சென்னையை, விந்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் படம் பிடித்துள்ளனர்.
அவர்களில், புதுமைப்பித்தன் மிக முக்கியமானவர். ஆரம்பகால சென்னை யின் அசைவுகளை, ரத்தமும் சதையும் கலந்த உணர்வுச் சித்திரங்களாக வார்த்தவர்புதுமைப்பித்தன்.
'புதுமைப்பித்தன் பார்வையில் சென்னை' குறித்து, சென்னை பல்கலையின் முன்னாள் தமிழ்த் துறை தலைவர், பேராசிரியர் வீ.அரசு,நம்மிடம் பகிர்ந்து கொண்டது:
சென்னையைப் பற்றி புதுமைப்பித்தன் எழுதிய கதைகளில் மிக முக்கியமாக, கவந்தனும் காமனும், விநாயக சதுர்த்தி, ஒருநாள் கழிந்தது, அபிநவ ஸ்நாப், மகா மசானம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய ஆறு கதைகளைக் கூறலாம். அவற்றில் கவந்தனும் காமனும், மகா மசானம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய கதைகள் மிக நுட்பமானவை.
'சிறு சந்தில் சிருஷ்டி தொழில் 'பிழைப்புத் தேடி, வெளியூரில் இருந்து சென்னை வந்த மக்கள், வறுமைக்கு ஆட்பட்டு, வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பதையும், வறுமை அழைத்துச் செல்லும் கொடுமையான பாதையையும் மையமாக வைத்து புனையப்பட்ட கதை தான், கவந்தனும் காமனும்.
பிழைப்புக்கு வழியே இல்லாமல் தங்களின் உடலை விற்று, அதன் மூலம் தங்கள் குடும்பத்தை காக்கும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமை பற்றி அதில் புதுமைப்பித்தன் எழுதுகிறார். அதில், 'சென்னையின் சிறு சந்தில், சிருஷ்டி தொழில் நடக்கிறது' என்று சமூக அவலத்தை அவருக்கே உண்டான எள்ளலுடன்சாடுகிறார்.
நகர உருவாக்கத்தின் ஊடாக, ஏழைகள் வாழ முடியாமல்,பல கொடுமைகளுக்கு உடன்படுதலை அந்த கதையில் பதிவு செய்கிறார். சென்னையில் உள்ள சிறுசிறு சந்துகள் கூட, ஏழைகளின் வாழ்விடமாக மாறியதை அந்த கதை விளக்குகிறது.
மகா மசானம் கதையில்,மவுன்ட் ரோட்டில்,ஒரு பிச்சைக்காரன்,பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறான். அதை, அப்பாவுடன் வந்த ஒரு குழந்தை பார்க்கிறது. அது, தன் கையில் உள்ள பொருட்களை, தவிப்புடன் அவன் அருகில் கொண்டு போய் வைக்கிறது. உடனே அப்பா, அழைக்கிறார். அந்த நேரத்தில், வேறு யாரும் அதை கண்டு கொள்ளாமல், அவர்களின் வேலைக்காக விரைவாக இயங்குகின்றனர்.
இப்படியாக,கண்ணுக்கெதிரே அனுவனுவாக செத்துக் கொண்டிருக்கும் மனிதனைக் கூட யாரும் கண்டு கொள்ள நினைக்காத, கொஞ்சம் கொஞ்சமாக மனிதாபிமானம் செத்துக் கொண்டிருப்பதை யும், அதேநேரம், உதவி செய்ய நினைக்கும் குழந்தை போன்ற மனம் படைத்தோரை தடுக்கும் நகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
நுகர்பொருள் பண்பாடு
நகரம் சார்ந்த வாழ்க்கை, இங்கு நடக்கும் பல்வேறு விதமான நிகழ்வுகளை கிண்டல் செய்யும் தொனியில் அமைக்கப்பட்ட கதை தான், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். பாரிஸ் கார்னரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு, கந்தசாமிப் பிள்ளையுடன் கடவுள் வருகிறார். அவர், வீட்டுக்கு வாங்கி செல்லும் பொருட்களின் வழியாக நுகர்பொருள் பண்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்கிறார் புதுமைப்பித்தன்.
டிராம் வண்டி, அதன் நிறுத்தங்கள், அதன் போக்கு பற்றியும், பாரிஸ் கார்னர் துவங்கி திருவல்லிக்கேணி வரையிலான நிலவியல் மற்றும் மக்களின் தன்மைகளைப் பற்றியும் விரிவாகப் பதிவு செய்கிறார். செல்லம்மாள் என்ற கதை, தாம்பரத்திலிருந்து பாரிஸ் கார்னர் செல்லும் ரயில் வழியாக நிறுத்தங்கள், கூட்டம், மக்களின் நிலைப்பாடு குறித்து விரிவாக பேசும்.
மவுன்ட் ரோடு, அதன் போக்குவரத்து, மக்களின் நகர்வு பற்றிய சாட்சியாக, மகா மசானம் கதை
அமைந்திருக்கிறது. அபிநவ ஸ்நாப், ஒருநாள் கழிந்தது, வினாயகர் சதுர்த்தி ஆகிய கதைகளில், புதிதாக சென்னைக்கு வருவோர் வாடகை வீடு எடுப்பதற்கு படும்பாடு, வாடகை வீடுகளின் அமைப்பு, பால்காரர், மளிகைக் கடைக்காரர், வீட்டு முதலாளிகளின் பழக்க வழக்கங்கள், உறவு முறைகள் குறித்து விரிவாக பதிவு செய்கிறார்.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், 1930 முதல் இன்று வரை, சென்னை கண்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்ள, புதுமைப்பித்தனின் கதைகள், மிக முக்கியமான துருப்புச்
சீட்டாக விளங்குகின்றன. புதிய நகரத்தில், பழைய நிலவுடைமைக் கலாச்சாரம் அழிந்து நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி, விரைவுத்தன்மைக்கு ஆட்படும் முறைகளையும், டிராம், பேருந்து போன்ற விரைவு போக்குவரத்து சாதனங்களின் வருகை, மனித மனங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களை பற்றியும், புதுமைப்பித்தனின் கதைகள் படம் பிடிக்கின்றன.
இந்த கதைகள் எல்லாம், 1930லிருந்து, 1945க்குள் எழுதப்பட்டவை. அந்த காலகட்டத்தில், முதல் உலகப் போர் முடிந்து, இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு நகரம் எப்படி வளர்ச்சியடைந்தது என்பதற்கான பதிவுகளாக இவை உள்ளன.
18, 19ம் நுாற்றாண்டில் சென்னை உருவாக்கத்தின் போது ஏற்பட்ட மாற்றங்களையும், 20ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் ஏற்படும் புதிய தாக்கங்களையும், புதுமைப் பித்தன் கதைகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.
மதுரை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களை பார்க்கும் பார்வையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பார்வையில் அவர் சென்னையைப் பார்க்கிறார்.
-- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE