நமக்கு துணை நல்ல நூல்கள்| Dinamalar

நமக்கு துணை நல்ல நூல்கள்

Added : செப் 07, 2016 | கருத்துகள் (1)
நமக்கு துணை நல்ல நூல்கள்

புத்தக படிப்பை இன்றைய இளைய சமுதாயத்திடம் கொண்டு செல்வதற்கு, புத்தகத் திருவிழாக்கள் உதவி செய்கின்றன. நுால்கள் மின்னாக்கம் செய்யப்பட்ட பின்னரும், அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் படிக்கும் அந்த ரசனையும் சுகமும் அனுபவிப்பவரே உணரமுடியும். ஒவ்வொரு நுாலுமே அந்த எழுத்தாளர்களின் உணர்வுகளை நமக்குள்ளே கடத்திவிடும் நல்ல கடத்திகள் என்றால் அது மிகையில்லை. படிக்கும் பழக்கத்தை அன்றாட பழக்கங்களில் ஒன்றாக்கி விட்டோம் என்றால், நம்மைவிட சிறந்த அறிவாளிகள் உலகில் யாரும் இருக்க முடியாது. “ மனதை உருக்கி என்னைக் கட்டிப்போடும் நல்ல நூலை நான் படித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென மரணம் வந்து அந்த நுால் எனது மார்பின்மேலே விழுந்து நான் மரணத்தைத் தழுவினேன் என்றால் அதுதான் எனக்கு ஒரு நிம்மதியான மரணமாக இருக்க முடியும்” என்றார் நேரு. 'ஒரு நுாலகம் திறக்கப்படும்போதுநுாறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன' என்ற பிரபலமான வாசகத்தை உதிர்த்தவர். இந்த சமுதாயத்தில் நாம் மதிக்கும் தலைவர்கள் எல்லோரும், புத்தகம் படிப்பதை தங்கள் கடமைகளில் ஒன்றாக கடைபிடித்து வந்துள்ளனர். அதைக் கொண்டே வாழ்க்கையை வென்றுள்ளார்கள்.
'எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசமேஎல்லையில்லாத மகிழ்ச்சியடையும்'என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. இந்தச் சமூகத்தின் திறவுகோல் அறிவார்ந்த எழுத்தாளர்களிடமே உள்ளது என்பது உலகம் ஏற்றுக் கொள்ளும் உண்மை.
நெம்புகோல்கள் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் நம்மை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவம், நுால்களுக்கும் எழுத்தாளர்களுக்குமே உண்டு. உலகின் தலைசிறந்த நுால்கள் அத்தனையும் அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் ஒரு பறையாகவே பார்க்கப்படுகிறது. நுால்கள் என்பது, வெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்ற அளவிலே மட்டும் பார்த்துவிடக்கூடாது. அது சமூகத்தை புரட்டிப்போடும் நெம்புகோல்கள் என்பதை உணர வேண்டும் ஒவ்வொரு நாளும் புத்தகம் படிக்க ஒரு நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் எப்பாடுபட்டாவது நமது வாசிப்பை மேம்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் நமக்கு பிடித்தமான, எளிய நுால்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படியே தொடரும்போது ஒரு காலகட்டத்தில் அது பழக்கமாகிவிடும். இதில் லயித்து கரைந்து போகும் இன்பத்தை வேறு ஏதும் தந்திட இயலாது.
'அறிவை விரிவு செய்' என்பான் பாரதி. எட்டயபுர அரண்மனையில் மிகப்பெரிய நுாலகம் பாரதியால் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு அரிய நுால்களை வாங்கி, அதை அப்படியே அடுக்கி வைத்துப் பார்ப்பதில் அத்தனை பெரிய ஆனந்தம் பாரதிக்கு இருந்தது. வாங்கிய புத்தகங்களை பெருமித உணர்வோடு அரண்மனைக்கு வண்டியில் கொண்டு வந்து இறக்கி, அதை குழந்தைகள் போல துாக்கி ஒவ்வொரு புத்தகங்களாக பிரித்து படிக்க ஆரம்பிக்கையில், அவனது முகத்தில் தெரித்த ஞானத்தை உணர்ந்தவர்களே அறிய முடியும். உயிரை விட மேலானது : பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நுால்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்என்பான் பாரதி. உலகின் பல்வேறு கலாசாரங்களையும் பண்பாட்டையும் நமக்கு அறிவிக்கும் நுால்களை, நம்முடைய உயிரை விட மேலானதாக கருத வேண்டும் என்பான் பாரதி. பிற மொழி