முதுமையில் மறதி ஏன் : இன்று அல்ஸைமர் நோய் தினம்| Dinamalar

முதுமையில் மறதி ஏன் : இன்று அல்ஸைமர் நோய் தினம்

Added : செப் 20, 2016
Advertisement
முதுமையில் மறதி ஏன்  : இன்று அல்ஸைமர் நோய் தினம்

வயது ஆக ஆக, நம்முடைய ஞாபக சக்தியும் மூளையின் செயல்பாடும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவது இயல்புதான். கார் சாவியைக் காணோம், அலைபேசியை எங்கே வைத்தோம் என்று வைத்த பொருளைத் தேடுவது சாதாரண மறதி. இதை 'டிமென்சியா' (Alzheimer's disease) என்போம். மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளை செல்களின் செயலிழப்பு போன்றவற்றால் இந்த மறதி ஏற்படுகிறது. மூக்குக் கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தேடுவதில் தொடங்கி, வந்த பாதையை மறந்து வீட்டுக்குத் திரும்ப திண்டாடுவது, பேசிக் கொண்டிருக்கும்போதே வார்த்தைகளை மறந்துவிடுவது, அருகில் இருப்பவர்களை அடையாளம் தெரியாமல் தவிப்பது என வளர்ந்து, கடைசியில் 'நான் யார்?' என்பதே தெரியாமல் போவது வரை, முதியவர்களுக்கு மறதி வருவது இப்போது அதிகரித்து வருகிறது. இந்த மறதிக்குப் பெயர் 'அல்ஸைமர்' நோய். இது பெரும்பாலும் மரபியல் ரீதியாகத்தான் வருகிறது. உலக அளவில், 60 வயதைத் தாண்டிய 100 பேரில் 5 பேரையும், 75 வயதைக் கடந்தவர்களில் 4 பேரில் ஒருவரையும் இது பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும், 38 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாருக்குப் பாதிப்பு அதிகம் : பரம்பரையில் யாருக்காவது இது வந்திருந்தால் வாரிசுகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம். ஆண்களுக்கே இதன் தாக்குதல் அதிகம். அதிலும் பக்கவாதம் வந்த ஆண்களை மிக விரைவில் பாதிக்கிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னை, நரம்பு மண்டலக் கோளாறுகள், மதுப்பழக்கம்,புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்தவர்களுக்கும் பார்கின்சன் நோயாளிகளுக்கும் விரைவில் பாதிக்கிறது.
என்ன காரணம் : வயது ஏற ஏற, மூளை செல்கள் சுருங்கும் போது 'அமை லாய்டு' (Amyloid), 'டௌ' (Tau) எனும் இரண்டு புரதப்பொருட்கள் அவற்றில் படிகின்றன. இதனால் பூச்சி அரித்த இலைகள் உதிர்வதைப்போல மூளை செல்கள் சிறிது சிறிதாக இறந்துபோகின்றன. இதன் விளைவால் ஞாபக சக்தி குறைந்து அல்ஸைமர் நோய்க்கு வழிவிடுகிறது.
அறிகுறிகள் என்ன : அல்ஸைமர் நோயின் ஆரம்பத்தில், அன்றாட வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் மறந்து போகும். உதாரணமாக காலையில் சாப்பிட்ட சாப்பாடு, சந்தித்த நபர், சென்ற இடம் ஆகியவை மறந்து போகும். அடுத்த கட்டத்தில், அன்றாட செயல்களைச் செய்வது மறந்து போகும். பல் தேய்ப்பது, குளிப்பது போன்றவற்றைக்கூட வீட்டில் உள்ளவர்கள் நினைவு படுத்த வேண்டியது வரும். கடையில் கணக்குப் பார்த்து மீதி சில்லரையை வாங்காமல் வருவது, பெண்களுக்கு சமையல் செய்வதில் சிக்கல், சாலை விதிகளில் குழப்பம், வங்கிப் பரிமாற்றங்களில் தடுமாற்றங்கள் என மறதி அதிகமாகிக் கொண்டே போகும். அடுத்து அறிவு சார்ந்த செயல்பாடுகள் மறந்து போகும். உதாரணமாக, ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடுகிறாரோ அந்தத் தொழில் சார்ந்த அறிவு குறைந்து கொண்டே வரும். நோய் முற்றிய நிலையில் ஞாபகம் மொத்தமே அழிந்து போகும். வழக்கமாக நடந்து செல்லும் பாதையை மறப்பதில் தொடங்கி, நெருங்கிப் பழகும் முகங்கள், உறவினரின் பெயர்கள் வரை நினைவில் நிற்காது. உணவை வாயில் போட்டுக் கொண்டால் அதை விழுங்க வேண்டும் என்றுகூட தோணாது; மென்றுகொண்டே இருப்பார்கள் அல்லது துப்பிவிடுவார்கள். மனைவியையே 'இவர் யார்?' என்று கேட்கும் அளவுக்கு, மறதி நோய் முற்றிவிடும். இப்படிப்பட்டவர்களை அன்போடும் பரிவோடும் பொறுமையோடும் கவனித்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை. ஆனால்கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிற இன்றைய சூழலில், தன்னிலை மறந்து தவிக்கும் அல்ஸைமர் நோயாளிகளை சரியாக கவனிப்பது ரொம்பவே குறைந்து வருகிறதுமறதி வந்தவரை மூளை நரம்பியல் டாக்டரிடம் காண்பித்தால், அவருக்கு சில பரிசோதனைகளை செய்து, சாதாரண மறதியா அல்லது அல்ஸைமரா என்று சொல்லிவிடுவார். சாதாரண மறதிக்கு சிகிச்சை உள்ளது. அல்ஸைமருக்கு சிகிச்சை இல்லை. சில பயிற்சிகள் மூலமாகத்தான் அதைக் கட்டுக்குள் வைக்க முடியும். எனவே, அல்ஸைமர் நோயை வராமல் தடுப்பதே சிறந்தது.
தடுப்பது எப்படி : அறுபது வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற்றாலும், வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஏதாவது ஒரு வேலையில் மூழ்குவது நல்லது. தினமும் செய்தித்தாள் படிப்பது அவசியம். அவற்றில் இடம் பெறும் கணக்குப் புதிர்கள், சுடோகு மற்றும் குறுக்கெழுத்துப் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இப்படி மூளைக்கு ஏதாவது வேலை கொடுப்பது அவசியம். நாட்டு நடப்புகளை அப்டேட் செய்துகொண்டே இருங்கள். இதற்கு சமூக வலைதளங்களில் கொஞ்ச நேரம் மூழ்கலாம். நண்பர்களுடனும், பேரன் பேத்திகளுடனும் அடிக்கடி பேசுங்கள். அப்போது நீங்கள் சொல்வதைத்தான் அவர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். அடுத்தவர்கள் சொல்வதிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தனித்து இருப்பதைத் தவிருங்கள். நேரத்துக்கு உறங்குங்கள். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ரத்த அழுத்தமும் ரத்தக் கொழுப்பும் கட்டுக்குள் இருக்க வேண்டும். இனிப்பும், கொழுப்பும் நிறைந்த உணவுகளைக் குறைத்து, ஆன்டாக்சிடென்ட், வைட்டமின் ஏ, இ, சி, மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்துங்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள மீன் உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு உடற்பயிற்சி செய்யுங்கள். புகையை விட்டொழியுங்கள். மதுவை மறந்துவிடுங்கள். அல்ஸைமர் உங்களை நெருங்கவே தயங்கும்!
- டாக்டர் கு.கணேசன் மருத்துவ இதழியலாளர், ராஜபாளையம்.

gganesan95@gmail.comவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X