மேலும், மேலும் இழுத்தடிக்கும் மேல் முறையீடுகள்!| uratha sindhanai | Dinamalar

மேலும், மேலும் இழுத்தடிக்கும் மேல் முறையீடுகள்!

Updated : செப் 22, 2016 | Added : செப் 17, 2016 | கருத்துகள் (6) | |
நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் வினோதமாக உள்ளன. சில நேரங்களில், உச்ச நீதிமன்றம் கூட, தீர்ப்பு வழங்குவதில் மாறுபாடாக உள்ளது.உ.பி.,யில், ஒரு இளம்பெண், தன் காதலனுடன் சேர்ந்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த, தன் குடும்பத்தின், 10 மாத குழந்தை உட்பட, ஏழு பேரை, பாலில் போதை மருந்து கொடுத்து கொன்றுள்ளாள்.திட்டம் தீட்டி, ஈவு, இரக்கமின்றி செய்த இந்தப் படுகொலைக்கு செஷன்ஸ் கோர்ட்,
மேலும், மேலும் இழுத்தடிக்கும் மேல் முறையீடுகள்!

நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் வினோதமாக உள்ளன. சில நேரங்களில், உச்ச நீதிமன்றம் கூட, தீர்ப்பு வழங்குவதில் மாறுபாடாக உள்ளது.
உ.பி.,யில், ஒரு இளம்பெண், தன் காதலனுடன் சேர்ந்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த, தன் குடும்பத்தின், 10 மாத குழந்தை உட்பட, ஏழு பேரை, பாலில் போதை மருந்து கொடுத்து கொன்றுள்ளாள்.திட்டம் தீட்டி, ஈவு, இரக்கமின்றி செய்த இந்தப் படுகொலைக்கு செஷன்ஸ் கோர்ட், அப்பெண்ணுக்கும், அவள் காதலனுக்கும், துாக்கு தண்டனை விதித்து
தீர்ப்பளித்தது. அப்பீலுக்கு எடுத்துக்கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றமும் அதன் பின், உச்ச நீதிமன்றமும் செஷன்ஸ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்து, குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை தேதியை நிர்ணயித்தது.அதன் பின், அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் அவ்விருவரின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்தது, வேறு இரு அமர்வு நீதிபதிகள்.
ஒரே வழக்கிற்கு ஒரே நீதிமன்றத்தின் நீதிபதிகளிடையே வெவ்வேறான கருத்துகள்; முரண்பாடான தீர்ப்புகள் ஏன் என, தெரியவில்லை.ஒருவரை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு தண்டனையும் வழங்கிய கீழ் கோர்ட்டின் தீர்ப்பை, மேல் கோர்ட்டுகள் நிராகரித்து, அவர் நிரபராதி என கூறி, விடுதலை செய்யுமானால், முதலில் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறா?செஷன்ஸ் கோர்ட்டும், உயர் நீதிமன்றமும், ஒரு வழக்கை விசாரிக்க, பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன. இதனால், குற்றம் சுமத்தப்பட்டவரும், விசாரணைக் கைதிகளும் அலைகழிக்கப்படுவதோடு, மக்கள் வரிப்பணமும் வீணாகிறது; மனித சக்தியும், நேரமும் வீணடிக்கப்படுகிறது.
இத்தனைக்குப் பிறகும் செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள், அவை தண்டனையோ, விடுதலையோ, உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்டால், செஷன்ஸ் கோர்ட்டும், உயர் நீதிமன்றமும் சரியாக விசாரிக்கவில்லை என்று தானே அர்த்தம்!அப்படி சரியாக விசாரிக்காமல், தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது என்றால், அதற்காக செலவான காலம், நேரம், மக்கள் வரிப்பணம் வீணடிப்பு இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு?
நீதிபதிகளிடையே எழும் மாறுபட்ட கருத்துக்களால், மாறுபட்ட தீர்ப்புகளால் பாதிக்கப்படுவது யார்? பொதுமக்களின் வரிப்பணத்தை ஏன் இப்படி பாழாக்க வேண்டும்?நம் நாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு, 'வாய்தா' என்றும், 'அப்பீல்' என்றும், 'முன் ஜாமின், பின் ஜாமின்' என்றும் ஏராளமான சலுகைகள் இருப்பதால், குற்றங்கள் பெருகிக் கொண்டே போகின்றன; கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன; கொடூர குற்றங்களை பயமே இல்லாமல் செய்கின்றனர்.
பணமுள்ள, 'கிரிமினல்'கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, சாதாரணமாக வெளியே வந்து விடுகின்றனர். அப்படி வெளியே வந்தவர்கள் மேலும் குற்றங்களை செய்கின்றனர். 'உள்ளே' போனாலும், சிறைச்சாலைகள் எல்லாம் அவர்களுக்கு சொர்க்க பூமியாகி விட்டதால், வெளியே கிடைப்பதற்கு அரிதான பொருட்கள் கூட, உள்ளே எளிதாக கிடைக்கின்றன.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் செக்கிழுத்தனர்; கல்லுடைத்தனர்; சாட்டையடி வாங்கினர். ஆனால், இப்போது கொடூர குற்றங்களைச் செய்தவர்களுக்கு, சிறையில் எந்த தண்டனையும் கிடையாது; சகல வசதிகளுடன் இருக்கலாம். அதிலும், பணக்கார கைதிகளுக்கும், அரசியல் கைதிகளுக்கும் உள்ளே கிடைக்கும் மரியாதையே தனி.
ஈரானில் பெண் மீது, 'ஆசிட்' வீசியவனின் கண்களை பிடுங்க, அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரபு நாடுகளில் போதைப்பொருள் வைத்திருந்தாலே மரண தண்டனை நிச்சயம். மலேஷியாவில், கற்பழித்தவர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கிறது. துபாயில் தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை நாட்டை விட்டே வெளியேற்றுகிறது.ஆனால், இந்தியாவில், சீட்டு கம்பெனி நடத்தி, மக்களிடமிருந்து பணத்தை சுரண்டியவன், சிரித்துக் கொண்டே வெளியே வருகிறான்.

