சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வேம்படித்தாளம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான, வட்டப் புதிர்நிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், சேலம் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவைச் சேர்ந்த, சுகவனமுருகன், விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன் சீனிவாசன் ஆகியோர், வேம்படித்தாளம் என்ற கிராமத்தில், அருகருகே இரண்டு புதிர்நிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து, சுகவனமுருகன் கூறியதாவது: நுழைந்த பின் வெளியேற முடியாத, சிக்கலான ஒருவழிப் பாதை அமைப்பின் மூலம் மையப்பகுதியை அடையும் முறைக்கு புதிரம் அல்லது புதிர்நிலை என்று பெயர். தற்காலத்தில், சிறுவர்களின் அறிவுக்கூர்மை, மனம் ஒருநிலைப்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், வழி தவறிய சிறுவனை வீட்டில் சேர்ப்பது, முயலுக்கு கேரட் கொடுப்பது போன்ற ஓவியங்கள் மூலமும், சிறிய குண்டுகளை, பிளாஸ்டிக் தடுப்புகளைக் கடந்து, மையத்தில் சேர்ப்பதைப் போன்றும், புதிர்நிலை போதிக்கப்படுகிறது. நம் நாட்டில், பழங்காலத்திலேயே, புதிர்நிலை சார்ந்த கணித அறிவு இருந்துள்ளதை, மகாபாரதப் போரில், அபிமன்யு வகுக்கும் சக்கரவியூகம் மூலம் அறிய முடிகிறது.ஆய்வு கால துவக்கத்தில், வட இந்தியாவில் மட்டுமே புதிர்நிலைகள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், தென்னிந்தியாவில், அவை குறித்த அறிவு இல்லை என்றே கருதப்பட்டது. கடந்த, 1974ல், கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்களும், 2014ம் ஆண்டு, தர்மபுரி கம்பையநல்லுாரில் கண்டுபிடிக்கப்பட்ட சதுரப் புதிர்நிலையும், அந்த கருத்தை தகர்ப்பவையாக அமைந்தன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள, வேம்படித்தாளம் என்னும் வேம்படித்தாவள புதிர்நிலை, உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் ஒன்றாகும். அது, 15 மீட்டர் விட்டம், 140 மீட்டர் சுற்றளவு, 700 சதுர அடி பரப்பளவு கொண்டது. புதிர்நிலைகள் இதுவரை, வணிக வழிப்பாதைகளின் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதை போன்றே, இதுவும், அரிக்கமேடு செல்லும் பெருவழிப்பாதையின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பழமையான இந்த புதிர்நிலைக்கருகில், 30 ஆண்டுகளுக்கு முன், மற்றொரு புதிர்நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழமையான புதிர்நிலை, வழிபாட்டிற்காக பலமுறை, கற்களை கலைத்து கட்டப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. அவ்விரு புதிர்நிலைகளுக்கு அருகில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சடங்கு மேடு ஒன்று உள்ளது. அதில் கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள் கிடைக்கின்றன. அவை, 2,000 ஆண்டுகள் பழமையானவை. அவ்விரண்டு புதிர்நிலைகளிலும், அமாவாசை, பவுர்ணமி நாட்களில், அப்பகுதி மக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது. அப்போது, பெருங்கற்கால மேட்டில் இருக்கும் அம்மன் கோவிலிலும் வழிபாடு நடைபெறுகிறது.
என்னென்ன வடிவங்கள்? :
● பாறை ஓவியங்களில் உள்ள புதிர்நிலைகள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை ● தெற்கு கோவாவின், பன்சாய்மோல் பகுதியில் உள்ள, பெருங்கற்கால கீறல் ஓவியத்தில், ஏழு நிலைப்பாதைகள் உள்ளன ● புத்த மதத்தின் ஒரு கூறான தாந்த்ரீக பவுத்தத்தில், புதிர்நிலைகள் உள்ளன ● சுவஸ்திகம் போன்றே இவையும், மதங்களைக் கடந்தது ● இதுவரை, வட்டம், சுருள்வழி, சதுரம், செவ்வக வடிவங்களில், புதிர்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
வட - தென் ஒப்பீடு : வேம்படித்தாவளம் கோட்டைப்புதுார் புதிர்நிலை, ஒடிசா மாநிலம், ராணிபூரில் உள்ள, 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஜஹாரியாவின் சவுன்சாத் புதிர்நிலையை ஒத்துள்ளது. என்றாலும், அது, அளவில் சிறியதாகும். வலதுபக்க நேர் நுழைவுள்ள புதிர்நிலையியை, கர்ப்பிணிகள் வலம் வந்தால், குழந்தைப்பேறு நலமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. பழங்கால, ஏழு நிலைகளைக் கொண்ட புதிர்நிலைகளுக்கும், பிற்கால, ஏழு பிரகாரங்களுடன் கோவில்கள் அமைப்பதற்கும் இடையில், பண்பாட்டு தொடர்புகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தமிழகத்தில் எங்கெங்கு?
● கிருஷ்ணகிரி வட்டப் புதிர்நிலை தான், முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தென்னிந்திய புதிர்நிலை ஆகும் ● திருப்பூர் மாவட்டம் கெடிமேடு என்ற இடத்திலும், தருமபுரி மாவட்டம், கம்பையநல்லுாரிலும், நீள்சதுரப் புதிர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன ● கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள பண்டைய வணிகப் பெருவழியான வீர
நாராயணப் பெருவழியில், ஏழு சுற்றுக்கோட்டை புதிர்நிலை உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE