடைய நுால்களில் முதல்முதல் படிக்கத் தக்கது, 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்பது. ஏன்? காந்தியம் மனித வாழ்க்கைக்கு ஓர் இலக்கியமாக விளங்குவது. காந்தியத்தில் வாழ்க்கையின் நோக்கும் அடைவும் இருக்கின்றன. அவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுவது மக்களின் முதற்கடமை” எனத் திரு.வி.க. தம் வாழ்க்கைக்
குறிப்புக்களில் 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்னும் நுாலை குறிப்பிட்டுள்ளார்.

இக் குறிப்பு ஒரு வகையில் அவருக்கும் முற்றிலும் பொருந்துவதாகவே உள்ளது. திரு.வி.க. மனித வாழ்க்கைக்கு ஓர் இலக்கியம். மனித வாழ்க்கையின் நோக்கும் அடைவும் தெரிந்து கொள்ள விரும்புவோர் திரு.வி.க.வின் வாழ்க்கையைப் பயில வேண்டும்; அது காட்டும் நெறியில் நிற்க வேண்டும். மூதறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் சொற்களில் குறிப்பிடுவது என்றால், திரு.வி.க. “பழமையின் பிரதிநிதி; ஆனால், புதுமையின் சங்க நாதம். ஆண்மைக்கு அணிகலன்; பெண்மைக்கு விளக்கம். சாந்தத்தின் வடிவம்; ஆனால், வீரத்தின் ஊற்றுக்களம்.
தமிழனாகப் பிறந்தார்; இந்தியனாக வாழ்ந்தார்.”

- பேராசிரியர் இரா.மோகன்
எழுத்தாளர், 94434 58286வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X