""ஓஹோ... ஓணம் வந்தல்லோ...'' என்று பாடியபடியே, ""வீட்டிலே என்ன ஸ்பெஷல்,'' என்றபடி, உள்ளே நுழைந்தாள் சித்ரா.
""அடை பிரதமனோட "ஓணப்பெருவடா' செய்யப்போறேன். கொழுக்கட்டை செஞ்ச மாதிரியே, இதிலும் புதுசா, "வெரைட்டி' செய்யப்போறேன்,'' என, மித்ரா சொன்னாள்.
""கொழுக்கட்டைன்னு சொன்னதும் நியாபகத்துக்கு வருது. விநாயகர் சிலை ஊர்வலத்தில, போலீசார் படாதபாடு பட்டுட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""ஆமாம். சிலை பாதுகாப்பு, ஊர்வல பாதை கண்காணிப்பு, விசர்ஜனத்தின் போது பாதுகாப்புன்னு, போன வாரம் பூராவும், போலீஸ்காரங்களுக்கு, டைட் வொர்க்,'' என, ஆதங்கத்தோடு மித்ரா சொன்னாள்.
""அதுமட்டுமில்ல. ஊர்வலத்தில வந்த வண்டிகளையும், ஆட்டம் போட்ட தொண்டர்களையும் கட்டுப்படுத்தி, அமைதியாக முடிக்கறதுக்குள்ள, போலீசுக்கு போதும்போதுமுன்னு ஆயிடுச்சாம். விசர்ஜனம் முடிஞ்சும் கூட, தொண்டர்கள் நல்லபடியா திரும்பற வரை, போலீசார் பயங்கர டென்ஷனாவே இருந்தாங்களாம்,'' என, சித்ரா கூறினாள்.
""அமைப்புகளை கண்டுக்கிற அளவுக்கு கூட, போலீசார் கோர்ட்டை கண்டுகறதில்ல தெரியுமா,'' என, மித்ரா அடுத்த விஷயத்தை ஆரம்பித்தாள்.
""அப்படியென்ன பிரச்னை?'' என்று சந்தேகத்தை எழுப்பினாள் சித்ரா.
""ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு பனியன் நிறுவனம் சூறையாடின சம்பவத்தில், அதோட உரிமையாளர் புகார் கொடுத்தும், போலீஸ் வழக்கு பதியாமல் மெத்தனமாக இருந்தாங்க. பாதிக்கப்பட்டவர், மாநகர துணை கமிஷனர், கமிஷனர்னு புகார் கொடுத்ததால, ஒப்புக்குச்சப்பா விசாரணை நடந்திருக்கு. இது தொடர்பான கேஸில், கோர்ட் உத்தரவு போட்ட பிறகும் கூட, எந்த நடவடிக்கையும் இல்லை.
""அதனால, கோர்ட்டே தானா முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, குற்றம் சாட்டப்பட்டவங்களுக்கு, சம்மன் அனுப்பியிருக்கு. அப்படி ஒரு நபரே இல்லைன்னு, வருவாய்த் துறையில் சான்றிதழ் வாங்கி, கோர்ட்ல போலீஸ் கொடுத்திருக்கு. இதுதவிர விசாரணைக்கு ஆஜராகாத, பிரபல தொழிலதிபர் உட்பட ரெண்டு பேருக்கு, கைது வாரன்ட் கொடுத்துட்டாங்க,'' என்று கூறினாள் மித்ரா.
""என் கிட்ட இன்னொரு மேட்டர் இருக்கு. அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில், ஆசிரியர்கள் ரெண்டு பிரிவாக வேலை பார்க்குறாங்க. புது ஹாஸ்டல் திறக்கப்பட்ட பிறகு, சிலர் கிளாஸ்ல பாடம் நடத்துறதில்லையாம். ஹாஸ்டல் வளாகத்திலேயே , வகுப்பு நடக்குதாம். அங்கிருக்கிற கழிப்பிடம், செப்டிக் டேங்க் முறையாக சுத்தம் செய்வதில்லையாம். அதை சுத்தம் செய்ய, மாணவியரிடமே வசூல் நடக்குதாம். இதையெல்லாம் கவனிக்க வேண்டியவர், எதையும் கண்டு கொள்வதில்லையாம். போராட்டம் நடத்தலாமான்னு, மாணவியர் ஆலோசனை நடத்தி வர்றாங்க,'' என்று, ஒரே மூச்சில் முடித்தாள் சித்ரா.
""அடக்கடவுளே. ஹாஸ்டலுக்கு பணமும் கட்டி, பராமரிப்புக்கு கைக்காசையும் செலவு செய்யற அநியாயத்தை, யார்கிட்ட போய் சொல்லறது,''
என்று ஆதங்கப்பட்டபடி, சமையல் வேலையை துவங்கினாள் மித்ரா.