'ஆசிட்' ஊற்றி பெண்ணை உருக்குலைத்தவன், ஒரே ஆண்டில் விடுதலையாகிறான் அல்லது ஜாமினில் வந்து சுதந்திரமாக நடமாடுகிறான். குண்டு வெடிப்பு குற்றவாளிகளை கீழ் கோர்ட் தண்டித்தால், மேல் கோர்ட் விடுதலை செய்கிறது. இது தான் நம் நாட்டின் நிலை.
ஒவ்வொரு கோர்ட்டும், ஒவ்வொரு தீர்ப்பை வழங்குகிறது; ஒவ்வொரு கோர்ட்டிலும், ஒரு வழக்கு பல ஆண்டுகள் நடக்கிறது. ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நீதிபதி, அந்த வழக்கு முடியும் வரை அப்பதவியில் இருப்பதில்லை. ஒன்று மாற்றாலாகியிருப்பார் அல்லது ஓய்வுபெற்று இருப்பார். பிறகு அந்த வழக்கை வேறொரு நீதிபதி விசாரிக்கும் போது, வழக்கின் தன்மையே மாறி விடுகிறது.

ஒரு வழக்கு பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுவதால், சாட்சிகள் கலைந்து விடுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் சாட்சி சொன்னவர்கள் இப்போது இருக்க மாட்டார்கள் அல்லது, 'பல்டி' அடிப்பர். இதன் விளைவாக, குற்றவாளிகள் விடுதலையாகின்றனர்; நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். எனவே, அப்பீல்களை குறைக்க வேண்டும். இரண்டு அப்பீல்களுக்கு மேல் இருக்கக் கூடாது. சில வழக்குகளில் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும் படி சட்டம் இயற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம் எல்லாவற்றையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.
உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிய பின், அதுவே இறுதியானதாக இருக்க வேண்டும். மேல் முறையீட்டு முறையை ஒழிக்க வேண்டும். இதனால் பெருமளவு வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கிடைப்பதோடு, வழக்குகள் தேங்காமல் இருக்கும். அரசுக்கு பெருமளவு பணமும், நேரமும், மனித சக்தியும் மிச்சமாகும்.எந்தவொரு வழக்கும், 15, 20 ஆண்டுகள் என இழுத்தடிக்காமல், குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு கொண்டு வரவேண்டும்; அதற்கான, சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.
ஒரு வழக்கை, மூன்று ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்தால், அதற்காகும் அனைத்து செலவுகளையும், சம்பந்தப்பட்ட நீதிமன்றமே ஏற்க வேண்டும் என்ற நிலை வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது; குற்றவாளிகள் விடுதலையாகி விடக்கூடாது. அதற்காக ஒரு வழக்கை பல ஆண்டுகள் இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை.நம் சட்டங்களை சற்று கடுமையாக்குவது, காலத்தின் கட்டாயம் என, கருத வேண்டும். இல்லையேல், குற்றங்கள் பெருகுவதை அந்த ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது.இ-மெயில்: vbnarayana@gmail.com -வ.ப.நாராயணன் - சமூக ஆர்வலர்


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X