கனவுகளைக் கைப்பற்றுவோம் - 40| Dinamalar

சிறப்பு பகுதிகள்

நீங்களும் தொழிலதிபராகலாம்

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 40

Added : செப் 18, 2016 | கருத்துகள் (1)
கனவுகளைக் கைப்பற்றுவோம் - 40

அன்பு தோழமைகளே நலமா ,

கடந்த வாரங்களில் ஆழ்மனசக்தி, மக்கள் தொடர்பு, அணுகுமுறை, விமர்சனங்களை எதிர்கொள்தல் போன்றவை குறித்து பார்த்தோம்.. இந்த வார தலைப்பு என்ன தெரியுமா? நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் டென்ஷன் தாங்க.. இந்த வார்த்தையை கேட்டாலே டென்ஷன் வருகின்றது என்றால் எந்தளவு நாம் அதில் சிக்கியுள்ளோம் என்று நமக்கே தெரியும். இயந்திரமயமான இவ்வுலகில் டென்ஷன் நம்மோடு இணைந்த ஒன்றாக மாறி பல காலங்கள் ஆகி விட்டது ..அதை எவ்வாறு அணுகுவது, அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து காண்போமா..


பூட்டாத பூட்டுஅரசர் தன் நாட்டுக்கு ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். அதற்கு அவர் தன் அமைச்சரவையில் சம தகுதி பெற்ற நால்வரில் ஒருவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க ஒரு பரீட்சை வைத்தார். அதற்காக அரசர் ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து "என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. அது கணித முறைப்படி வடிவமைக்கப்பட்டது. அதனை திறக்க நால்வருக்கும் ஒரு வாய்ப்பு தான் வழங்கப்படும். அதனை யார் விரைவில் திறக்கின்றனரோ அவரே நாட்டின் முதலமைச்சர்" என்று கூறினார்.

முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், டென்சனோடு கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட அந்த பூட்டை திறக்க அன்று இரவு முழுவதும் பல ஓலைச்சுவடிகளை புரட்டிப் பார்த்தனர். ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால் அவர்களுள் ஒருவர் மட்டும், எந்த டென்சனும் இல்லாமல், ஒருசில ஓலைகளை மட்டும் புரட்டி பார்த்துவிட்டு தூங்கப் போய்விட்டார்.

மறுநாள் அரசவையில், கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட அந்த பூட்டை சேவகர்கள் தூக்கி வந்து, அரசரின் முன்னிலையில் வைத்தனர். அதனை பார்த்த அனைவருக்கும் ஒரே படப்படப்பாக இருந்தது.

அரசவைக்கு வரும் போது கொண்டு வந்திருந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான வழி மட்டும் புலப்படவில்லை. ஆகவே அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

ஆனால், அவர்களுள் ஒருவர் மட்டும் அந்த பூட்டின் பக்கம் வந்து பார்த்தார். என்ன அபூர்வம்! பூட்டு பூட்டப்படவில்லை. அதனால் அவர் அதனை எளிதாக திறந்தார். அரசரும் அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்.


பிரச்னையைத் தீர்ப்பதெப்படிஇக்கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், ஒரு பிரச்சனையை தீர்க்கும் முன், அந்த பிரச்சனையை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல், டென்சன் ஆனால், எதையும் தீர்க்க முடியாது என்னும் கருத்து நன்கு புரிகிறது

பிரச்னைகளை சரியாக கையாளத் தெரியாத போது தான், அது டென்ஷனாக மாறுகிறது. நமக்கு டென்ஷன் ஏற்பட்டால் நம்ப மனசு தாங்க கெடும், புத்தி தெளிவாக இருக்காது, ஒரு தீர்வும் ஏற்படாது, உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு மூலக் காரணமே இந்த டென்ஷன் தாங்க. இதே டென்ஷன் தான் நம்முடைய தன்னம்பிக்கைக்கு மிகப் பெரிய எதிரி...

இந்த டென்ஷன் வந்துவிட்டால் நம் தனித்தன்மையை அழித்து விடும். பிறரை எதிர்மறையாக பேசுவது, அவர்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவது போன்ற செயல்களால் பலன் நமக்கே திரும்ப வரும். என தெரியாமல் பிறரை டென்ஷன் ஆக்கி பார்ப்பதில் இன்பம் காண்கின்றோம்.


மனமாற்றம் தேவை:டென்ஷனை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது மனமாற்றம் தேவை, மனமாற்றத்தில் இரு வகையுண்டு மெதுவாக நடக்கும் மனமாற்றம் திடீரென நடக்கும் மனமாற்றம். மெதுவாக நடைபெறும் மனமாற்றம் என்பது மற்றவர்களிடமிருந்து வரும் கருத்துக்களும் மற்றும் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அடிப்படையில் சிந்தனையைக் கூர்மையாக்கி நம் வாழ்வை கொஞ்ச கொஞ்சமாக மாற்றி அமைத்து கொள்வது.

திடீரென நடைபெறும் மாற்றம் என்பது வாழ்வில் நடக்கும் ஒரு அசாத்தியமான நிகழ்வு ஒட்டு மொத்த வாழ்வையே புரட்டி போட அனுமதிப்பது அசாத்தியமான நிகழ்வை அனுபவிக்கின்ற அனைவருமே மனமாற்றம் அடைந்து விடுவதில்லை . இதற்கு திறந்த மனம் அவசியம் திறந்த மனம் உள்ளவர்கள் மட்டுமே மனமாற்றத்தை அனுபவிக்க முடியும்.

