கத்தியின்றி, ரத்தமின்றி சுகமளிப்பவர் இன்று பிசியோதெரபிஸ்ட் தினம்| Dinamalar

கத்தியின்றி, ரத்தமின்றி சுகமளிப்பவர் இன்று பிசியோதெரபிஸ்ட் தினம்

Updated : செப் 08, 2016 | Added : செப் 08, 2016 | கருத்துகள் (1)
 கத்தியின்றி, ரத்தமின்றி சுகமளிப்பவர்  இன்று பிசியோதெரபிஸ்ட் தினம்

ஒவ்வொரு மருத்துவமனையிலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பிசியோதெரபிஸ்ட் களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இது முற்றிலும் கடைபிடிக்கப் படவில்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கு காரணம்

பிசியோதெரபிஸ்ட்களின் மகத்துவத்தை நாம் அறியாததுதான். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில், பிசியோதெரபிஸ்ட்களுக்கு உரிய இடம் வழங்கப்படுகிறது.கத்தியின்றி, ரத்தமின்றி உடல் சிக்கல்களை தீர்க்கவல்லவர்கள் பிசியோதெரபிஸ்ட்கள்.

மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட சிகிச்சைகளுக்குப் பின், ஒரு மனிதன் பாதி குண
மடைகிறான். அவனை, முழுமையாக குணமடையச் செய்யும் இடத்தில் பிசியோதெரபிஸ்ட்கள் உள்ளனர். நான்கரை வருட படிப்புடன், சிறந்த அனுபவம் பெற்ற ௨௫ ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசியோதெரபிஸ்ட்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். ஆனால், இத்தகைய சிறப்பு உள்ளவர்களுக்கு, மருத்துவம், நர்சிங் போன்றவற்றுக்கு இருப்பது போல, கவுன்சில் கூட கிடையாது.அரசு
மருத்துவமனைகளில் உள்ள பிசியோதெரபிஸ்ட் காலியிடங்கள் நிரப்பப்படாததால்,
பல்லாயிரம் இளைஞர்கள் படித்து விட்டு வேலையின்றி தவிக்கின்றனர்.

என்ன சிகிச்சை : இனி, பிசியோதெரபிஸ்ட்களின் சிகிச்சை முறைகள் குறித்து சிறிது
அறியலாம். குறிப்பாக இன்றைய இளைஞர்களை மிகவும் பாதிக்கும் தண்டுவட பாதிப்பினை எடுத்துக் கொள்வோம்.நமது உடலின் இயக்க மற்றும் உணர்வு நரம்புகளை, மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொகுப்பு தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடல் இயக்கத்தை மூளையின் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மூளையிலிருந்து வரும் நரம்பு தொகுப்பு, நமது நடு முதுகில் கழுத்திலிருந்து கீழ் முதுகு வரை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள 33 தண்டுவட எலும்புகளுக்கிடையே உள்ளது.தண்டுவட நரம்பு தொகுப்பு, நமது தண்டுவட எலும்புகளுக்கிடையில் பாதுகாப்பாக உள்ளது. எனினும் விபத்துகளின் போது தண்டுவட எலும்பு முறிவதினால், தண்டுவட நரம்பு, உடைந்த எலும்புகளுக்கிடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் அழுத்தப்படுகிறது. இதனால், நரம்பு அழுத்தப்பட்ட இடத்திற்கு கீழ் உள்ள உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடுகிறது.

சில நேரங்களில் தண்டுவடத்தில் ஏற்படும் கிருமி தாக்குதல், கட்டியினால் ஏற்படும் அழுத்தம் மற்றும் சில நோய்களினாலும் தண்டுவட நரம்புகளில் தடை ஏற்படலாம். பெரும்பாலும், இளம் வயதினர் மிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் தண்டுவட பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பாதிப்பு எப்படி? :
பாதிப்புகள், முழுமையான செயல் இழப்பு, பகுதி செயல் இழப்பு என இரு வகைப்படும். தண்டுவட முறிவின் தன்மையை பொறுத்து, உடல் இயக்க செயல்பாடுகள் திரும்ப பெறுவது
மாறுபடும். பாதிப்புக்குப் பின், முறிவடைந்த பகுதிக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் தசைகளிடையே இயக்கமின்மை, தோலில் உணர்வு தன்மையின்மை போன்றவை ஏற்படுகிறது. மலம், சிறுநீர் செல்வதிலும் குறைபாடு ஏற்படலாம்.

தண்டுவட நரம்பு மண்டலத்தில் அழுத்தம் மட்டும் இருந்து அதை நிவர்த்தி செய்தால், அதன்பின் பிசியோதெரபி செய்து நமது இயக்கத்தை முழுமையாக திரும்ப பெறலாம். சில சமயங்களில்
தண்டுவட நரம்பு முழுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தால், முழு இயக்கம் திரும்ப பெறுவதில் தடை இருக்கலாம்.தண்டுவட எலும்பு முறிவு கழுத்தில் ஏற்பட்டால், அவருடைய இரண்டு கைகள் மற்றும் கால்கள் செயல் இழந்து காணப்படும்.

மேலும் உடலில் மார்பு, வயிறு மற்றும் முதுகு முழுவதும் உணர்ச்சி இன்மை ஏற்படலாம். மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சு விடுதல் மற்றும் உணவு விழுங்குதலிலும் சிரமம் இருக்கலாம். கழுத்து எலும்புக்கு கீழ் உள்ள தண்டுவடம் பாதிக்கப்படும் போது இரண்டு கால்கள், உடல் மற்றும் இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். நரம்பியல் மருத்துவரை அணுகினால், அவர்
உங்களுடைய தண்டுவட நரம்புகளின் செயல்பாடுகளை சோதனை செய்து உங்களின் நிலை பற்றிய விளக்கம் கொடுக்க முடியும்.

தசையை வலுவாக்க...

தண்டுவட முறிவுக்கு பின், பாதிக்கப்பட்டவருக்கு படுக்கை புண் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தங்களுடைய படுக்கை மற்றும் இருக்கையை சரிபார்க்க வேண்டும். ஒரே நிலையில் இல்லாமல், நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். முறையான பிசியோதெரபி சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய வயது, தண்டுவட முறிவின் அளவு மற்றும் தண்டுவட நரம்புகளின் செயல்பாடுகளை பொறுத்து, பிசியோதெரபி சிகிச்சை மூலம் உங்கள் தசைகளை செயல்படுத்தவோ, வலுவாக்கவோ முடியும்.

தங்களுடைய தண்டுவட முறிவின் அளவை பொறுத்து முன்னேற்றம் மாறுபடும். சிலரால் ஒரு ஆண்டிற்குள்ளாகவே முழுமையாக, முன்பு போல் நடக்க முடியும். சிலருக்கு, இரண்டு, மூன்று வருடங்களில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்படும். சிலர் சிறு உபகரணங்கள் மூலமாகவே நடக்க முடியும். சிலருக்கு சக்கர நாற்காலிகள் தேவைப்படும்.

முழுமையாக தண்டுவட முறிவு ஏற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், தன்னுடைய வாழ்க்கையை நடத்திட கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான, பயிற்சி, ஆலோசனை மற்றும் விளக்கங்களை பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு துறை மருத்துவரால் தர முடியும்.

சக்கர நாற்காலிகள் :

நீங்கள் உங்களுடைய தேவையை தீர்மானித்து பின் உங்களுக்கென அளவெடுத்து செய்யப்படும் சக்கர நாற்காலி உதவியால், வீட்டிற்குள்ளாகவோ அல்லது அலுவலகத்திற்கோ தாங்களாகவே சென்று வேலை செய்ய முடியும். சாலையில், தானாக இலகுவாக செல்ல உதவி செய்யும் வகையிலான சக்கர நாற்காலிகளும் உள்ளன.

மேலும், உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால், விளையாட்டில் பங்கு பெற ஏதுவாகவும் சக்கர நாற்காலிகள் உள்ளன. சக்கர நாற்காலிகள் அவற்றை உபயோகிப்பவர்களுக்காகவே பிரத்யேகமாக அளவெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சரியாக அளவெடுத்து, நாற்காலிகளை செய்து கொடுப்பதற்காகவே தகுதி பெற்ற நிபுணர்கள் உள்ளனர்.

எதையுமே முடியுமா என்று யோசிக்காமல் முழு முயற்சி செய்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றம் என்பது உடல் மட்டும் சார்ந்தது அல்ல. மன உறுதியையும் சார்ந்தது. மனதை முடங்க விடாமல் முடுக்கி விடுங்கள். சுற்றுப்புறத்தில் உள்ள தடைகளை கணக்கில் எடுக்காமல், அதை மாற்றி அமைக்க முயற்சி செய்யுங்கள். மாற்றத்தை நாம்தான் உருவாக்க வேண்டும். தண்டுவடம் முறிந்தாலும் தன்னம்பிக்கை முறிய கூடாது.

- டாக்டர். இ. முகமது அமீர் உசேன்,
பிசியோதெரபிஸ்ட்,மதுரை,

98435 29550

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X