அம்மணி வந்துட்டேன்னு சொல்லு...!| Dinamalar

'அம்மணி' வந்துட்டேன்னு சொல்லு...!

Added : செப் 13, 2016
Share
அன்று, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், 'ஷாப்பிங்' செல்வதென ஏற்பாடு. ஸ்கூட்டரை மித்ரா ஓட்ட, பின்னால் தொற்றிக் கொண்டாள் சித்ரா. அவிநாசி ரோட்டில் ஸ்கூட்டர் பறந்தது.''டிராபிக் சிக்னல் விழப்போகுது, சீக்கிரமா போ...'' என, விரட்டினாள் சித்ரா.''அட, இது தெரியாதா உனக்கு... அவிநாசி ரோட்டுல பல சிக்னல்கள் சரியா இயங்கறதில்லை. எப்ப பார்த்தாலும் ஒரே டைம்ல நிக்குது. 'ரெட்'
'அம்மணி' வந்துட்டேன்னு சொல்லு...!

அன்று, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், 'ஷாப்பிங்' செல்வதென ஏற்பாடு. ஸ்கூட்டரை மித்ரா ஓட்ட, பின்னால் தொற்றிக் கொண்டாள் சித்ரா. அவிநாசி ரோட்டில் ஸ்கூட்டர் பறந்தது.
''டிராபிக் சிக்னல் விழப்போகுது, சீக்கிரமா போ...'' என, விரட்டினாள் சித்ரா.
''அட, இது தெரியாதா உனக்கு... அவிநாசி ரோட்டுல பல சிக்னல்கள் சரியா இயங்கறதில்லை. எப்ப பார்த்தாலும் ஒரே டைம்ல நிக்குது. 'ரெட்' விழுந்தா வண்டிய நிறுத்திக்கணும், கிரீன் விழுந்தா போயிட்டே இருக்கலாம். சிக்னலை சரியா பராமரிக்கறதில்லை. வாகன ஓட்டிகள்லாம் ரொம்ப கஷ்டப்படறாங்க,'' என்றாள் மித்ரா.
அப்போது ஒரு டாஸ்மாக் மதுக்கடை முன், ஏராளமான ஆண்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.
''என்ன மித்து, வசூல் குறைஞ்சிருச்சா... கடையை காலை, 11:00 மணிக்கே திறக்க ஆரம்பிச்சிட்டாங்க...'' என கேட்டாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''நேரம் குறைச்சதை யாரும் பெரிசா கண்டுக்கிடலை. ஏன்னா, ஊருக்கு வெளியே, மதுக்கடை இல்லாத இடங்கள்ல, கூடாரம் அமைச்சு, நேரங்காலம் பார்க்காம அமர்க்களமா பிசினஸ் நடந்துக்கிட்டு இருக்கு. சில இடத்துல விற்பனையாளர்களே, சரக்கை பதுக்கி வச்சு, வசூலை அள்றாங்க. முக்கியமான ஆளுங்களுக்கு, மாமூல் கரெக்டா போயிடுது. அதனால, சட்டவிரோத விற்பனையை யாரும் கண்டுக்கறதில்லை,'' என்றாள்.
''அதெல்லாம் சரி, புதுசா வந்திருக்கிற அதிகாரி வேகம் காட்டுறாராமே,'' என, கேட்டாள் சித்ரா.
''ஆமாக்கா...சென்னையில முகாம் போட்டு, இந்த பதவியை விருப்பப்பட்டு கேட்டு வாங்கிட்டு வந்துருக்காரு. கிட்டத்தட்ட, 12 லகரம் செலவு பண்ணியிருக்காருன்னு தகவல். அதனால, ஊழியர்களை குடைஞ்சு எடுக்கிறாரு. எத்தனை கோப்பு பெண்டிங்ல இருக்குன்னு கேள்வி கேட்டு துளைச்சு எடுக்கிறாராம். 'ரவுண்ட்ஸ்'க்கு போகும்போதுதான், சுயரூபம் வெளிச்சத்துக்கு வரும்னு ஊழியருங்கள்லாம் பேசிக்கறாங்க,'' என்றாள் மித்ரா.
''அப்புறம்... மேல விட்ட தொகைய, வட்டியும் அசலுமா வசூலிக்க நெனைப்பாருல்ல...,'' என்றாள் சித்ரா.
அப்போது மொபைல்போன் முணுமுணுத்தது. எடுத்து பேசிய சித்ரா, ''ஹலோ... சொல்லுடீ... பிரபாகரன்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லு. நாம நாளைக்கு மீட் பண்ணலாம்,'' என்றாள்.
அப்போது ஸ்கூட்டர் வ.உ.சி., மைதானத்தை கடந்து சென்றது.
''வ.உ.சி., மைதானம் ஒதுக்கீடு பஞ்சாயத்து என்னாச்சு,'' என, கிளறினாள் மித்ரா.
''மயில்சாமின்னு ஒருத்தரு, கலை நிகழ்ச்சி நடத்துறதுக்கு, அனுமதி கேட்டிருந்தாரு. அதனால, தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்த, இடம் கொடுக்க முடியாம போயிடுச்சு; இல்லேன்னா கொடுத்திருப்போம்'னு, அதிகாரிங்க தரப்புல விளக்கம் சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''அது உண்மைதானா?'' கேட்டாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''மயில்சாமின்னு யாரும் கலை நிகழ்ச்சி நடத்தலை. வ.உ.சி., மைதான பிரச்னை அடிக்கடி வர்றதால, ஒதுக்கீடு செய்ற அதிகாரத்தை, பழையபடி பி.ஆர்.ஓ., செக்ஷனுக்கு மாத்திக் கொடுக்கலாமான்னு, உயரதிகாரிக வட்டாரத்துல பேசிக்கிறாங்க,'' என்றாள்.
''பொறுப்பு பதவியில இருந்துக்கிட்டு, வெயிட்டா, வருமானம் பார்த்துக்கிட்டு இருக்காங்க; துணிச்சலா நடவடிக்கை எடுக்கற உயரதிகாரி வந்தா, எப்படியும் மாத்திடுவாங்க. அதுக்குள்ள, கலெக்ஷனை அள்ளணுமே...தங்க முட்டை போடுற வாத்தை தாரை வார்ப்பாங்களா,'' என்றாள் மித்ரா.
''தாரை வார்ப்பாங்களாங்கறது அடுத்த மேட்டர். ஆனா, மாநகராட்சி அதிகாரிகளோட ஒரு முக்கிய திட்டத்துக்கு, கவுன்சிலருங்க முட்டுக்கட்டை போட்டுட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''ம்ம்ம்...மேல சொல்லு,''என்றாள் மித்ரா.
''ப்ரூக் பாண்ட் ரோட்டுல, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, 'பார்க்கிங்' ஏரியாவா மாத்தலாம்னு, நைசா இணைப்பு தீர்மானத்துல கொண்டு வந்துருக்காங்க. அந்த இடத்துல பெரிய ஷாப்பிங் மால் இருக்கு; அதனால உஷாரான கவுன்சிலருங்க, முட்டுக்கட்டை போட்டுட்டாங்க. அதுக்கு பதிலா வணிக வளாகம் கட்டலாம்னு சொல்லி, தீர்மானத்தை நிராகரிச்சிட்டாங்க. அதிகாரிங்க சைடுல இதனால செம மூட் அவுட்டாம்,'' என்றாள் சித்ரா.
''வசூல் போச்சேன்னு அங்க அதிகாரிங்க மூட் அவுட்டுன்னா, காளப்பட்டி - சித்ரா ரோட்டுல டிராபிக் போலீஸ்காரங்க செம வசூல்,'' என்றாள் மித்ரா.