முதலில் நமக்கு தோன்றும் எதிர்மறையான சிந்தனைகளிலிருந்து தள்ளி நின்று அல்லது விலகி நின்று நாமாக உள்ளர்த்தம் கற்பித்துக் கொள்ளாமல், உள்ளது உள்ளபடி சிந்தித்துச் செயல்படும்போது, டென்ஷனைக் குறைக்கலாம்.


எதிர்கால பயம் கூடாது:எதிர்கால பயத்தை விட்டொழித்து, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கத் துவங்கினாலே, பிரச்னைகள் பாதி தீரும். இது புரிந்து விட்டால், எதிர்காலம் நம்மை பயமுறுத்தாது. எந்நேரமும் நமக்குப் பிடித்தமான வேலைகளைச் செய்வது, எதிர்மறை சிந்தனையே மனதிற்குள் ஓடாதபடி, வேலையில் மூழ்குவது ஆகியவை, மனதின் எண்ண ஓட்டத்தையே மாற்றும்; நமக்குள் நம்பிக்கை பிறக்கும்

டென்ஷனை தவிர்க்க அமைதியாக இருப்பது மட்டுமில்லாமல் அந்த அமைதியாக இருக்கும் நேரத்தில் உட்கார்ந்து நமக்கு நாமே ஒரு கடிதம் எழுதுவோம்...நம் இதயத்தில் போட்டு பூட்டி வைத்த வலி, ஏமாற்றம் , தோல்வி இவற்றை மறைக்காமல் நம் உணர்வை விலாவாரியாக எழுதுவோம்...எப்படி வாழ்க்கை நமக்கு மட்டும் ஒரு சமமான வாய்ப்பு தராது போனது? எப்படி தவறு நடந்தது ? என்று விளக்கமறிய எழுதுங்கள் , எழுதி முடித்த பின்பு கடிதத்தை எரித்து விடுங்கள் நம் வலிகளுக்கு வடிகாலாய் அமைந்து போனதோடு அதனுடைய வேலையும் முடிந்து போனது நாம் இப்பொழுது லேசாய் , விடுதலையாய் உணர்வோம் இது நம் உணர்ச்சிக்கு வடிகாலாய் அமைவது மட்டுமின்றி மற்றவரிடம் கட்டாயமாக கொட்டித்தான் ஆக வேண்டும் என்கின்ற செயலையும் இது துடைக்கின்றது . அதன் பின் அதை பற்றி நினைக்கும் ஆசையோ பேசும் எண்ணமோ வெகுவாய் குறைந்து விடும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை..


டென்ஷனெல்லாம் சும்மா தூசிங்க.நாளடைவில் நம்மை டென்ஷனாக்கும் செயல்களில் கூட ஏதோ ஒன்று நாம் ஏற்றுக்கொள்ளும் நன்மை பயக்கும் விஷயம் இருக்கின்றதா என தேடல்களில் ஈடுபடுவோம். இந்தக் கட்டத்திற்கு நாம் வந்து விட்டால் டென்ஷனெல்லாம் சும்மா தூசிங்க.

இயல்பான நிலைக்கு வந்து விட்டால் நம் சொந்தங்களையும், உறவுகளையும், நட்புகளையும் சிறப்பாகக் கையாள ஆரம்பிப்போம். இதைவிட வேறு என்ன வேண்டும் இந்த உலகத்திலே?

பூஜ்ஜியத்திற்கு மதிப்பு உண்டா ? உண்டு என்பர் சிலர் இல்லை என்பர் சிலர் இரண்டு பதில்களும் சரியானவை. அதாவது பூஜ்யம் அது இருக்குமிடத்தை பொறுத்து தான் அதற்கு மதிப்பு உண்டா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது

0002 என்பதில் 2 என்ற எண்ணுக்கு முன்னால் எத்தனை பூஜ்யங்கள் போட்டாலும் அதற்கு மதிப்பு கிடையாது. 2000 என்பதில் 2 என்ற எண்ணுக்கு பின்னால் எத்தனை பூஜ்யங்கள் போடுகின்றோமோ அந்த அளவிற்கு மதிப்பு கூடிக் கொண்டே போகும் .மனிதனுடைய டென்ஷனில்லா வாழ்க்கை, உழைப்பு இது போன்று தான் .

இதனை மனதில் கொண்டு டென்ஷனைக் குறைத்தால் வாழ்க்கை இன்ப மயம் தான். நம் வழி நேர்மையாக இருந்தால் அந்த வழியிலேயே தொடர்ந்து சென்றால் எதிர்ப்படும் தடைகள் எல்லாம் கடினமாக தெரியாது காரணம் நாம் விரும்பி செல்லும் வழி. பிறர் யோசனை கூறினால், மறுக்காமல், எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டு யோசித்து நல்ல முடிவை தேர்ந்தெடுக்கையில் நன்மை பயக்கும். Take your own Decision and stick on to it. All is Well.

துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்பம் என்ற முத்து வரும்

துணிந்தபின் பயமில்லையே

கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்

காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு.

சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.

- கவிஞர் வைரமுத்து.

- A.ரோஸ்லின்

9842073219

aaroseline@gmail.com

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X