நகைச்சுவை அன்றும், இன்றும்!| Dinamalar

நகைச்சுவை அன்றும், இன்றும்!

Updated : ஆக 30, 2016 | Added : ஆக 29, 2016 | கருத்துகள் (5)
நகைச்சுவை அன்றும், இன்றும்!

தமிழ் திரைப்படங்கள் வண்ணத்துக்கு மாறாத, கறுப்பு - வெள்ளை காலத்தில் கண்ட நகைச்சுவைக் காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தானாக வந்து விடுகிறது. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இப்போதைய நிலையில், வெளியாகும் வண்ணத்தமிழ் திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகள், கற்பனை வறட்சி கொண்டதாக மட்டுமின்றி, காண்பவருக்கு வெறுப்பையும், அருவருப்பையும் ஏற்படுத்தும் படியாகவே உள்ளன. எனினும், ஒரு சில காட்சிகள் ரசிக்கத்தக்கதாக அமைந்துள்ளன. 'கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும், சிந்திக்கத் தக்கதாகவும் அமைந்திருந்தன. அவரின் சிலேடை வசனங்கள், இன்றும் நினைவுகூரத்தக்கவை.வைகை நதியில், நீர் இல்லை என்பதை, 'வை - கை என்று தானே சொன்னாங்க; வை அண்டா, குடம்னா சொன்னாங்க...' எனக் கூறி, வைகை நதியில் கையளவு தான் தண்ணீர் வரும் எனக் கூறியதை மறக்க முடியவில்லையே. கலைவாணர் நடித்த, அலிபாபா படத்தில், 'காதரு' என, இவர் பெயரை கூறி ஒருவர் அழைக்க, 'கத்தி இல்லையே!' என்பார். நல்லதம்பி என்ற படத்தில், கலைவாணருக்கு பாதுகாப்பாக வருபவர்களை பார்த்து, 'நீங்க யார், ஏன் என்னுடன் வாரீங்க?' என்பார். அதற்கு அவர்கள், நாங்கள் உங்கள், 'பாடிகாட்' என்பர். 'உன் பாடியைக் கொண்டு போய், 'பயில்வான்'ட்டக் காட்டு...' என்பார்.ஒரு படத்தில், என்.எஸ்.கிருஷ்ணன், தன் காதலி, டி.ஏ.மதுரத்தை சந்திக்க, அவர் வீடு செல்ல, ஒரு யுக்தி செய்வார். காதலியின் தந்தை அவரின் எருமை மாட்டைக் கயிற்றுடன் பிடித்து வர, பின்னால் வந்த கலைவாணர், மாட்டின் கயிற்றை எடுத்து, தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு வருவார்; மாடு வேறுபக்கம் சென்று விடும். சற்று நேரத்தில், தன் எருமைக்கு பதிலாக, கழுத்தில் கயிற்றுடன் பின்னால் வரும் என்.எஸ்.கிருஷ்ணனைப் பார்த்து விசாரிக்க, 'நான் முற்பிறவியில் தேவலோகத்தில் தேவனாக இருந்தேன். ஒரு சாபத்தால் பூலோகத்தில் எருமையாக பிறந்தேன்; இப்போது, சாபம் நீங்கி விட்டதால், மறுபடியும் தேவனாக மாறிவிட்டேன்' என்பார். இதை நம்பிய அந்த பெரியவர், மகிழ்ச்சியடைந்து, தன் வீட்டிற்கு, என்.எஸ்.கே.,வை அழைத்துச் சென்று உபசரிப்பார். அப்போது, மகள் மதுரத்தை அழைத்து, 'அம்மா இவரு, தேவரு... நம்ம வீட்டிலே, எருமையா இருந்தவரு... சாப விமோசனம் பெற்று மாறிட்டாரு...' எனக் கூறி, 'அம்மா இவருக்கு பால், பழம் கொடும்மா...' என்றதுடன், 'ஆமா, தேவலோகத்திலே பால், பழத்தை எப்படி சொல்வீங்க?' எனவும் கேட்பார். சுதாரித்துக்கொண்ட கிருஷ்ணன், 'பால், பழம் இதை, வினதா - சுதா என்போம்...' என்பார். 'அம்மா, இவருக்கு வினதா - சுதா கொடும்மா...' என்று சொல்லிப் போவார், அந்த பெரியவர்.தன் தந்தையை ஏமாற்றிய என்.எஸ்.கே.,வுக்கு வைக்கோலை கொண்டு வந்து போட்டு, 'ம்... ம்... சாப்பாடு...' என்பார், மதுரம். சற்று நேரத்தில், எருமை, வாசலில் வந்து குரல் கொடுக்க, கிருஷ்ணன் செய்வதறியாது தவிக்க, திரையரங்கமே சிரிப்பால் அதிரும்.கிருஷ்ண பக்தி என்ற திரைப்படத்தில், கலைவாணர் தன் நண்பர் சரவணனாக நடித்திருக்கும், புளி மூட்டை ராமசாமியை, வீட்டிற்கு சாப்பிட அழைத்து வருவார். மனைவி மதுரத்திடம், விருந்து சமைக்கப் பக்குவமாக கேட்பார். 