ஒலிம்பிக்கில் எப்போது சாதிப்போம் :இன்று விளையாட்டு தினம்| Dinamalar

ஒலிம்பிக்கில் எப்போது சாதிப்போம் :இன்று விளையாட்டு தினம்

Added : ஆக 28, 2016 | கருத்துகள் (5)
 ஒலிம்பிக்கில் எப்போது சாதிப்போம் :இன்று விளையாட்டு தினம்

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ரியோ நகரில் நடந்த போது, ஒவ்வொரு இந்தியனும் பதக்க பட்டியலில், நம்நாடு இடம் பிடிக்காதா என்ற ஏக்கத்தில் தவித்தோம்.நம்மை விட சிறியநாடுகள் கூட பட்டியலில் இடம் பெற்றது. உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள நாம், ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 67வது இடத்தில் உள்ளோம். இந்நிலையில் நம்நாடு நிகழ்த்திய ஒலிம்பிக் சாதனையை பற்றி நினைத்தால் சற்று மகிழ்ச்சி தருகிறது.
ஹாக்கி விளையாட்டில் நமது பாரத அணி அசைக்க முடியாத இடத்தில் இருந்தது. 1928, 1932 முதல் 1956 வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றது. 1960ல் வெள்ளி பதக்கம், 1964ல் தங்கம், 1968, 1972ல் வெண்கலப் பதக்கம் பெற்றது. 1980ல் மீண்டும் தங்கத்தை தக்க வைத்தது. பின் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை, 2012ல் லண்டனில் நடந்த துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா பெற்றார்.
ஹாக்கி போட்டியில் உலக அரங்கில் முதலிடத்தில் மகுடம் சூட காரணம், ஹாக்கி வீரர் மேஜர் தயான்சிங் தான். இளம்வயதில் இரவில் நிலா வெளிச்சத்தில் இவர் பயிற்சி செய்ததால், நண்பர்கள் இவரை சந்த் என்றனர். சந்த் என்றால் நிலா என பொருள். இதனால் தயான்சிங் பெயர், தயான் சந்த் சிங் என மாறியது. 1905 ஆகஸ்ட் 29ல் அலகாபாத்தில் சமேஷ்வர்தத்சிங், ஜானகி தேவிக்கு மகனாக பிறந்த இவர் இளமையில் மல்யுத்தத்தில் ஈடுபாடாக இருந்தவர். இவரது தந்தை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, ஹாக்கி விளையாடியவர். தந்தை பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு மாறுதல் ஆனதால், தயான் சிங் கல்விக்கு அதுவே தடையாக இருந்தது. ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் தந்தையின் ஹாக்கி விளையாட்டை பார்த்து இந்த விளையாட்டிற்கு ஈர்க்கப்பட்டார். சிறுவயதிலே மரக்கிளையை உடைத்து ஹாக்கி பேட், கிழிந்த துணிகளை வைத்து பந்து தயாரித்து விளையாடினார்.
ஹாக்கியால் கிடைத்த ராணுவபணி தயான் சந்த்தின் 16வயதில், இவரது தந்தை விளையாடிய ஹாக்கி அணி தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. அப்போது ராணுவ அதிகாரி அனுமதியுடன், தந்தை அணியில் விளையாடி நான்குகோல்கள் போட்டு வெற்றி பெற செய்தார். இதுவே இவருக்கு ராணுவபணி கிடைக்க வாய்ப்பாக இருந்தது. ராணுவ அதிகாரியான போல்திவாரி, ஹாக்கி நுணுக்கங்களை தயான் சந்த்திற்கு கற்றுகொடுத்தார்.
1928ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு தேர்வானபோது, இந்திய அணி நெதர்லாந்தை 3--0 என்ற கோல் கணக்கில் வென்றது. தயான் சந்த் சிங் விளையாடிய ஐந்து போட்டிகளில் 14 கோல் அடித்து சாதனை செய்தார். 1932ல் நடந்த ஒலிம்பிக்கில் தனது சகோதரர் ரூப்சிங் உடன் சேர்ந்து விளையாடி தங்கத்தை பெற்றார். 1936ல் ஒலிம்பிக் போட்டிகள் ஹிட்லரின் தேசமான ஜெர்மன் பெர்லினில் நடந்த போது,தயான் சந்த் சிங் கேப்டனாக பொறுப்பு ஏற்று ஜெர்மனியை 8--1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார்.
இதை சகிக்காத ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், 'தயான் சந்த் சிங்கை சந்திக்கவேண்டும்' என்றார். தயான் சந்த் சிங் தயக்கத்துடன் ஹிட்லரை சந்தித்தார். அப்போது 'எனது ராணுவத்தில் சேர்ந்து, ஜெர்மனிக்காக விளையாடு' என ஹிட்லர் அழைத்தார். “தாய்நாடான இந்தியாவிற்காக தான் விளையாடுவேன்” எனக் கூறி தயான் சந்த் சிங் மறுத்தார்.
ஹாக்கியின் மந்திரவாதி :1940 வரை ஹாக்கி விளையாட்டு வீரராக இருந்த அவர், பின் இந்திய அணியின் பயிற்சியாளராக செயலாற்றினார். 1956ல் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. பின் ராணுவத்தில் மேஜர் பட்டம் பெற்று தனது பணியை நிறைவு செய்தார். தனது மகன் அசோக்குமாரையும் ஹாக்கி வீரராக மாற்றினார். தயான் சந்த் சிங்கை ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என்றே அழைப்பர்.
திடலில் இவர் பந்தை எடுத்து செல்லும் லாவகத்தன்மைக்கு ஈடுஇணை உலகில் எந்த வீரருக்கும் இல்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட்மேன்,“ நாங்கள் கிரிக்கெட்டில் ரன் அடிப்பது போல், ஹாக்கியில் கோல் அடிக்கிறீர்கள் ”என புகழ்ந்து உள்ளார். லண்டன் ஜிம்கானா கிளப் ஹாக்கி மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 2012ல் இவரது உருவம்பொறித்த தபால்தலையை இந்திய அரசு வெளியிட்டது. டில்லியில் தயான் சந்த் பெயரில் தேசிய விளையாட்டு அரங்கம் உள்ளது. உத்திரபிரதேசம் ஜான்சியில் உள்ள சிர்குரி மலையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டு உள்ளது. 1928 ல் நெதர்லாந்தில் நடந்த போட்டியில் தயான் சந்த்தின் அபார ஆட்டத்தை பார்த்து அசந்து போயினர். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், தயான் சந்த் ஹாக்கி மட்டையை உடைத்து, அதில் காந்தம் போன்ற பொருள் உள்ளதா என சோதித்து ஏமாற்றம் அடைந்தனர்.
1928 முதல் 1948 வரை சர்வதேச போட்டிகளில் 400 கோல்கள் அடித்துள்ளார். 1936ல் ஜெர்மனில் ஒலிம்பிக்போட்டி நடந்தபோது, பத்திரிகைகள் இந்திய அணி மற்றும் தியான் சந்த் பற்றி எழுதி, மாயாஜாலத்தை காண வாரீர் என செய்தி வெளியிட்டது.
இறுதி நாட்கள் :உலக அளவில் பேசப்பட்ட வெற்றிகளை குவித்த தயான் சந்த், வாழ்வின் இறுதியில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தார். அரசின் கவனம் இவர் பக்கம் திரும்பவில்லை. கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுப்பிரிவிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டார். 1979 டிசம்பர் 3ல் இறந்தார். அவரது இறுதிநாட்களில் 'நான் சாகும்போது உலகமே அழும், ஆனால் இந்திய மக்கள் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடமாட்டார்கள், எனக்கு இந்திய மக்களை பற்றி நன்கு தெரியும்' என கூறி உள்ளார். அவரின் மறைவிற்கு பின்னரே, இந்திய அரசு 2012 ல் அவருடைய பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாட முடிவெடுத்தது. இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா தியான் சந்த்க்கு கிடைக்கவில்லை.
அவரின் அருமை, பெருமை மற்றும் விளையாட்டின் மதிப்பு தெரியாததன் விளைவு தான் ஒலிம்பிக் விளையாட்டில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்று 67வது இடத்தில் உள்ளோம்.உடல்நலன் பேணவேண்டும் உடல் நலன் பேணுவது, உணவு முறைகளை சரிவிகிதத்தில் உண்பது, ஆரோக்கிய முறைகள், நலமான வாழ்க்கை முறைகளை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர்கள் நம் மூதாதையர்கள் தான். இதை மறந்து மேலைநாடுகளின் தாக்கத்தால் நம்மை நாமே மறந்து வாழ்கிறோம். விளையாட்டிற்கு நாம் முக்கியத்துவம் தருவது இல்லை. அமெரிக்கா, சீனாவில் பள்ளி பருவத்திலேயே பயிற்சி அளித்து திறமையான வீரர்களை உருவாக்குகின்றனர். நாம் கிரிக்கெட்டை ரசிக்கிறோம், மற்ற விளையாட்டுக்களை ஊக்குவிக்க மறக்கிறோம்.
கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, விளையாட்டிற்கும் நாம் கொடுத்தால், இந்திய அணி உலக அரங்கில் ஜொலிக்கும். விளையாட்டினை ஊக்குவிப்போம். பாரதத்தின் பெருமையை விண்ணுயர்த்துவோம்.--- முனைவர் த.முருகேசன்உடற்கல்வி இயக்குனர்விருதுநகர். 98947 12575

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X