இறைவனுக்கென்ன இதுவா வேலை | Dinamalar

இறைவனுக்கென்ன இதுவா வேலை

Added : செப் 12, 2016 | கருத்துகள் (17)
இறைவனுக்கென்ன இதுவா வேலை

இப்படி நான் கேட்பதால் அவசரப்பட்டு என்னை நாத்திகன் என்று நீங்கள் கருதிவிடக்கூடாது. நான் ஆத்திகன் என்பதை ஆயிரம் முறை எழுதிக் கையெழுத்திட்டுத் தருவேன். ஏனெனில் 'கடவுள் இருக்கிறார்' என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எதையும் கேட்பதற்கான இடமாக இறைவனை வைத்துக் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.“இறைவன் நமக்குத் தருகிற பிரசாதம் என்பது மூச்சு மட்டுமே” என்கிறார் கபீர்தாசர். மற்றவையெல்லாம் நல்லதோ, கெட்டதோ நாம்தான் உழைத்தோ ஊரையடித்தோ பெறுகிறோம். எதையும் பெறுவதற்கும் இழப்பதற்கும் நாமே காரணமாக இருக்கிறோமே தவிர, பாராட்டையும் பழியையும் இறைவன் மீது போடமுடியாது. ஏனெனில் தேடிப்பிடித்துக் கொடுப்பதற்கும், தேவையில்லாமல் பறிப்பதற்கும் மனிதர்களுக்குள் அவனுக்கு எந்தத் தேர்வும் இல்லை. பாரபட்சமும் இல்லை.
அழிவதும், ஆளாவதும் : கவியரசர் கண்ணதாசன் ஒரு கவிதையில் நமக்கு எளிதில் புரியும் வண்ணம் இதை இப்படிப் புலப்படுத்துவார்.
'கடல்மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்கனிமீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்'
கடலில் விழுவதும் கனிகளில் சாய்வதும், துரதிர்ஷ்டமோ அதிர்ஷ்டமோ இல்லை. இரண்டிலும் இரண்டும் இருக்கிறது. ஏழையாகப் பிறந்த பலர், ஏகப்பட்ட கோடிகளுக்கு அதிபதியாவதும், செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகள் சீரழிந்து போவதும் இறையருளாலா நிகழ்கிறது? எனவேதான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கனியன் பூங்குன்றன் கணித்திருக்கிறான்.காலில் விழுந்து பெறுகிற பதவிகளுக்கும், கொள்ளையடித்துக் குவிக்கிற செல்வத்துக்கும், கடவுளே காரணமென்றுகூற முடியாது. அதுபோல படித்துப் பெறுகிற பட்டத்திற்கும் உழைத்துப் பெறுகிற உயரத்துக்கும் கடவுளை காரணமாகவும் கூற முடியாது. விதியென்று நாம் கருதுகிறவற்றைக்கூட, விடாமுயற்சியால் வென்றுவிட முடியும் என்பது தெய்வ நிந்தனை அல்ல.
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்'
என்று விளையாட்டுக்குச் சொல்லவில்லை வள்ளுவர்.எதையும் கடவுளே தருகிறான் என்கிற நம்பிக்கையை ஊட்டிவிட்டு உழைக்கத் தேவையில்லை என்று உணர்த்தப்பட்டால், நாமெல்லாம் உலக மகா சோம்பேறிகளாகி விடுவோம். தேர்வு நேரங்களில் தேர்ச்சி பெறுவதற்காக, இங்கே சிறப்பான பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மகிழ்ச்சி. ஆனால் பிரார்த்தனையில் கலந்துகொள்கிற எந்தப் பிள்ளையாவது படிக்காமல் பரீட்சை எழுதப் போகிறதா? இல்லையே.தெய்வத்தை ஒரு நம்பிக்கையாக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அதைமட்டுமே நம்பி இருக்கவும் முடியாது. நம்பிக்கையோடு உழைப்பவருக்கே தெய்வம் துணையிருக்கும். வேண்டுவோரிடமும், கொள்ளையடிப்பதில் கொஞ்சம் பங்கு கொடுப்பவரிடமும் இறைவன் இலகுவாக ஏமாந்துவிடமாட்டான். நம்பிக்கை என்பது ஒரு சக்தி. ஏதோ ஒரு சக்தி என்று இறைவனைச் சொல்கிறோமே, அப்படி ஒரு சக்திதான் அது. அந்த சக்தியை நம்பி உழைப்பவர்க்கு எண்ணியவை ஈடேறும்.
ஒரு சிறிய கதை : தொழிலில் பெரிதும் நொடிந்துபோன ஒரு தொழிலதிபர் மன அமைதிக்காக பூங்காவில் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக ஒரு பெரியவர் வருகிறார். கோட்டும் சூட்டுமாக அவர் ஒரு பெரிய பணக்காரர் போல இருந்தார். அந்த நொடிந்த தொழிலதிபரிடம் தன்னை ராக்பெல்லர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறார் அவர். நலிந்த தொழிலதிபர் தன் நிலைமையை விவரிக்கிறார். “கவலைப்படாதீர்கள்… நான் உங்களுக்கு 5 லட்சம் டாலருக்கு செக் தருகிறேன். வட்டி எதுவும் வேண்டாம். நஷ்டத்திலிருந்து மீண்டபிறகு எப்போது முடியுமோ அப்போது திருப்பித் தந்தால்போதும்” என்று 5 லட்சம் டாலருக்கு ஒரு பெயரிடாத காசோலையைக் கொடுக்கிறார்.