'மாஜி' மேயர் செல்லுமிடமெல்லாம் தடை

Added : ஆக 30, 2016
Share
Advertisement
'மாஜி' மேயர் செல்லுமிடமெல்லாம் தடை

மொட்டை மாடியில் துணியை காயப்போட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா. அப்போது படியேறி மேலே வந்த சித்ரா, ''கேள்விப்பட்டியா மித்து... அறநிலையத்துறைல வேலை பார்க்கற அந்த சின்ன அதிகாரியோட பேச்சு, எல்லை மீறி போகுதாம்,'' என்றாள்.
''நானும் கேள்விப்பட்டேன். இப்ப என்ன சமீபத்திய தகவல்?'' - கேட்டாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''அறநிலையத்துறை ஆபீசர்ஸ் மாதாந்திர ஆய்வுக்கூட்டம், சமீபத்துல நடந்துச்சு. இதுல நாலு மாவட்ட அதிகாரிங்க கலந்துக்கிட்டாங்க. ஒன்பது பெண் அதிகாரிங்களும் இருந்திருக்காங்க. கூட்டத்துல, பெண் அதிகாரிங்கள ஒவ்வொருத்தரா எந்திரிச்சு நிற்க வச்சு, திட்டித் தீர்த்துட்டாராம்,'' என்றாள்.
''உயர் அதிகாரின்னா அப்படி கறாராதான் இருப்பாங்க...இதுல என்ன இருக்கு?'' என்று கேட்டாள் மித்ரா.
''அதில்லை மித்து, லேடீச திட்டறதுக்கும் ஒரு எல்லை இருக்கில்ல. 'சும்மா பதுமை மாதிரி பட்டு சேலை கட்டிட்டு வந்து நின்னா பத்தாது; வேலைய
செய்யணும்'ங்கறாராம். இவரு சொல்படி நடந்துக்காத பெண் அதிகாரிங்களை பார்த்து, 'சும்மா லூசு மாதிரி பேசக்கூடாது, போட்ட சாணி மாதிரி இருக்கக்கூடாது'ன்னு தாறுமாறா திட்டுறாராம். இவரப்பத்தி புகார் பறந்திருக்காம்,'' என்றாள் சித்ரா.
''புது ரேஷன் அதிகாரி தன்னோட அறைல உள்ள பொருட்களை, இஷ்டத்துக்கு இடம் மாத்தி தூக்கி போட்டு கடாசுறாராம்,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
''ஏதாவது வாஸ்து சமாச்சாரமா?'' என்று புருவத்தை சுருக்கினாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''சரியா சொன்னே.. இதுவரை இருந்த அதிகாரிங்கள்லாம், மேசைய கிழக்கால பார்த்து போட்டுருந்தாங்க. இவரு வடக்கால பார்த்து, மேசையை திருப்பி போட்டுருக்கார். வாஸ்து சரியில்லையா, அல்லது கலெக் ஷன் சரியில்லையான்னு தெரியலையேன்னு, ஊழியர்லாம் 'கமென்ட்' அடிக்கறாங்களாம்,'' என்று கூறி சிரித்தாள்.
அப்போது வீட்டு பக்கத்தில் உள்ள கோவிலில், 'சரவண பொய்கையில் நீராடி...' என்ற பாட்டு கேட்டது.
''நீ கலெக்ஷன்னு சொல்லும்போதுதான் ஞாபகத்துக்கு வருது. வீட்டு வசதி வாரிய ஆபீஸ்ல, இனி லஞ்ச சமாச்சாரம்லாம் கொஞ்சம் குறையும்னு பேசிக்கறாங்க,'' என்றாள் சித்ரா.
''நம்பிட்டேன்க்கா...நம்பிட்டேன்,''- சிரித்தாள் மித்ரா.
