உன் குடும்பம் உன் கையில்!| Dinamalar

உன் குடும்பம் உன் கையில்!

Added : செப் 22, 2016 | கருத்துகள் (2)
உன் குடும்பம் உன் கையில்!

உணர்ச்சி, அறிவு என்கிற எதிரெதிரான விஷயங்களின் ஆச்சரியமான கலவை தான் மனிதன். எப்போதும் உணர்ச்சி பூர்வமாகவே வாழ்ந்து விட முடியாது. குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது என்பது சமூகவியல் துறையில் ஆழம் கண்டவர்களின் கணிப்பு. குடும்ப தலைமை என்பது, அடக்குமுறை, ஆக்கிரமிப்பின் ஆரம்பம் என்று உணர்வதை விட, சரியான பாதுகாப்பு ஏற்பாடு என்பதே உண்மை. ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைமைதான் சாத்தியம். குடும்ப தலைமை என்பது, அரசு தலைவர் போல, அதிக அதிகாரம் உள்ள பதவி அல்ல. அதிக பொறுப்பு உள்ள பதவி என்பதே பொருள். அடக்கு முறைக்கோ, அடிமைத்தனத்துக்கோ இங்கே இடமில்லை. பெண்களை மதித்து, அவர்களது உணர்வுகளை போற்றி, அவளுக்கு துரோகம் செய்யாது, அடிமைப்படுத்தாது, அரவணைப்பு காட்டும் நல்ல ஆண்மகன் தலைமையிலானது என்பதே சிறந்த பாதுகாப்பு தலைமை.
குடும்ப பாதுகாப்பு : நுாற்றுக்கு நுாறு நல்ல மனிதர்கள் தோன்றாதவரை, எந்த ஒரு அமைப்பிலும், குறைகள் இருக்கத்தான் செய்யும். சில சரி செய்யப்பட வேண்டியவை. சில சகித்து கொள்ள வேண்டியவை. அதை விடுத்து, 'குடும்பம்' என்ற அமைப்பையே உடைத்தெறிய நினைக்கும் எந்த ஒரு முயற்சியையும், சமூகம் நிராகரிக்க வேண்டும்.குடும்பம் என்ற அமைப்பின் நோக்கம், நிகழ்கால நிம்மதி, எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடு. இந்த தலைமுறையின் வசதியோடு, எதிர்கால தலைமுறைக்கான அன்பு, அரவணைப்பு, உத்தரவாதம் ஆகிய அனைத்துமே நல்ல குடும்பத்தில் கிடைக்கிறது. தன்னலம், நிகழ்கால இன்பம் இதை மட்டுமே விரும்புவோர், அடுத்த தலைமுறை பற்றிய அக்கறை இல்லாதவர்கள். இவர்கள் தான் குடும்பம் என்கிற அமைப்பையே உடைக்கிறார்கள். தனிமனித ஒழுக்கம், சமூக அமைப்பு, பொறுப்புள்ள வாழ்க்கை இவற்றில் நம்பிக்கை உடையவர்கள், குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்கவே விரும்புகிறார்கள்.
கருத்து வேறுபாடு : கணவனும், மனைவியும் சண்டை போடுவதோ, கூச்சல் போடுவதோ, கருத்து வேறுபாடு கொள்வதோ ஆச்சரியமான விஷயம் அல்ல. கருத்து வேறுபாடும், மோதலும் குடும்பத்திற்குள் இருப்பது, ஓர் இயற்கை. கணவன், மனைவி உறவில் மிக முக்கியமான விஷயம் சார்ந்திருத்தல். கணவன், மனைவியை பல விஷயங்களில் சார்ந்திருப்பதும், மனைவி கணவனை சார்ந்திருப்பதும், குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்கும். மரணம் அல்லது எதிர்பாராத பிரிவுகள் நேர்ந்தால், தனித்து இயங்கும் திறனும், தெம்பும், இருவருக்கும் இருக்க வேண்டும். அந்த திறமை இருக்கின்ற காரணத்தாலே ஒருவரை, ஒருவர் சாராமல் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஸ்கூட்டரில் 'ரிசர்வ்' என்று பெட்ரோலுக்கு வைத்திருப்போம். அது இருக்க வேண்டும். ஆனால், ரிசர்விலேயே வண்டியை ஓட்ட கூடாது. அது பாதுகாப்பு ஏற்பாடு தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உறவினர்கள் இம்சை : இவள் இல்லாமல், என்னால் வாழ முடியாதா? என்ற எண்ணம் கணவனுக்கு வந்து விட்டால், இவனை நம்பி நான் இல்லை என்ற ஆணவம் மனைவிக்கு வந்து விட்டால் குடும்பம், குடும்பமாக இருக்காது. எந்த வீட்டில், ஒரு பெண்ணை அடக்கி, ஒரு ஆண் ஜெயிக்கிறானோ, அங்கே ஓர் மிருகம் ஜெயிக்கிறது என்று பொருள். எங்கே ஒரு ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாளோ அங்கே, ஒரு 'அடங்காபிடாரி' ஜெயிக்கிறது என்று பொருள். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தோற்று போக தயாராக இருந்தால், அங்கே குடும்பம் ஜெயிக்கிறது என்று பொருள். பொதுவாக, கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் குறைவு. இரு தரப்பு உறவினர்களால் தான் குடும்பங்களில் அதிக குழப்பங்கள் வருகின்றன. தம்பதிகள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வந்து போகின்ற வெளி உறவுகளின் செயல்பாடுகள், ஒன்றாக இருக்கிற தங்கள் குடும்ப மகிழ்ச்சியை பாதிக்க அனுமதிக்க கூடாது. உறவுகளின் உளறல்களை பெரிதாக எடுத்து கொள்ளாமல், தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பது என்று தீர்மானித்து விட்டால், குடும்பத்தில் 50 சதவீத சண்டை தீர்ந்து விடும்.
