-நமது நிருபர்-நெல்லிக்கனியில் பல வகைகள் இருந்தாலும், சிறுநெல்லி, பெருநெல்லி என இரண்டை மட்டுமே வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்க்கிறோம். இன்றைய விவசாயிகள் பெருநெல்லி வளர்ப்பு பரப்பளவை அதிகரித்து, வியாபாரத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்த வரிசையில், தனது தோட்டத்தில் மருந்து வகையைச் சேர்ந்த எலுமிச்சையை ஐந்து ஏக்கரிலும், பெருநெல்லியை ஐந்து ஏக்கரிலும் வளர்த்து வருகிறார்.கேரள எல்லையோரம் உள்ள பாலார்பதி கிராமத்தில், நந்தகுமார் என்ற விவசாயி தான் இவற்றை சாகுபடி செய்து வருகிறார்.ஐந்து ஏக்கரில் சுமார், ஆயிரம் நெல்லி மரங்களை சொட்டு நீர் பாசனத்தில் வளர்த்து வருகிறார். பதினைந்துக்கு பதினைந்து அடி இடைவெளி விட்டு வளர்ந்துள்ள நெல்லி மரங்கள் உயர்ந்து காணப்படுகின்றன.இதுகுறித்து விவசாயி நந்தகுமார் கூறியதாவது: மற்றவர்களிடம் இல்லாத ரகத்தை சாகுபடி செய்தால், நல்ல வரவேற்பு கிடைக்கும்.நிலையான விலையும் கிடைப்பதோடு, தேவைப்படுவோர் நேரடியாக கொள்முதல் செய்யவே ஆசைப்படுவர்.எனது வளர்ப்பில் நான்கு வகை நெல்லி ரகங்கள் வளர்கின்றன. என்.ஏ.,7, சாக்தையா, காஞ்சன், கிருஷ்ணா ரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இந்த ரகங்கள் மாறி மாறி சாகுபடியாகின்றன. அதிக மழை தேவையில்லை, குறைந்தளவு நீரும்(சொட்டுநீர்), சாண உரமுமே தரப்படுகின்றன. ஆண்டுக்கு இரண்டு முறை காய்க்கிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் நெல்லிக்கனி சீசன் காலங்களாகும்.மிதமான மழை, நல்ல வெயில் நீர் வளம் உள்ள சீசனில் ஒரு ஏக்கருக்கு, 5 - 6 டன் நெல்லிக்காய் கிடைக்கும். குறைந்தபட்சம், ஐந்து ஏக்கருக்கு, 25 டன் வரை ஆதாயம் கிடைக்கிறது. பெரும்பாலும் வியாபாரிகள் ஜூஸ் மற்றும் ஊறுகாய் தயாரிப்புக்கே வாங்கிச்செல்கின்றனர். தரமான நெல்லிக்கனி கிலோ, 45 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்கிறது.குறைந்தபட்சம், கிலோ,25 -30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.நெல்லிக்காயில் பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்பு, நீர்சத்து மற்றும் இரும்பு சத்தும் கொண்டுள்ளது. பல், ஈறு, வியாதிகளுக்கு இது நல்ல மருந்தாகும். எலும்பு, தாடை, வளர்ச்சிக்கு நல்லது.மலச்சிக்கல், நீர்சுருக்கு, நீரிழிவு, மூளைக்கோளாறு, இருதய நோய், காசநோய், ஆஸ்துமா, மூலநோய் உள்ளிட்ட வியாதிகளுக்கும் நெல்லிக்கனி ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பதால், விவசாயிகளிடம், நேரடியாக மக்கள் கொள்முதல் செய்து கொள்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE