ஆசிரியர்களைப் போற்றுவோம்! - இன்று ஆசிரியர் தினம் - என் பார்வை| Dinamalar

ஆசிரியர்களைப் போற்றுவோம்! - இன்று ஆசிரியர் தினம் - என் பார்வை

Added : செப் 05, 2016 | கருத்துகள் (1)
ஆசிரியர்களைப் போற்றுவோம்! - இன்று ஆசிரியர் தினம் - என் பார்வை

பாடம் நடத்துபவர் ஆசிரியர்; பாடமாய் நடப்பவர் நல்லாசிரியர். வழிகாட்டியாய் திகழ்பவர் ஆசிரியர்; வாழ்ந்துகாட்டியாய் வாழ்பவர் நல்லாசிரியர். அறியாமை இருளை அகற்றி அறிவு தீபத்தை ஏற்றி வைக்கும் நற்பணியை, ஆசிரியர்களே செய்கிறார்கள். மாண்புமிகு மாணவர்கள் எண்ணும் எழுத்தும் கற்றுத்தரும் ஆசிரியர்கள், சமுதாயத்தின் கண்ணாகவும் கருத்தாகவும் திகழ்கிறார்கள். உலகத்தின் புகழ்பெற்ற மனிதர்கள் யாவரும், அற்புதமான ஆசிரியர்களின் அருமையான மாணவர்களே. ஒல்காப்புகழ் மிக்க தொல்காப்பியத்தைப் படைத்த தொல்காப்பியரை நினைக்கும்போது, அவரது ஆசிரியர் அகத்தியர் நினைவுக்கு வருகிறார். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரை நினைக்கும்போது, அவருக்குத் தமிழ்த்தேன் பருகக் கற்றுத்தந்த அவரது ஆசிரியர் மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவுக்கு வருகிறார். கம்பீரத்தின் அடையாளமாய் திகழ்ந்த சுவாமிவிவேகானந்தரை நினைக்கும்போது, அவரது குரு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவுக்கு வருகிறார். பிளாட்டோவை நினைக்கும்போது அவருடைய ஆசிரியர் சாக்ரடீஸ் நினைவுக்கு வருகிறார். அரிஸ்டாட்டிலை நினைக்கும்போது, அவருக்குப்பாடம் கற்றுத்தந்து உலகியலை உணர்த்திய அவரது ஆசிரியர் பிளாட்டோ நினைவுக்கு வருகிறார். மாவீரன்மகா அலெக்சாண்டரை நினைக்கும்போது, அவருக்குப் பாடம்கற்றுத்தந்த அரிஸ்டாட்டில் நினைவுக்கு வருகிறார். ''நான் வாழ்வதற்காக என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; ஆனால், நெறிமுறைப்படி வாழ, என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்,'' என பெருமையோடு கூறினான் அந்தமாவீரன். பக்குவப்படுத்துபவர்கள் தளராது தினம் உழைத்து, மலராத மலரையும் மலரச்செய்து மணக்கச் செய்பவர்கள் ஆசிரியர்கள். அறியாமை இருளகல ஆழ்ந்து கற்கக் கற்றுத் தருகிறவர்கள் ஆசிரியர்கள். வெறுப்பினை விரட்டிப் பொறுப்பினைக் கற்றுத்தருகிறவர்கள் ஆசிரியர்கள், காலம் தவறாமல் உழைத்து ஞாலம் சிறக்க உதவும் தொழில் வித்தையைக் கற்றுத் தருகிறவர்கள் ஆசிரியர்கள். எரிகிற தீபமே இன்னொரு தீபத்தை ஏற்றமுடியும்.''தன்னம்பிக்கையோடு உழை! தாழ்வு மனப்பான்மையைக் களை!'' என்று ஊக்கத்தின் தாக்கத்தை, நமக்குள் ஏற்படுத்தியவர்கள் நம் அன்புக்குரிய ஆசான்கள். பள்ளத்தில் படுத்துறங்கும் உள்ளத்தையும் பண்படுத்தி அவர்களின் புண்பட்ட இதயத்தையும் புன்னகையால் பக்குவப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். உறுதியைத் தந்தவர்கள் தடையாளக் கற்றுத்தரும் அடையாளமாய் திகழும் கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள், தம் மாணவர்களின் உயரம் கண்டு ஒருநாளும் துயரப்படுவதில்லை. பொறாமைப்படுவதில்லை, மாறாகப் பெருமிதம் அடைகிறார்கள். குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர். ஆசிரியர்கள் அக்குழந்தைகளைப் பெறாத பெற்றோர். தன்னிடம் படிக்கும் அனைவரையும் தன்பிள்ளைகளாக நினைக்கும் தாயுள்ளம் கொண்டவர்கள் ஆசிரியர்கள். நீதியை போதித்தவர்கள் கொன்றை வேந்தனையும், ஆத்திசூடியையும், மூதுரையையும் கற்றுத்தந்து களர்நிலத்திலும் கரும்பாய் நற்சிந்தனைகளைப் பயிரிட்டு அறத்தை அரும்ப வைத்தவர்கள் ஆசிரியர்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற தான்தோன்றித்தனமான வாழ்க்கையை மறுத்து, இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிமுறையோடு வாழக் கற்றுத்தருகிறவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.வெளியே இருக்கும் சிந்தனைகளை உள்ளுக்குள் ஊற்றி வளர்த்ததைவிட, உருத்தெரியாமல் உள்ளுக்குள் உரைந்திருக்கும் திகைப்பூட்டும் திறன்களை தம் மாணவர்களுக்கே தெரியப்படுத்தி, சிகரம் எட்ட சீக்கிரம் உதவுபவர்கள் ஆசிரியர்கள்.சர்வபள்ளி தந்த சாதனை ஆசிரியர் ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கி, இந்தியாவின் இனிய குடியரசுத் தலைவராய் உயர்ந்த சர்வபள்ளி தந்த சாதனையாளர், டாக்டர் ராதாகிருஷ்ணன், 1888 செப்டம்பர் 5 ல் திருத்தணிக்கு அருகிலுள்ள சர்வபள்ளி எனும் ஊரில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறிய மாமனிதர். மடைதிறந்த வெள்ளமென வகுப்பில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திய அந்த மாமேதை, எளிமையாக வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாமல் வாழ்ந்தார். மாணவர்களால்தான் நாளைய பாரதத்தை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். பலநாட்கள் மாணவர்களுக்கு உணவளித்த உயரிய உள்ளமுடையவராகத் திகழ்ந்தார். பள்ளி ஆசிரியராய் பணியாற்றியபோதும், தினமும் புதிது புதிதாய் நுால்கள் படித்தும், நுால்கள் படைத்தும் ஆசிரியர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினார்.ஆசிரியர்கள் படிப்பாளியாக இருந்தால் மட்டும் போதாது, தன் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும், உயரிய படைப்பாளிகளாகவும் திகழவேண்டும் என்று கூறி, தாமே முன்னுதாரணமாய் விளங்கினார்.அவர் எழுதிய 'இந்தியத் தத்துவத் தொகுதிகள்', 'கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு', 'இந்தியச் சமயங்கள்', 'சமயமும் சமூகமும்', 'உண்மையான கல்வி' போன்ற நுால்கள், உலகநாடுகளின் பார்வையில் இந்தியாவின் புகழை உயர்த்தின.நேர்மையையும், சத்தியத்தையும், ஒழுக்கத்தையும், நேரம் தவறாமையையும், தேசப்பற்றையும் வாழ்நாளின் இறுதி நிமிடம்வரை கடைப்பிடித்தார். அவர் பேசாத பல்கலைக் கழகங்களே இல்லை எனும் அளவு புகழ்மிக்க மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் கண்டு, மலைத்துப்போன உலகப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு, 'தகைசால் டாக்டர்' பட்டங்களை வழங்கிப் பாராட்டின. குடியரசுத் தலைவரான பின்னும்கூட அவர் மானசீகமாக ஓர் நல்லாசிரியராகவே இருந்தார். அவர் குடியரசுத் தலைவராய் இருந்தபோது தேசிய ஆசிரியர்கள் சங்கம், 'அவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும்' என்று வைத்த கோரிக்கையை ஏற்று, அப்போதைய பிரதமர் நேரு, செப்டம்பர் 5யை ஆசிரியர் தினமாகக் கொண்டாட ஆணையிட்டார். அவர் பெயரால் நல்லாசிரியர் விருதுகள், சிறந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்படுகின்றன.குடியரசுத் தலைவராக இருந்தபோது கிடைத்த மனநிறைவை விட, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது அப்துல்கலாம், அதிக மனநிறைவைப் பெற்றார். பார்க்கிற பார்வையில் பணிவிருந்தால், செடிகளில்கூட செய்தி இருக்கும். எல்லோரும் இறைவன் எழுதிய இனிய புத்தகங்களே.சிலபேரை வாசிக்கிறோம், சிலபேரை நேசிக்கிறோம், சிலபேரைப் படிக்கிற வேகத்தில் கிழித்துப்போட்டு விடுகிறோம். எப்போதும் மாணவனாக இருந்தால், எதையாவது நாம் கற்றுக்கொண்டே இருக்கலாம். கற்றல் சிறந்தது, கற்றபடி மாண்போடு நிற்றல் அதைவிடச் சிறந்தது. கற்றபடிச் செம்மையாய் வாழும் ஆசிரியர்களைப் போற்றுவோம். - பேராசிரியர் சவுந்தர மகாதேவன் திருநெல்வேலி 99521 40275

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X