வாட்சில் டைம் பார்த்தபடியே, "இன்னும் நேரமிருக்கு' என்று முணகியபடி, ""கணபதி ஹோமம் போட்டிருக்காங்க... கேள்விப்பட்டயா?'' என்றாள் சித்ரா.
""என்ன, திடீர்னு கணபதி ஹோமம் நடத்துனாங்கன்னு சொல்றீங்க?'' என்று புரியாதது போல் கேட்டாள் மித்ரா.
""முழுசா சொல்ல வர்றத கேளுப்பா...நான் சொல்ல வந்தது, அ.தி.மு.க., ஆபீஸ் திறந்து, கணபதி ஹோமம் போட்டிருக்காங்களே அதை சொன்னேன்,'' என்றாள் சித்ரா.
""ஆளுங்கட்சியா இருந்தும், அ.தி.மு.க.,வுக்கு மாவட்ட ஆபீசுக்கு சொந்த கட்டடம் இல்ல. ஒவ்வொரு ஆட்சி மாறும் போது, இவங்க ஆபீசும் மாறிட்டேதான் இருக்கு. மூணு வருஷத்துக்கு ஒரு இடமுன்னு மாறிட்டே இருக்காங்க. சட்டசபை தேர்தலப்ப, இடத்தை காலி பண்ண சொல்லிட்டாங்க; வேற வழியில்லாம, மறுபடியும் "கோபால்ட்' மில் வளாகத்துல ஆபீஸ் திறந்திருக்காங்க'' என்றாள் மித்ரா.
""திருப்பூர் எதிர்க்கட்சிகளுக்கு, கோட்டை மாதிரி, மாவட்ட ஆபீஸ் சொந்தமா இருக்குது. ஆனா, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மேயர்னு, எத்தனையோ வி.ஐ.பி.,க்கள் இருந்தும், ஆளுங்கட்சிக்காரங்களுக்கு, சொந்த ஆபீஸ் கட்ட முடியாம போயிட்டாங்கனு தொண்டர்கள் புலம்புறாங்க,'' என்று உசுப்பேற்றினாள் சித்ரா.
"" ஐந்து வருஷத்துக்கு முன்னாடி, அவிநாசி ரோடு பக்கத்துல, இடம் வாங்கியும், நீளம் பத்தல; அகலம் பத்தலைனு, கட்டடம் கட்டவே இல்ல. இப்பவும் நில வாடகைக்கு பிடிச்சு<, தற்காலிகமாக ஆபீஸ் கட்டி, விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு, கணபதி ஹோமம் பண்ணி, திறப்பு விழா நடத்தியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""தி.மு.க.,-காங்., கூட்டணிதான் முடிவாகல. "கேப்டன்' கட்சிக்காரங்க, தேர்தல புறக்கணிச்சுடலாம்னு பேசி வச்சிருக்காங்க. ம.ந.கூட்டணியில் பதவி இடங்கள் பங்கீடு செய்ய, இரண்டு சுற்று பேசியாச்சு... சீக்கிரமா முடிவு செஞ்சிருவாங்க. ஆளுங்கட்சிக்காரங்களும், சென்னையில "டேரா' போட்டு, "சீட்' பேச்சை முடிச்சிருக்காங்க,'' என்று, உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஒப்பித்தாள் சித்ரா.
""தேர்தல் வந்துட்டா வம்பாபோகிடும்னு... இப்பவே "கிடா' விருந்து வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. கட்சியில பேசி, "சீட்' உறுதியான ஆளுங்கட்சிக்காரங்க, ரகசியமா, "கிடா' வெட்டி, வேண்டியவங்க, வேண்டாதவங்கனு எல்லோரையும் கூப்பிட்டு, தடபுடால விருந்து வெச்சிருக்காங்க. எல்லாமே, "நைட்'டுல நடக்கறதால, "குடிகாரன் பேச்சு விடுஞ்சா போச்சு'னு சொல்றமாதிரி, எல்லாத்தையும் மறந்திட போறாங்க...'' என்று கிண்டலடித்தாள் மித்ரா.
"" அது எப்படியோ... யாருக்கு ஓட்டு போடறதுன்னு அப்புறம் பார்த்துக்கலாம்... பாத்திமா, என்னை பக்ரீத்துக்கு கூப்பிட்டிருக்கா, போயிட்டு, பிரியாணிய ஒரு பிடிபிடிச் சுட்டு வர்றேன்,'' என்று சொல்லிவிட்டு, பதிலுக்கு காத்திராமல், "ஸ்கூட்டி'யை கிளப்பினாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE