இசை அரசர்கள் இருவர்| Dinamalar

இசை அரசர்கள் இருவர்

Added : ஆக 30, 2016 | கருத்துகள் (5)
இசை அரசர்கள் இருவர்

இசை உலகில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகம் முழுவதும் புகழ் பெறலாம் என்பதற்கு உதாரணமாக, பல இசை அறிஞர்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர். அவ்வகையில் நாதசுர இசையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய இராஜரத்தினம் பிள்ளையும், தமிழிசை உலகில் சகாப்தம் படைத்த தண்டபாணி தேசிகரும் தமிழகத்தின் இரு பெரும் இசை வழிகாட்டிகள் ஆவர். இருவருடைய பிறந்த நாளும் ஆகஸ்ட் 27.
தண்டபாணி தேசிகர் : ஞானசம்பந்தர் பாடிய 'அங்கமும் வேதமும்' என்ற தேவாரப்பாடல், ஈசனை மிக அழகாகப் போற்றும் பாடல். இப்பாடல் பிறந்த தலம் திருச்செங்கட்டாங்குடி. இத்தகு சிறப்பு மிக்க தலத்தில் உதித்தவர் தண்டபாணி தேசிகர். இவர் அழகர். அதனால் தான் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். தேசிகர் 5ம் வயதில், அன்னையை இழந்தார். தந்தை இவருக்கு அன்னையாகவும், குருவாகவும் இருந்து தேவாரம், திருப்புகழ் கற்பித்தார். தந்தையின் சகோதரரான சட்டையப்ப நாதசுரக்காரர் இவருக்கு இசையை கற்பித்தார். ஒன்பதாவது வயது முதல் இவர் தேவாரம் இசைக்கத் துவங்கினார். பூவனுார் கோவிலில் ஓதுவாராக இருந்த மாணிக்க தேசிகர் மூலம், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் அறிமுகம் கிடைத்தது. இவரிடம் நான்கு வருடங்கள் இசை பயின்றார். பிறகு லட்சுமணன் செட்டியார் என்பவரின் அழைப்பில், மதுரை தேவாரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரியத் துவங்கினார்.
மதுரையில்... : மதுரைக்கு வந்தது இவரது வாழ்வில், பல திருப்பங்களை ஏற்படுத்தியது. மதுரையில் ராஜராஜேசுவரியின் உற்சவத்தில் தேவாரம் மற்றும் கீர்த்தனைகளைச் சேர்த்து புரட்சிகரமாக நிகழ்ச்சி செய்தார். அதற்கு வந்திருந்த விளாத்திகுளம் சுவாமிகள், சுந்தரேசபட்டர், மதுரை மாரியப்ப சுவாமிகள், மதுரை பொன்னுசாமிப் பிள்ளை ஆகியோர் இவரை பாராட்டினார்கள்.தண்டபாணி தேசிகர், அங்கயற்கண்ணியின் பெயரில் பல பாடல்களைப் புனைந்துள்ளார். தினமும் அங்கயற்கண்ணியைக் காண கோவிலுக்குச் செல்வார். பொற்றாமரைக் குளத்தில் நீராடி, அருகில் இருந்த வேழவேந்தனை தரிசனம் செய்வார். அவ்வேழவேந்தனின் பெயரில் இவர் புனைந்த பாடல்தான் 'சித்தி விநாயகனே' என்று ஜகன் மோகினி ராகத்தில் அமைந்த பாடலாகும்.திருவையாறு தியாகராஜ சுவாமிகளில் உற்சவத்தில், இன்றளவும் அனைவரும் தெலுங்குப் பாடல்களையே பாடி வருகின்றனர். ஆனால் அதில் பங்கு கொண்டு, தமிழ்பாடல்களைப் பாடியவர் தேசிகர். வாய்ப்புகள் நமது வாசல் கதவைத் தட்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். உண்மையிலேயே தண்டபாணித் தேசிகரின் வீட்டு வாயில் கதவினை வாய்ப்புகள் தட்டின. வேல் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் 'பட்டினத்தார்' என்ற திரைப்படத்தை எடுக்க விரும்பினர். இதற்காக அதன் நிறுவனர் வேலுநாயக்கர், மாரியப்பசுவாமிகளைச் சந்தித்து நடிக்கக் கோரினார். அவர் மறுத்து தேசிகர்தான் பொருத்தமானவர் என்று கூறினார். வேலு நாயக்கர், நள்ளிரவில் தேசிகரின் வீட்டு வாயில் கதவினைத் தட்டிச் சம்மதம் கேட்டார். இப்படித்தான் தேசிகர் திரைப்படத்துறையில் சேர்ந்தார். பட்டினத்தார்,வல்லாள மகாராஜா, தாயுமானவர், மாணிக்க வாசகர், நந்தனார், திருமழிசை ஆழ்வார் போன்றவை இவர் நடித்த திரைப்படங்கள்.
இசை பேரறிஞர் : 'ஓர் இரவு' படத்தில் இவர் பாடிய 'வெண்ணிலாவும் வானும்போல' என்ற பாடல் இன்றும் பலரால் விரும்பிக் கேட்கப்படுகிறது.தேசிகர் 1949 முதல் இறைவனடி சேரும் வரை தமிழிசைச் சங்கத்தில் பண் ஆய்வு செய்துள்ளார். 1957ல் இவருக்கு தமிழிசைச் சங்கம் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை வழங்கியது.வானொலியின் நடுவண் அரசின் நிகழ்ச்சியிலும், தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாடிய முதல் கலைஞர் இவர். பல பாடல்களைப் புனைந்துள்ளார். தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற தேசிகர், 1972 ல் மறைந்தார்.திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதசுரம் என்றதுமே நினைவுக்கு வருவது இராஜரத்தினம் பிள்ளை என்ற பெயர் தான். இசையுலகில் நாதசுரத்துக்கு, விசேஷ அந்தஸ்தை தேடியவர் இவர். 27.8.1898ல் திருவாவடுதுறை என்ற கிராமத்தில் குப்புஸ்வாமி பிள்ளை - கோவிந்தம்மாளுக்கு மகனாக பிறந்தார் இராஜரத்தினம். திருக்கோடிக்காவல் வயலின் கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டுக் கற்று, ஏழாவது வயது முதல் பாட்டுக் கச்சேரிகள் செய்யத் தொடங்கிய இராஜரத்தினம் பிள்ளை, பிற்காலம் புல்லாங்குழல் விற்பன்னராக விளங்கிய திருப்பாம்பரம் சுவாமிநாதபிள்ளையுடன் சேர்ந்து பாட்டுக்கச்சேரிகள் நடத்தி வந்தார். பின்னர் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளையிடம் நாதசுரம் பயின்றார்.சில வருடங்கள் கழித்து இராஜரத்தினம், எல்லோரும் வியக்கத்தக்க அளவில் நாதசுர வல்லுனராக ஆனார்.துரிதமான வக்கிரமான பிருகாக்கள், சுருதி சுத்தமும் வன்மையும் நிறைந்த ஒலி, ஆற்றலான பிரயோகங்கள் மணிக்கணக்கில் ராக ஆலாபனை செய்யும் திறமை ஆகியவை எல்லாம் இராஜரத்தினம் பிள்ளையிடம் தாமாக வந்து சேர்ந்தன.
புதுமை காட்டியவர் : கதர்வேட்டி, சட்டை, தலையில் குடுமி என்றெல்லாம் தான் நாதசுரத் தவில் கலைஞர்கள் காட்சி தருவது வழக்கம். அவ்விதமாகவே முதலில் இருந்த இராஜரத்தினம் பிள்ளை, 'கிராப்' வைத்து, ஷெர்வானி உடையணிந்து, ஷூ அணிந்து பழமையை உடைத்தெறிந்தார்.நாதசுரக் கச்சேரி என்றால், பங்குபெறும் கலைஞர்கள் யாவரும் நின்றுகொண்டே நிகழ்த்துவதுதான் வழக்கம். இல்லங்களில் நடைபெறும் திருமணம் போன்ற வைபவங்களின் போது மட்டுமே உட்கார்ந்து வாசிப்பார்கள். மேடை போட்டுத் தான் வாசிக்க முடியுமென்று ஒரு நிபந்தனையை உண்டாக்கி வீதியுலா, ஸ்வாமி புறப்பாடு எதுவானாலும் உட்கார்ந்து வாசிக்க தொடங்கியவர் இராஜரத்தினம்பிள்ளை தான்.அதிகமாக ஸ்வரம் அல்லது பல்லவி வாசிப்பதில் இவருக்கு விருப்பம் குறைவு. அதிலும் விவகாரமாக சுரங்கள் வாசிப்பதை இவர் தவிர்த்தார். ஒரு சில கீர்த்தனைகள் மட்டுமே வாசிப்பார். திரைப்படத்திலும் அடிவைத்த இராஜரத்தினம்பிள்ளை, 'கவிகாளமேகம்' என்ற படத்தில் பாடி நடித்தார்.தனது தோடி ராக ஆலாபனை மூலம், சாதனை செய்து உலகப் புகழ் பெற்றார். தற்போது வாசிக்கப்படுகின்ற இரண்டு கட்டை சுருதி நாதஸ்வரத்தை உருவாக்கியது இவர் தான். நாடு சுதந்திரமடைந்த போது இவருடைய இசை நிகழ்ச்சி புதுடில்லியில் நிகழ்த்தப்பட்டது.நாதஸ்வர இசையால் பண்டிதர் முதல் பாமரர் வரை லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர், 1956ல் இயற்கை எய்தினார். சமுதாயத்தில் நாதஸ்வர கலைஞர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தவர்.
- முனைவர் தி.சுரேஷ் சிவன் இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்மதுரை

94439 30540

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X