முன்பின் ராக்பெல்லரைப் பார்க்காவிட்டாலும், கேள்விப்பட்டிருந்த நமது நலிந்த தொழிலதிபர், அந்தக் காசோலையை பத்திரமாக இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டார். உற்சாகமாக மூலப் பொருட்களைக் கடன் வாங்குவதும், புதிய ஊழியர்களை நியமிப்பதும், புதுமையான விளம்பர யுத்திகளை அறிமுகம் செய்வதுமாக இரண்டொரு ஆண்டுகளில் வங்கிக் கடன்களை அடைத்தது மட்டுமில்லாமல் கோடிகள் குவிக்கத் தொடங்கி விட்டார். இத்தனைக்கும் அவருக்கிருந்த ஒரே நம்பிக்கை எந்த நேரத்தில் பணமுடை ஏற்பட்டாலும், இரும்புப் பெட்டியில் 5 லட்சம் டாலருக்கான காசோலை இருக்கிறது, எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். ஆனால் அதற்கு அவசியமில்லாமலேயே எல்லாமும் நல்லபடியாக நடந்து விடுகிறது. ராக்பெல்லருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்தக் காலோலையைத் திருப்பித் தர நமது ஆள் பூங்காவுக்குச் சென்றபோது, அங்கே ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு வயதான பெண்மணியின் அருகில் அந்த ராக்பெல்லர் அமைதியாக அமர்ந்திருந்தார்.அவரிடம் சென்று பேச்சு கொடுத்தபோது “சாரிசார்… உங்க கிட்டேயும் இவர் தன்னை ராக்பெல்லர்ன்னு சொன்னாரா? செக் கொடுத்தாரா? பணம் இல்லேன்னு பாங்கிலேர்ந்து திரும்பிவந்ததா? எங்களை மன்னிச்சிடுங்க… இவர் என் கணவர். கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர். தினமும் சாயங்காலம் இங்கே வந்து இப்படித்தான் எல்லாருக்கும் செக் கொடுத்திட்டு இருக்கார். பாவம் நீங்களும் ஏமாந்திட்டீங்க போல இருக்கு” என்கிறார் அந்த பெண்மணி.
நம்பிக்கையே வெற்றி : போலியான காசோலை, வங்கியில் இருப்பில்லை, இருந்தாலும் அதை நம்பி எத்தனை முயற்சிகள், வெற்றிகள் என்று பெருமூச்செறிந்த அவர் நம்பிக்கைதான் வெற்றி என்று உணர்கிறார். ஏதோ ஒரு நம்பிக்கை… அது உழைப்பதற்கான உயர்வதற்கான உற்சாகத்தைத் தந்திருக்கிறதே என்று வியக்கிறார். நாம் நம்புகிற அந்த சக்திதான் கடவுள். அது உதவுகிறது என்றாலும் அது மட்டுமே உதவுவதில்லை. கடவுளுக்கு ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. சக மனிதர்களாக இறைவன் நம்மோடு இருக்கிறான். ஒருவேளை அவர்களுக்கு நம் தேவைகள் தெரியலாம். நம்மிடமிருக்கிற அன்பு என்கிற இறைமையை வெளிப்படுத்துகிறபோது, மற்றவர்களிடத்திலிருக்கிற இறைமை (அன்பு) நமக்குத் தெரிகிறது. அது துன்பம் வரும்போது துணை வரும். தூக்க முடியாத தோள்களுக்கு பலம் தரும். ஆள் பலத்தைப் போலச் சிறந்த பலம் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள ஆள்களை நம்புவதும் அவர்களிடம் நேசம் வைப்பதுவும்தான் 'நானிருக்கிறேன் என்று அவர்களைச் சொல்ல வைக்கிறது'. நமக்கு அசுரபலம் வந்துவிடுகிறது ஆறுதல் கலந்த நம்பிக்கையாக.
நமக்குள்ளே நம்பிக்கை : சில நேரங்களில் மருத்துவர் சொல்வார் “நானிருக்கிறேன்” என்று. “அவர் இருப்பார் நாமிருக்க வேண்டுமே” என்று நாம் நினைக்கக்கூடாது. நல்ல மருத்துவர் கை ராசிக்காரர் குணமாக்கிவிடுவார் என்கிற நம்பிக்கை இருந்தால் மருத்துவமனையிலிருந்து நலமாக வெளியே வருவோம். இந்த நம்பிக்கைதான் நாம் வணங்குகிற கடவுள். இந்தக் கடவுள் வேறு யாரோ, வெளியே எங்கேயோ இருந்துகொண்டு பார்த்துக் கொண்டிருப்பவன் அல்ல. நமக்குள்ளேயே இருக்கிற நம்பிக்கை எனும் இறைவன்.யாரிடமும் சொல்லியழ முடியாத துயரங்களை, யாரிடமாவது சொல்ல எண்ணுகிறபோது, இறைவனே நம்முன்னே தோன்றிச் செவிமடுப்பதாக ஓர் உணர்வு. எந்த மதத்தவராயினும் அவர்கள் வணங்கும் தெய்வத்திடம் முறையிடுகிற போது மனத்திலிருந்து கொஞ்சம் பாரம் இறங்கிவிட்ட ஆறுதல் கிடைக்கிறது. நாம் பெறுகிற எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பு. உங்கள் செயல்களுக்கான பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். தனித்தனியே உங்களுடன் செலவழிக்க அவனுக்கு நேரமில்லை. நீங்கள் கேட்டதைக் கொடுப்பதற்கும், நினைத்தவாறு நடப்பதற்கும் இறைவனை எதிர்பார்க்காதீர்கள். யார் யாருக்கு என்னென்ன தேவை என்று கேட்கவும் கொடுக்கவும், இறைவனுக்கென்ன இதுவா வேலை?
- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர், சென்னை

94441 07879

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X