அன்பு : உலகப்புகழ்பெற்ற ஒரு சிறுகதை. கணவனிடம் 'வாட்ச்' இருந்தது. அதற்கு தங்கத்தில் செயின் வாங்க கணவனுக்கு ஆசை. ஆனால், பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகான கூந்தல். அதை முடித்து வைக்க, 'தங்க கிளிப்' வாங்க ஆசை. ஆனால், வசதியில்லை. முதல் திருமண ஆண்டுவிழாவில், இந்த வாட்சை வைத்து என்ன செய்ய என்று விற்று விட்டு, மனைவி கூந்தலுக்கு தங்க கிளிப் வாங்கி வந்தான் கணவன். ஆனால், தன் அழகான கூந்தலை வெட்டி, விற்று விட்டு கணவன் வாட்சுக்கு செயின் வாங்கி வந்திருந்தாள் மனைவி. ஒருவருக்காக மற்றவர், கஷ்டப்பட தயாராகும்போது அங்கு அன்பு வலுவடைகிறது. நம்மை கஷ்டப்படுத்தியவர்கள் யாரையும் நமக்கு பிடிப்பதில்லை. நமக்காக கஷ்டப்பட்ட யாரையும் நாம் வெறுப்பதில்லை. ஒரு வயலில் விளையும் விளைச்சல், அதனால் வரும் லாபம் விவசாயிக்கா? வியாபாரிக்கா? என்கிற பொருளாதார போர் தான் பல வீடுகளில் மாமியார், மருமகள் சண்டை. ஆண்மகனும், அவன் தரும் லாபங்களும், இத்தனை ஆண்டு வளர்த்த எனக்கா? இப்போது வந்த இவளுக்கா? என்கிற யுத்தம்தான் பல குடும்பங்களில் பிரச்னை.
கூட்டணி அரசு : குடும்பம் என்பது ஒரு கூட்டணி அரசு. அது பெரும்பாலும் எதிர்கட்சிகளால் கவிழ்வது இல்லை. தன் கட்சி உறுப்பினர்களாலேயே கவிழும். அவரவர் எல்லையை, அவரவர் உணர்ந்தால் நல்லது. பிறரை கெடுப்பது பாவம். பிறர் உரிமையை ஏற்க மறுப்பது வளர்ச்சியின்மை. கணவரின் தாயை, ஏதோ ஆறாவது விரல்போல் அசிங்கமாக நினைக்கும் மருமகள் மாற வேண்டும். மாமியாரை மதிக்கும்படி, பெண்களை பெற்ற தாய்மார்கள் சொல்லித்தர வேண்டும். உலக அறிவு, மானுடப்பண்பு பெற்ற எந்த ஒரு மருமகளும் மாமியாரை அவமதிக்க மாட்டாள். இந்திய குடும்ப அமைப்பில், கணவன், மனைவி, மனம் விட்டு பேச இடம், சூழல், நேரம் வாய்ப்பதில்லை. அடிக்கடி பேசி தீர்க்கிற பிரச்னைகளை கூட, பேசாமல் மனதிற்குள் புதைத்து, புதைத்து ஒரு நாளில் எரிமலையாக வெடித்து, ஆடித்தீர்க்கும் பழக்கம் ஒரு சாபக்கேடாக இருக்கிறது. இதற்கு, கணவன், மனைவி நேரம் ஒதுக்கி பிரச்னையை பேசி தீர்த்தால் அமைதியை காப்பாற்றலாம். கவலைகளுக்கும், துக்கங்களுக்கும் அவ்வப்போது வடிகால் கிடைத்து விட்டாலே, பாதி பிரச்னைகள் முடிந்து விட்டது என்று பொருள். பெரும்பாலான பெண்கள், தாம் சொல்லும் குறைகளை கேட்டு, கணவன், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இல்லை. பொறுமையாக கேட்டாலே திருப்தி அடைந்து விடுவார்கள். ஆறுதலாக இரண்டு வார்த்தை, அன்பான அரவணைப்பு அவர்கள் மனத்துயரினை மாற்றி விடும். குறை தோன்றாது
வாழ்க்கை துணையிடம் : எப்போதும் குறைகாணும் குடும்ப தலைமை மகிழ்ச்சி தராது. குறைகள் உண்மை என்றால், அதை சரி செய்து கொண்டால் முன்னேற முடியும் என்று அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். எதிர் தரப்பில் குறை இருந்தால் கூட, நமக்கு அவர்கள் மீது அன்பு இருந்தால், குறை தெரியாது. குறை தோன்றாது. குறையே இருந்தாலும் சொல்ல மனம் வராது.சிலைக்கு வலிக்குமோ என்று சிற்பி வருந்தினால், சிற்பம் பிறக்காது. வலி சிலைக்கு மட்டும் அல்ல, செதுக்குகிற உளிக்கும் தான் என்று, சிற்பத்திடம் சொல்லி விட்டு, சிற்பி தொடர்ந்து செதுக்க வேண்டும். அதை போல குடும்பத்திலும், கணவன், மனைவி உறவில் சண்டை வந்தால், அந்த வலி குடும்பத்திற்குத்தான், என்று நினைத்து, குடும்பத்தில் சண்டையை விடுத்து, வாழ்வில் சுகம் காண விழைய வேண்டும்.
எம்.பாலசுப்பிரமணியன்சமூக ஆர்வலர்

காரைக்குடி. 94866 71830.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X