இலக்கியங்களையும், செய்திகளையும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழில் அவற்றை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும். தமிழிலும் இறவாத புகழுடைய நூல்கள் புதிதாக இயற்றப்பட வேண்டும் என்று கூறியதோடு, ஷெல்லிதாசன் எனும் பெயரில் ஷெல்லியின் கவிதைகளையும் திலகருடைய கட்டுரைகள் ரஷ்யப் புரட்சி பற்றிய சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை பாரதிக்கு உண்டு. ஒவ்வொரு நாளும் அவன் படித்ததோடு மட்டும் இல்லாமல், படித்த நுால்களை அருகில் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் நம்முடைய மனம் சோர்வடையும்போதும், கலங்கி நிற்கும்போதெல்லாம் நமக்குத் துணையாக இருப்பது மிகச்சிறந்த நுால்களே. சில புத்தகங்கள் எழுத்தாளருடைய பல வருடத் தவம். அவர்களுடைய அனுபவங்களையும், நம்பிக்கையையும் நம்மிடையே விட்டுச் செல்வதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு குறள் போதும் : ஒரு குறள் போதும் என் வாழ்வு முழுக்க வாழ்ந்து விடுவேன் என்பார் புத்தகப்பிரியரும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம். அவர் மிகவும் நேசித்த நுால்கள் திருக்குறளும், பாரதியின் கவிதைகளும். வீட்டில் சிறிய நுாலகம் அமைக்க வேண்டும் என்று மாணவர்களிடம் வேண்டுகோள் விடுப்பார். அரண்மனை நூலகத்தில் ஏராளமான நுால்களைச் சேகரித்து வைத்ததாலே, அக்பர் மிகச்சிறந்த சான்றோராக விளங்கினார். வாசிப்பு நமக்கு நாள்தோறும் புதிய அனுபவங்களைத் தந்து கொண்டெ இருக்கும். நல்ல நூல்களை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய புதிய உணர்வுகளால் நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். வாசிப்பின் அனுபவம் அதை உணர்ந்தவர்களுக்கே புரியும் கிரேக்க நாட்டு சிந்தனையாளர் சாக்ரடிஸ், மரணதண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்கு கொடுக்கப்படும் வரை படித்துக்கொண்டே இருந்தாராம். துாக்குமேடைக்குச் செல்லும் முந்தைய நாள் இரவு வரை படித்துக்கொண்டிருந்த பகத்சிங் வரலாறு நாம் அறிவோம். லுபியா நாட்டு புரட்சியாளர் உமர் முக்தர் தனது முகத்தில் துாக்கு கயிறு மாட்டும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். லண்டன் நுாலகத்தில் இருபது ஆண்டுகாலம் படித்து ஆய்வுமேற்கொண்ட காரல்மார்க்ஸ், பின்னாளில் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் தந்தையாக கருதப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாக படிப்பதையும் படித்ததைப் பற்றி சிந்திப்பதிலும் செலவிட்டார். இப்படி அனைத்து தலைவர்களும் புத்தக படிப்பில் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர் என்பதை வரலாறு சொல்கிறது.
எது சிறந்த புத்தகம் : சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ அட்டைப்படத்திலோ அல்லது தலைப்பிலோ இல்லை. அது வாசிப்பவரின் மனதிலே கலக்க வேண்டும். அவருக்கு ஏதாவது ஒரு வகையில் நெருக்கமாக வேண்டும். அவருடைய மனதை ஆள வேண்டும். அப்படிப் பட்ட புத்தகங்களைத் தேடுங்கள். ஏதேனும் ஒரு புத்தகம் உங்களை மாற்றலாம். அது எந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அது உங்களுக்காக காத்திருக்கும். அதைத் தேடிச் செல்லுங்கள். உங்கள் அறிவு அனைத்துமே புத்தகங்கள் தந்தவை என்பதை மறந்துவிடக்கூடாது. நல்ல புத்தகங்களுக்கும் அதை எழுதிய எழுத்தாளருக்கும் நன்றி சொல்லுங்கள். முடிந்தால் அந்த நல்ல நுால்களை நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் படிப்பதற்காக பரிந்துரை செய்யுங்கள் . நீங்கள் படித்த, இன்றளவும் ஏழ்மை நிலையிலுள்ள உங்கள் பழைய பள்ளிக்கூடத்திற்கோ அல்லது உங்கள் பகுதியிலுள்ள நுாலகங்களுக்கோ புத்தகங்களை பரிசாக வழங்குங்கள்!
- முனைவர்.நா.சங்கரராமன்

குமாரபாளையம், 99941 71074

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X