கண்களை போல பாதுகாக்க வேண்டும் ஏரிகளை!| Dinamalar

கண்களை போல பாதுகாக்க வேண்டும் ஏரிகளை!

Added : செப் 10, 2016 | கருத்துகள் (2)
கண்களை போல பாதுகாக்க வேண்டும் ஏரிகளை!

எதிர்கால சந்ததியினருக்கும், நமக்கும் நம் முன்னோர் விட்டு சென்ற முக்கியமான இயற்கை வளம், ஏரிகள். தென் மாநிலங்களில், ஏரிப் பாசனத்தை பிரதானமாக கொண்ட மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகாவுக்கு அடுத்து தமிழகம் விளங்குகிறது. அரசு பதிவேடுகளின் படி, தமிழகத்தில், 39 ஆயிரத்து, 400 ஏரிகள் உள்ளன. இவை நீர் பாசனத்தையும், கிராமப்புறங்களின் நீர் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. பொதுவாக, ஒவ்வொரு ஏரியும், அப்பகுதியின் புவி அமைப்பைப் பொறுத்து அமைந்துள்ளது. அதாவது, நீர் பிடிப்புப் பகுதி, நீரை சேமித்து வைக்கும் கரைகள், நீர் நிற்கும் பகுதி, பாசனத்திற்கும் மற்றும் ஏனைய தேவைகளுக்கும் உகந்ததாக ஏரிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், ஏரிகளின் தற்போதைய நிலையை பார்த்தால், மிகவும் பரிதாபமாக உள்ளது. பெரும்பாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய ஏரிகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளும், பணம் படைத்த பெரும் புள்ளிகளும் வியாபாரத்திற்காகவும், தொழிலை வளர்த்து, அதிக லாபம் ஈட்டவும், ஏரிகளை ஆக்கிரமித்து, அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டி, நீர் சேமிக்கும் வாய்ப்பை சீர்குலைத்து விட்டனர். இந்நிலை நீடித்தால், இன்னும் பத்தாண்டுகளில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலுமே நீராதாரம் அரிதாகி, வெளிநாடுகளில் இருந்து தண்ணீரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, ஏரிகளை பாதுகாத்தால் தான், பெருகி வரும் மக்கள்தொகையின் தேவைக்கேற்ப நீரை சேமிக்க முடியும். அதற்காக, சில பணிகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.அனைத்து ஏரிகளையும் கண்டறிந்து, அவற்றின் அளவு, ஏரிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதி, கரைகள், நீரெடுக்கும் பகுதி, உபரிநீர் வெளியேற்றும் மதகு ஆகியவற்றின் உண்மையான அளவுகளையும், ஏரியின் மொத்தப் பாசனப் பரப்பையும் கணக்கெடுக்க வேண்டும். இதன் மூலம், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; இதற்காக, நீதிமன்றத்தின் உதவியையும் நாடலாம். ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிகளை செப்பனிட்டு, பாதுகாக்க வேண்டும். ஏரிகளை துார் வாருவதற்கு, கடந்த காலத்தில் கிராமங்களில் செயல்பட்ட, 'குடி மராமத்து' திட்டத்தை, இந்த காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து, ஏரியை சுற்றி வசிப்பவர்கள், விவசாயிகளை இணைத்து, ஆண்டுக்கு இரு முறையாவது ஏரிகளை துார் வார வேண்டும். நிலத்தடி நீரின் ஆதாரமாக விளங்கும் ஏரிகளை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், அதன் பாசனதாரர்களைக் கொண்ட அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் ஏரிகளின் பாதுகாப்புக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிராமங்களின் வாழ்வாதாரங்களாக விளங்குவதோடு, சுற்றுச்சூழல் மண்டலங்களாகவும் ஏரிகள் அமைந்துள்ளன. இதன் மூலம், அனைத்து உயிர்களுக்கு புகலிடமாகவும், பறவைகளுக்கு சரணாலயங்களாகவும் பல் உயிர்களுக்கு வாழ்வாதாரங்களாகவும் திகழ்கின்றன. ஏரிகளின் நீர்வளம், நில வளம் பாதிக்கப்பட்டுள்ளதற்கு முக்கியக் காரணம், கழிவுகளை போடுவது தான். தொழிற்சாலை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள் போன்ற அனைத்து வகையான கழிவுகளையும், ஏரிகளில் கொட்டுவதை தடுத்து, முறையாக கண்காணிக்க வேண்டும். இவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், கடுமையான சட்டம் இயற்றி, ஏரிகளில் குப்பைக் கொட்டுவோரையும் ஆக்கிரமிப்போரையும், தண்டிப்பதற்கு வழி செய்ய வேண்டும்.ஏரிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கல்விக் கூடங்களின் மாணவர்கள் ஒத்துழைப்போடு, துார் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை ஆண்டுக்கு இரு முறையாவது மேற்கொள்ளலாம். இதுபோல, ஒவ்வொரு அரசு நிறுவனமும் தங்கள் அலுவலகத்திற்கு அருகில் மற்றும் தங்கள் பணியின் மூலம் பயன்பெறும் கிராமங்களின் ஏரிகளை பாதுகாத்து, பராமரித்து, எதிர்கால சந்ததியினருக்கு நீராதாரத்தை காக்க வேண்டும்.முனைப்போடு, ஏரிகள் நல வாரியத்தை அரசு அமைத்து செயல்படுத்த வேண்டும். இதில், கிராம பஞ்சாயத்து தலைவர், அவ்வூர் பள்ளிக்கூட தலைமையாசிரியர், கூட்டுறவு வங்கியின் செயலர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் இடம்பெற வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், தங்கள் லாபத்தில், 10 சதவீதத்தை, அருகில் உள்ள ஏரிகளை பாதுகாக்க பயன்படுத்தலாம். எனவே, இயற்கை சுற்றுச்சூழல் மண்டலங்களில் முதன்மையானதும், ஒவ்வொரு கிராமத்தின் நீராதாரமாகவும் விளங்கும் ஏரிகளை, நம் கண்களைப் போல பாதுகாத்து, பராமரித்து வந்தால், நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, தட்ப, வெட்ப சூழ்நிலையையும் சரி செய்து, புவியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.இதன் மூலம் மரங்களும், தாவரங்களும் வளர்க்கப்பட்டு, மழை வளம் பெற முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- பி.பாலமுருகன் -
பேராசிரியர், ஏரிகளை நவீனப்படுத்துதல் ஆராய்ச்சித் திட்டத்தின் முதன்மை ஆய்வர்


இ-மெயில்: drbalamuruganarasi@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X