'என்ன இருக்கு விருந்து சமைக்க...' என, மதுரம் கேட்டதும், 'இதோ வாங்கி வரேன்...' என, கலைவாணர் வெளியே செல்வார். மனைவி மதுரம், முற்றத்தில் உரலை வைத்து, மிளகாயைப் போட்டு, உலக்கையில் இடிப்பார். மிளகாய் நெடி தாங்காத சரவணன், 'எதுக்கு இப்படி மிளகாயை இடிக்கிறீங்க...' என, கேட்பார். அதற்கு மதுரம், 'யாரோ என் வீட்டுக்காரருக்கு நண்பராம்; அவர் கண்ணிலே, இந்த மிளகாய்ப் பொடியைப் போட்டு, இந்த உலக்கையாலே, தலையில் அடிக்கணும்னார்; அதனால தான் மிளகாயை இடிக்கிறேன்...' என்பார். அதைக் கேட்ட சரவணன் பயந்து ஓடுவார்.சாமான்களுடன் வந்த கலைவாணர், சரவணன் ஓடுவதைப் பார்த்து மனைவியிடம், 'ஏன் சரவணன் ஓடுகிறான்?' என, கேட்பார். அதற்கு, 'இந்த மிளகாய்ப் பொடியையும், உலக்கையையும் உங்க நண்பர் கேட்டார்; நான் கொடுக்கலை...' என்பார். 'ஐயோ, எதுக்கு கேட்டானோ தெரியலையே?' என கூறிய படி, ஒரு கையில் மிளகாய்ப் பொடியையும், மற்றொரு கையில் உலக்கையையும் எடுத்துக் கொண்டு சரவணனைத் தேடிப் போய், 'சரவணா, உலக்கை, மிளகாய்ப் பொடி...' என்று கூவ, சரவணன் பயந்து ஓட, ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்தனர்.மற்றொரு திரைப்படத்தில், குருகுலத்தில், கலைவாணர் படிப்பார். அங்கே, மேற்கூரையில், ஒரு எலி நுழையும். பாடத்தை கவனிக்காமல், எலி நுழைவதையே பார்த்துக் கொண்டிருந்த கலைவாணரிடம், 'என்ன நுழைஞ்சதா?' என, பாடம் பற்றி குரு கேட்பார். அதற்கு, 'எல்லாம் நுழைஞ்சது; ஆனா, வால் மட்டும் இன்னும் நுழையலை' என்பார்.சிவகவி என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி நடித்த திரைப்படத்தில், தியாகராஜ பாகவதரை தேடி வந்த கலைவாணரை, புலவர் என நினைத்து, வஞ்சி என்ற ராஜ நர்த்தகியான ராஜகுமாரி, தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்து, ஒரு பாடல் பாடும் படி, கலைவாணரை வேண்டுவார். கலைவாணரோ, 'கவலையை தீர்ப்பது நாட்டியக்கலையே' என்ற பாடலை பாடுவார். பாடலைக் கேட்ட வஞ்சி என்ற ராஜகுமாரி, 'இது, அரசவையில் சிவகவி பாடிய பாட்டல்லவா' என்பார். உடனே கலைவாணர், 'என் பாட்டை இங்கேயும் வந்து பாடிட்டானா அவன். இப்படித்தான் என் பாட்டை எல்லாம் எனக்கு முந்திப் பாடுறான் சிவகவி' எனக் கூறி, சமாளிப்பார். வேறொரு படத்தில் கலைவாணரை சந்திக்கும் நண்பர், வேறொரு நண்பரை பற்றி குறைகளை கூறுவார். 'அது இருக்கட்டும்... இப்ப உன் சட்டை பாக்கெட்டிலே என்ன இருக்கு?' என்று கேட்பார். அதற்கு அந்த நண்பர், 'சில காகிதங்கள், பேனா, கொஞ்சம் சில்லரை இருக்குது...' என்பார்.'ஊஹும்... அப்படி சொல்லக் கூடாது. பாக்கெட்டில் இருக்கும் பேனாவில் இங்க் இருக்கா... பேப்பர்ல என்ன எழுதியிருக்குது; பணம், சில்லரை எவ்வளவு இருக்குதுன்னு பார்க்காம சொல்லணும்'ன்னு கலைவாணர் கேட்க, நண்பர் விழிப்பார். அப்போது, 'உன் பாக்கெட்டிலே என்ன எவ்வளவு இருக்குதுன்னு உனக்கு தெரியல; நீ மத்தவங்களை பத்தி குறை கூறுகிறாயே...' என, இடித்துரைப்பார்.என்.எஸ்.கே., நகைச்சுவை காட்சிகள் போல, கவுண்டமணி - செந்தில் கோஷ்டியினரின், 'வாழைப்பழ' காமெடியும், 'ரொம்ப நல்லவன் இவன்; என்ன அடிச்சாலும் தாங்குவான்டான்னு ஒருத்தன் சொன்னான்னு' வடிவேலு அழுது கொண்டே சொல்கிற, ஒரு சில நகைச்சுவை காட்சிகளையும் ரசிக்க முடிகிறது. நகைச்சுவையை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பதை மனதில் வைத்து, தரமான நகைச்சுவை காட்சிகளை எதிர்காலத்தில் தமிழ் திரைப்படங்களில் அளிப்பர் என, நம்புவோம்.(இன்று, என்.எஸ்.கே., மறைந்த நாள்)
என்.ரிஷிகேசன்

csabinaya@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X