''டிராபிக் விதிமுறையை மீறுனா பைன் போடத்தான் செய்வாங்க...இதுல என்ன தப்பு,'' என்று வக்காலத்து வாங்கினாள் சித்ரா.
''உலகம் புரியாம பேசாதேக்கா...வாகனங்களை ஓரங்கட்டி, 'ஓவர்லோடு, ஓவர் ஸ்பீடு' ன்னு இஷ்டத்துக்கு வசூல போடறாங்க. இந்த ரோடு ஒதுக்குப்புறமா இருக்கறதால, லாரிகளை சாவகாசமா நிறுத்தி கலெக்ஷன் பண்றாங்க. இதுல ஒத்தாசைக்கு ஹோம் கார்டு, போலீஸ் நண்பர்கள் வேற,'' என்று சிரித்தாள் மித்ரா.
''கலெக்ஷன்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது...ஹோப் காலேஜ் ஏரியால தினமும் கலக்கலா ஒரு கலெக்ஷன் நடக்குது,'' என்றாள் சித்ரா.
''அது என்ன 'கலக்கல்' கலெக்ஷன்...விவரமா சொல்லு,'' கேட்டாள் மித்ரா.
''இந்த ஏரியால, டீசன்டா வயது பசங்க யாராவது போன் பேச பைக்கை ஓரங்கட்டினால் போதும்...'ஒரு பத்து ரூபா குடு'ன்னு 'நளினத்தோட' வந்து நிப்பா ஒரு லேடி. பர்சை வெளியே எடுத்தவுடன், பர்சோட பிடுங்கிருவா. சில பேரு பர்சுல இருக்கற பெரிய நோட்டுகளை மட்டும் எடுத்துட்டு பர்சை குடுத்துருவா. அவகிட்ட நடுரோட்டுல, தகராறு பண்ணுனா அசிங்கம்னு, பேசாம வண்டிய முறுக்கிட்டு பசங்க போயிர்றாங்க,'' என்றாள் சித்ரா.
''லேடீஸ் இவ்வளவு தைரியமா செய்றாங்களா...ஆச்சரியமா இருக்கு,'' என்றாள் மித்ரா.
''லேடீஸ்தான்....ஆனா ஆம்பளைங்க மாதிரி போல்டான லேடீஸ். அதான் போலீசும் கண்டுக்கறதில்லை,'' என்று கூறி கண் சிமிட்டினாள் சித்ரா.
''சமீபகாலமா லேடீஸ் மேல இப்படி நிறைய புகார் வருது. இப்படித்தான் சுப்ரமணியம்பாளையத்துல இருக்கற ஒரு மக்கள் பிரதிநிதி, பில்லுார் இரண்டாவது குடிநீர் திட்டத்துல குடிநீர் இணைப்பு தர்றேன்னு, வார்டுல ஒரு கோடி ரூபாய்க்கு மேல ஆட்டைய போட்டுட்டாராம். யாருக்கும் ரசீதும் குடுக்கலையாம். வாங்குன காசுக்கு பேருக்கு வெறும் பைப்பு மட்டும் போட்ட அவரால, தண்ணிய கொண்டு வந்து சேர்க்க முடியலை. இப்ப பிரச்னைய தி.மு.க.,காரங்க கையில எடுத்துட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''அப்புறம்... இப்படி கோடிக்கணக்குல அடிச்சா வேடிக்கையா பார்ப்பாங்க?'' என்றாள் சித்ரா.
''இங்கதான் இன்ட்ரஸ்டிங்...பிரச்னையை கிளப்புறதே அவரோட கூட பிறந்த அண்ணன் தானாம். தி.மு.க.,வை சேர்ந்த இவரு, 2011ல இதே வார்டுல தங்கச்சிய எதிர்த்து போட்டி போட்டு தோத்து போனவரு. இப்ப சான்ஸ் கிடைச்சவுடனே, குடிநீர் பிரச்னையை குடைஞ்சு எடுக்கறாராம். இதனால வாங்குன காசுக்கு, எப்படியாவது தண்ணிய கொண்டு வந்து சேர்த்துரணும்னு படாதபாடு படறாராம் தங்கச்சி,'' என்றாள் மித்ரா.
''வர்ற எலெக்ஷன்ல அண்ணன்- - தங்கை பிரச்னை, பெருசா வெடிக்கும்னு சொல்லு,'' என்று சிரித்தாள் சித்ரா.
அப்போது அவர்களை கடந்து சென்ற ஒரு தனியார் பஸ் வீடியோவில், 'வனிதாமணி வனமோகினி வந்தாடு...' என்ற பாட்டு காதை கிழித்துச் சென்றது.
''நானும் ஒரு லேடி மேட்டர் சொல்றேன்...சுகாதார துறைக்கு புதுசா வந்திருக்குற பெண் ஆபிசர் பத்தி, பரபரப்பா பேச்சு கிளம்பியிருக்கு,'' என்றாள் மித்ரா.
''அவங்க அப்படி என்ன செஞ்சாங்க,'' என்று கேட்டாள் சித்ரா.
''நீலகிரி மாவட்டத்துல இருந்த இந்த அம்மாவ, அரியலூர் மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க. அங்க ரெண்டு நாள் மட்டும் வேலை பாத்துட்டு, ஆளும்கட்சி ஆளுகளை புடிச்சு, நம்மூருக்கு மாத்திட்டு வந்துட்டாங்க. இங்க ஏற்கனவே இருந்த ஆபிசரோட 'டிரான்ஸ்பர் ஆர்டரையும்', கையோட வாங்கிட்டு வந்துட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''டெரரர் பீசா இருப்பாங்க போல...,'' என்றாள்.
''மேல கேளு...இங்க இருந்த ஆபிசரோட ரூம அவர் அனுமதியில்லாமயே திறந்து வேலைய ஆரம்பிச்சுட்டாங்களாம். வழக்கம் போல அன்னிக்கு வேலைக்கு வந்த ஆபிசர், சீட்டுல இந்தம்மாவ பார்த்ததும் 'ஷாக்' ஆயிட்டாராம்,'' என்றாள் மித்ரா.
''அப்புறம்...இப்படியா 'என்ட்ரி' குடுப்பாங்க?'' என்றாள் சித்ரா.
''இனி நீ கேக்க போறதுதான் 'ஹைலைட்'. பழைய அதிகாரியோட டிரான்ஸ்பர் ஆர்டரை அவர்கிட்டயே குடுத்து, 'உங்களை அரியலுாருக்கு டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க'னு கூலா சொல்லியிருக்காங்க. எதுவும் பேச முடியாம அவரு, ஆர்டரை வாங்கிட்டு, அரியலுாருக்கு கிளம்பி போய்ட்டாராம்,'' என முடித்தாள் மித்ரா.
''அடேங்கப்பா...கோவை மாவட்ட மக்கள் மேல இந்தம்மாவுக்கு அப்படி என்ன அக்கறை?'' அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.
''மக்கள் மேல அக்கறையாவது ஒண்ணாவது...எல்லாம் அவங்க இங்க வாங்கி போட்டுருக்கற சொத்து மேல இருக்கற அக்கறைதான்,'' என்றாள்.
அதற்குள் கிராஸ்கட் ரோடு வந்து விட்டது. ஸ்கூட்டரை ஒரு கடை முன் பார்க் செய்த மித்ரா, ''என் பிரெண்ட் பானுமதி, லேடீசுக்கு இந்த துணிக்கடைல, நல்ல வெரைட்டி கிடைக்கும்னு சொன்னா... வா பார்ப்போம்,'' என்றபடி கடை படியேறினாள். பின் தொடர்ந்தாள் சித்ரா. கடை மேலாளர் சோமசுந்தரம் அவர்களை வரவேற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X