புதுடில்லி: ''இந்தியாவுக்கு வர விரும்புகிறேன்; ஆனால் என், 'பாஸ்போர்ட்' ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு வர முடியவில்லை,'' என, டில்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப் பட்டுள்ள பதிலில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தன்னுடைய, 'கிங்பிஷர்' நிறுவனத்தின், 'லோகோ'வை பயன்படுத்திக் கொள்ள, வெளிநாட்டு நிறுவனத்துடன் விஜய் மல்லையா ஒப்பந்தம் செய்தார். இதற்காக, இரண்டு லட்சம் டாலர் கொடுத்துள்ளார். வெளிநாட்டு பணப் பரிமாற்ற கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறாமல், பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக விஜய் மல்லையா மீது, 2000ல், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகததால், விஜய் மல்லையா மீது டில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், மல்லையா நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்து, கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு, ஜூலை, 9ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மல்லையாவுக்கு நேரில் ஆஜராக அளிக்கப்பட்ட விலக்கை, கோர்ட் ரத்து செய்தது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்
உத்தரவிட்டது. இந்த நிலையில், இ - மெயில் மூலம் மல்லையா அனுப்பியுள்ள பதில், கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மல்லையா கூறியுள்ளதாவது:
நான், இந்தியாவுக்கு வர விரும்புகிறேன்; ஆனால், என்னை விசாரிக்காமல், ஏப்ரல், 23ம் தேதி, என்னுடைய பாஸ்போர்ட்டை, இந்திய அரசு ரத்து செய்துள்ளது; அதனால், இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'மல்லையா மீது பல்வேறு கோர்ட்களில், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தன் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது குறித்து பதில் மனுவில் முதல் முறையாக அவர் கூறியுள்ளார். 'இதுகுறித்து ஆராய்ந்து பதில் அளிக்கப்படும்' என, அமலாக்கத் துறை சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.