''நம்ப முடியலைதான் மித்து. அங்க வாகன பார்க்கிங்ல இருந்து, ஒரு இடம் விடாம, 12 இடங்கள்ல கண்காணிப்பு கேமரா பொருத்தர வேலை நடக்குது. லஞ்சம், பத்திர மோசடியை தடுக்கத்தான் இந்த புது ஏற்பாடு. போற போக்கைப் பார்த்தால், இனி அந்த ஆபீஸ் கழிவறைல கூட கேமரா வெக்கணும் போல,'' என்றாள் சித்ரா.
''டாய்லெட்லயா...கிணத்தைக் காணோம்னு நடிகர் வடிவேலு தேடுனதை போல, நம்மூர் ஜனங்க, 'டாய்லெட்'டை காணோம்னு தேடுறாங்க தெரியுமாக்கா,'' என்றாள் மித்ரா.
''இந்த கொடுமை எங்கே?'' - சித்ராவுக்கு ஆர்வம் தாங்கவில்லை.
''வீரகேரளத்துல இருந்து வடவள்ளி போற வழில, கணபதி நகர் பக்கத்துல, பொதுக்கழிப்பிடம் ஒண்ணு இருந்துச்சு. 30 வருஷமா பயன்பாடு இல்லாம இருக்குன்னு, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ், நடுராத்திரில இடிச்சு தரைமட்டம் ஆக்கிட்டாங்க. விடிஞ்சு பார்த்த ஜனங்க அதிர்ச்சியாயிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''ம்ம்...அப்புறம்? கேட்டாள் சித்ரா.
''அந்த ஏரியாவுல வீடு கட்டிக்கிட்டு இருக்கற, ஆளுங்கட்சி பிரமுகர் வீட்டுக்கு வழி ஏற்படுத்துறதுக்காக, இடிச்சது, அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு. எதிர்க்கட்சிக்காரங்க சும்மா இருப்பாங்களா...ரொம்ப பழைய கழிப்பறையா இருந்தா, பகல்ல இடிச்சிருக்கலாமேன்னு, தி.மு.க.,காரங்க கேள்வி கேக்குறாங்க. அதுக்கு கார்ப்பரேஷன் அதிகாரிங்க கூலா, 'தேவைன்னா மறுபடியும் கட்டித் தர்றோம்'னு சப்பைக்கட்டு கட்டுறாங்க,'' என்றாள் மித்ரா.
''உருப்படியா எந்த திட்டத்தையும் நிறைவேற்றாம, சப்பைக்கட்டு கட்டுற நம்ம கார்ப்பரேஷனுக்கு, அடுத்து நடக்கப்போற கவுன்சில் கூட்டம்தான் கடைசியா இருக்கும்னு பேசிக்கறாங்களே...,'' என்று கேட்டாள் சித்ரா.
''ஆமாக்கா, அக்டோபர்ல உள்ளாட்சி தேர்தல் நடக்கும்னு அறிவிச்சிட்டாங்க. அக்., 25க்குள்ளே தேர்தல் நடத்தணும்; அதனால, சட்டசபை கூட்டத்தொடர் முடிஞ்சதும், தேதிய அறிவிச்சிருவாங்கன்னு எதிர்பார்க்குறாங்க. நாட்களை எண்ணிப் பார்த்தா, நீ சொன்ன மாதிரி இதுதான் கடைசி கூட்டமா இருக்கும்,'' என்று பதிலளித்தாள் மித்ரா.
''மாநகராட்சில வேற தகவல் எதுவும் இல்லையா மித்து?'' என்றாள் சித்ரா.
''இல்லாமலா...தெற்கு மண்டலத்துக்கு தேவையான ஆட்களை நியமிக்க, உத்தரவு வந்துருக்கு. ஆர்டரை பார்த்து, அதிகாரிகளே அதிர்ச்சியாகிட்டாங்க. 236 பணியிடம் கேட்டு, அரசுக்கு பரிந்துரை செஞ்சு அனுப்புனாங்க. ஆனா, 66 பணியிடம்தான் 'ஓகே' ஆகியிருக்கு. இதுல, உதவி நிர்வாக பொறியாளர் பணியிடம் விட்டுப்போயிருக்கு. இதனால, பதவி உயர்வை எதிர்பார்த்துக்கிட்டு இருந்த அதிகாரிங்க, சோர்வடைஞ்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''இருக்காதா பின்னே?'' வக்காலத்து வாங்கினாள் சித்ரா.
மேலும் தொடர்ந்த மித்ரா, ''பொறியியல் பிரிவுல, இதுக்கு முன்னாடி, 72 வார்டுக்கு, 36 இளநிலை பொறியாளர்கள், ரெண்டு வார்டுக்கு, ஒருத்தருன்னு வேலை பார்த்தாங்க. இப்ப, 12 பணியிடம் காலியா இருக்கு; 24 பேருதான் இருக்காங்க; 100 வார்டை கவனிச்சிக்கணும். ஒருத்தரே, நாலஞ்சு வார்டுகளை கவனிக்க வேண்டியிருக்கு. ஆனா, கூடுதலா, ஆறே ஆறு பணியிடமே அனுமதிச்சிருக்காங்க. இன்னும், 50 பணியிடம் வேணும்; நிர்வாக பொறியாளர் பணியிடமும் கூடுதலா உருவாக்கணும்னு கேக்கறாங்க,'' என்று விரிவான அறிக்கை வாசித்தாள்.
''குறுக்கிட்ட சித்ரா, ''பணி நியமனம்னாலே துட்டு அள்ள போட்டியிருக்குமே,'' என்றாள்.
''சரியா சொன்னேக்கா...உதவி கமிஷனர், உதவி நிர்வாக பொறியாளர் (பிளானிங்) பணியிடத்துக்கு யாரை நியமிக்கலாம்னு, ஆலோசனை நடந்துக்கிட்டு இருக்கு. பதவி உயர்வை எதிர்பார்த்து, பலரும் அரசாணையை நகலெடுத்து வச்சிருக்காங்க. நியமனம் நியாயமா நடக்குமா? இதிலும், துட்டு அள்ள நினைப்பாங்களான்னு, கார்ப்பரேஷன் ஆபீஸ்ல இப்ப இதான் ஒரே பேச்சு,'' என்றாள் மித்ரா.
''உள்ளாட்சி தேர்தல் தகவல் ஏதாவது இருக்கா?'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''ம்ம்...உள்ளாட்சி தேர்தல்ல, எப்படியாவது சீட்டு வாங்கணும்னு குறியா இருக்காராம், மாஜி மேயரு...ஆனா அவரை விட்டா ஆபத்துன்னு, அவர கட்சிய விட்டே நீக்குற வேலையில, கட்சியில உள்ள சில முக்கிய ஆளுங்க மும்முரம் காட்டுறாங்களாம்,'' என்றாள்..
''அடடா...எப்படியும் உள்ளே வந்துரணும்னு துடிக்கற அவரோட ஆசை இந்தவாட்டியும் நிறைவேறாதா?'' என்று கேட்டாள் சித்ரா.
''சந்தேகம்தான். அதுக்கு முன்னோட்டமா, மாஜியோட ஆதரவு கவுன்சிலரு, பகுதி செயலாளருன்னு, நாலைஞ்சு பேரை கட்சிய விட்டு துாக்குனாங்களாம். 'சட்டசபை தேர்தல்ல', சிங்கை தொகுதியில கட்சி தோக்குறதுக்கு, இவங்கதான் உள்குத்து வேல பாத்தாங்கன்னு போட்டு குடுத்ததுதான் காரணமாம். இதனால, விரக்தில இருக்கற மாஜி, அடுத்தபடியா என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டிருக்காராம்,'' என்றாள் மித்ரா.
முந்தைய தினம் காய்ந்திருந்த துணிகளை அள்ளியபடி, இருவரும் கீழே இறங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X