வங்கி துறையை ஆட்டிப்படைக்கும் அரக்கன் வாராக்கடன்!| Dinamalar

வங்கி துறையை ஆட்டிப்படைக்கும் அரக்கன் வாராக்கடன்!

Added : செப் 03, 2016 | கருத்துகள் (3)
வங்கி  துறையை ஆட்டிப்படைக்கும் அரக்கன் வாராக்கடன்!

'சுய உதவிக்குழுக்களின் வாராக் கடன்களை உடனடியாக கண்காணிக்க வேண்டும்; வாராக்கடன், 10 சதவீதத்தை தாண்டியிருந்தால், 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக கடன் பெற்ற உறுப்பினர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும்' என, அனைத்து நகர்ப்புற, மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.இந்த உத்தரவு வரவேற்புக்குரியது தான் என்றாலும், வாசித்தவுடன் சிரிப்பு தான் வந்தது. காரணம், பிரபல நாளிதழ் ஒன்று, 2015 டிசம்பர் 31 முதல், மார்ச் 19, 2016 வரையிலான வாராக்கடன் விபரங்களை அளிக்கக்கோரி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டிருந்ததாம். அதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, 'வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதோரின் வாராக்கடன் பட்டியல் என, எங்களிடம் ஒன்றும் இல்லை. அப்படி தொகுக்கப்படுவது பொதுத்துறை நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்' என்றும் கூறியிருந்தது. வாராக்கடன் என்ற பெயரில் பல நுாறு கோடி ரூபாய் கடன் வாங்கி, 'ஸ்வாஹா' செய்தவர்கள் பட்டியலை இணையதளத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் கோரியும், ரிசர்வ் வங்கி காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிய சுய உதவிக்குழு விபரங்களைச் சேகரிக்கச் சொல்லியுள்ளது.'வருவாய் ஈட்டாத எந்த ஒரு கடனும் வாராக்கடன் எனப்படும்' என்பது, வாராக்கடனுக்கான தற்போதைய விளக்கம். இன்னும் எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், வங்கியில் நாம் வாங்கிய ஒரு சில ஆயிரம் அல்லது லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்த கால தாமதமாகும் பட்சத்தில் ஏலம், ஜப்தி என, வங்கிகள் நம்மை மிரட்டும். 'கடன் தவறியோர்' என, போஸ்டர் ஒட்டி, அசிங்கப்படுத்தும். ஆனால், கோடிக்கணக்கில் கடன் வாங்கியிருப்போர் கடனைச் செலுத்தாமலிருந்தால் அவர்களிடம், 'கடனைத் தாருங்கள்' என, வருடும் வார்த்தைகளால் கேட்கும்; 'நோட்டீஸ்' விடும். அவர் தரவில்லையென்றால் ஒரு கட்டத்தில், 'அவரிடம் கடனை வசூலிக்க முடியவில்லை; அது, திரும்பி வராத கடன்' என, வங்கி சொல்வதற்கான வாய்ப்பும் உண்டு. இல்லையென்றால், அதில் ஒரு பகுதியை வசூலித்து, 'கடனை சரி செய்து விட்டோம்' என, சொல்வதற்கான சந்தர்ப்பமும் அதிகம். இப்படி, கோடிக்கணக்கான ரூபாயை கடன் வாங்கியவர்கள் செலுத்தாத போது, அது வாராக்கடனாகி விடுகிறது. இப்போதெல்லாம் வாராக்கடனை, 'செயல்படாத சொத்து' என, சொல்கின்றனர். சரி... நமக்கு சம்பந்தமில்லாத இந்த வாராக்கடன் குறித்து ஏன் நாம் பேச வேண்டும் என, நீங்கள் கேட்கலாம். வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி நீங்களும், நானும், வங்கியில் சேமித்த பணம், 75 லட்சம் கோடி ரூபாய்; வங்கிகளில், 'டிபாசிட்'டாக இருக்கிறது. அந்தப் பணமும் தான், பெரும் தொழிலதிபர்களுக்கு கடனாகச் செல்கிறது. சிறுகச்சிறுக நாம் சேமிக்கும் தொகையை எடுத்து, ஒரு சிலருக்கு பெரிய தொகையாக வங்கிகள் ஏன் கடன் கொடுக்கின்றன என்றால், கடன் கொடுத்தால் மட்டுமே வட்டி மூலம் வங்கிகள் வருவாய் ஈட்ட முடியும்; இயங்க முடியும்.கடந்த, 2008 மார்ச்சில், 455 கோடி ரூபாயாக இருந்த, பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன், 2014 மார்ச்சில், 2.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆறு ஆண்டுகளில், வாராக்கடன் இந்த அளவுக்கு உயர, பொதுத்துறை வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் விதிமுறைகளை மீறியதே காரணம். பொதுத் துறை வங்கிகளின் பெருங்கடன் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியும், கண்காணிக்கத் தவறிவிட்டது. 'கடந்த, 2013- - 14ம் நிதியாண்டில் பல்வேறு வகைகளில் வங்கிகள் வழங்கிய கடன் தொகை, 2 லட்சத்து, 36 ஆயிரத்து, 600 கோடி ரூபாய். இதில், வசூல் செய்யப்பட்டது, 30 ஆயிரத்து, 590 கோடி ரூபாய் மட்டுமே. 'கடந்த, 2000- - 13 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட, 13 ஆண்டுகளில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை, 2.04 லட்சம் கோடி ரூபாய். இத்தொகையின் மூலம், 15 லட்சம் குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியிலிருந்து, கல்லுாரி கல்வி வரை இலவசமாக, மிகத் தரமான கல்வியை வழங்கியிருக்க முடியும்' என்பது, சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 'கடந்த நிதியாண்டின் முடிவில், ஒட்டுமொத்த வங்கித் துறையில் வாராக்கடன், 3.09 லட்சம் கோடி ரூபாய். இதில், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 86 சதவீதம். வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வாக, வங்கிகளின் நிர்வாக ரீதியில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்றார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.நாடு முழுவதும், 2009-ல், 47 ஆயிரமாக இருந்த வங்கிக் கிளைகள் எண்ணிக்கை, இப்போது, 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. வங்கிகளின் மொத்த லாபமும் அதிகரித்திருக்கிறது. அப்படியிருந்தும் வங்கிகளுக்கு பிரச்னையென்றால், அது வாராக்கடன் மட்டும் தானா?ஒருபுறம் வாராக்கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நேரத்தில், சீரமைப்பு என்ற பெயரில், திரும்பச் செலுத்தக் கூடிய கடனுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன; பலரின் கடன்கள் ரத்து செய்யப்படுகின்றன. 2015 மார்ச், 31 நிலவரப்படி, ஒட்டுமொத்த அளவில், 2.86 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வங்கிகள் மறுசீரமைத்துள்ளனவாம். 'கடன் மறுசீரமைப்பு என்பது வங்கித்துறையில் தற்போது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் அம்சமாக உருவெடுத்துள்ளது' என்கிறார், இன்றுடன் பதவிக்காலம் முடியும், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.ஒரு வங்கியின் செயல் திறனை மதிப்பிடுவதற்கு, லாபத்தை விட, வாராக்கடன்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வாராக்கடன்கள், ஈட்டப்படும் லாபத்தை கபளீகரம் செய்து விடும் வில்லன்; வங்கித் துறையை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய அரக்கன். வாராக்கடன் அளவைக் குறைத்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கான போதுமான தொழில், விவசாயக் கடன்களை இனிமேல் வங்கிகளால் குறைந்த வட்டிக்குக் கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்படும். வாராக்கடன்கள் அதிகரித்தால், வங்கியின் வருவாய் சரிவடைந்து, லாபம் குறையும்; இழப்பையும் சந்திக்கும். ஒரு கட்டத்தில், டிபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாத நிலையும் உருவாகலாம். எனவே, கடன் அங்கீகார முறைகளில் வெளிப்படையான செயல்பாடுகளை அமல்படுத்த வேண்டும். வங்கிகள், கடன் பெறுபவரை வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுப்பதுடன், கடன் வசூலில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே வாராக்கடன்களை பெருமளவில் தவிர்க்க முடியும்.'பொதுமக்களின் டிபாசிட் பணத்தை கையாளும் வங்கிகளின் உயர் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக நடத்தை விதிகள் வரையறுக்க வேண்டும். கடனுக்கான அங்கீகாரம் வழங்கும் குழு அங்கத்தினர்கள் முறைகேடுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்' என்கின்றனர், வங்கிகளின் தொழிற்சங்க தலைவர்கள்.வங்கிகளிடம் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்கிறது, வங்கி ஊழியர் சம்மேளனம். 'வங்கிகளில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவோர் யாரும் தப்ப முடியாது. ஒரு பைசா பாக்கி இல்லாமல் வசூலிக்கப்படும்' என, ஏப்ரல் மாத இறுதியில், அசாமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதியளித்து இருந்தார். அதற்கான நடவடிக்கை துவங்கப்பட வேண்டும்.'வட்டி வீதம் குறைவாக இருந்தாலும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது' என, நடுத்தர வர்க்கம் நம்பிக்கொண்டிருக்கிறது. அவர்கள் நம்பிக்கை பொய்த்து விடக்கூடாது. இது, பல கோடி அப்பாவிகளின் உயிர் சார்ந்த விஷயம் என்பதை அரசு மறந்து விடக்கூடாது. அரசும், வங்கிகளும் இது குறித்து சிந்தித்தல் அவசியம்.இ-மெயில்:

thirugeetha@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X