அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சீராக உள்ளது - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெ., உடல்நிலை சீராக உள்ளது

Updated : செப் 23, 2016 | Added : செப் 23, 2016 | கருத்துகள் (144)

சென்னை: மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூச்சுத்திணறல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு 10: 30 மணி அளவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தற்போது முதல்வர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் வருவதை அறிந்து அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தலைமையிலான குழு காத்திருந்தது. எமர்ஜென்சி பிரிவில் சேர்க்கப்பட்ட முதல்வருக்கு இதயநோய் நிபுணர் டாக்டர். ஒய்.வி.சி ரெட்டி மற்றும் டாக்டர் சத்யமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா, MCCA பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக இருக்கிறார். தற்போது ஜெயலலிதா உடல்நலம் சீராக உள்ளது. இயற்கையாக சுவாசித்து வருகிறார். MCCA பிரிவில் 2வது தளத்தில் படுக்கை எண் 2008 ல் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் அருகில் சசிகலா மட்டும் இருக்கிறார்.
தகவல் பரவியதையடுத்து அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் துவங்கியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் அவர் வீடு திரும்புவது குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வர்.

தலைவர்கள் கருத்து : தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரகுமாரும் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா அவர்கள் பூரண நலம் பெற அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மாற்றம் : முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் அப்பல்லோ மருத்துவமனை முன் குவிந்து வருகின்றனர். இதனால் நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை க்ரீம்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு : உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்று சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X