வல்லரசாக்கும் வல்லுனர்கள் ஒளிந்திருப்பது எங்கே?| Dinamalar

வல்லரசாக்கும் வல்லுனர்கள் ஒளிந்திருப்பது எங்கே?

Added : செப் 24, 2016 | கருத்துகள் (1)
வல்லரசாக்கும் வல்லுனர்கள் ஒளிந்திருப்பது எங்கே?

படைப்பாற்றல், புதிய சிந்தனை, நவீன யுக்திகளை கையாளும் சாதுர்யம் மற்றும் விரைந்து செயலாற்றும் திறன் போன்ற சக்திகளை உள்ளடக்கியது, இன்றைய இளைய சமுதாயம்.சென்னையில், சில மாதங்களுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, காவல் துறைக்கும், ராணுவத்துக்கும் நிகராக செயலாற்றி, பேரிடர் மேலாண்மையில் தனி முத்திரை பதித்தது, இளைஞர் சமுதாயம். இந்தியாவில், 13 - 35 வயதுக்கு இடைப்பட்டோரின் இளைஞர்களின் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில், 40 சதவீதம்; இன்று, உலகிலேயே அதிக இந்த வயதுடையோரை கொண்ட நாடு இந்தியா தான். எனினும், இன்றைய இளைய தலைமுறை சமுதாயத்துக்கு மிகப் பெரிய சவால்களாக விளங்கும் பல பிரச்னைகள், இவர்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றன. இளைய தலைமுறையினரின் தடுமாற்றத்திற்கு முக்கிய பிரச்னை, வேலையில்லாத் திண்டாட்டம். தமிழகத்தில் மட்டும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை தேடுவதையே பிரதான வேலையாக செய்து கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, 80 லட்சம். வேலை கிடைக்காத விரக்தி யும், பணத்தேவையும், இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றன. வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை, கஞ்சா கடத்தல், கள்ள நோட்டு பரிமாற்றம், பாலியல் பலாத்காரம், கூலிப்படையில் சேர்ந்து கொலை பாதகம் செய்தல், தீவிரவாத கும்பலோடு ஐக்கியமாதல் போன்ற வன் குற்றங்களில் ஈடுபடுவோர், 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களே. ஐ.எஸ்., எனப்படும், மேற்காசிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தில் இந்திய இளைஞர்கள் சிலரும் சேர்ந்திருப்பதாக வரும் தகவல், நெறி தவறிப் பயணிக்கும் நம் இளைஞர்களின் மன நிலையை வெளிப்படுத்துகிறது. மதுப்பழக்கம், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை வஸ்துக்கள், சமூக வலைதளங்கள் போன்ற விஷயங்கள், இன்றைய இளைய சமுதாயத்தினரை போட்டி போட்டு சீரழிக்கின்றன. இந்தியாவில், போதை வஸ்துக்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் பெருகி வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதில், பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், முன்னிலை வகிக்கின்றனர்.போதை ஊசி மருந்தை ஏற்றிக் கொள்வதால், இளைஞர் மத்தியில், எச்.ஐ.வி., - டி.பி., மற்றும் கல்லீரலை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோய் தாக்குதல் மட்டுமின்றி, தற்கொலைகளும் நாளுக்கு நாள் பெருகி வர, போதைப்பழக்கம் முக்கியமான ஒரு காரணமாக கருதப்படுகிறது. 10 ஆண்டுகளில், போதை அடிமைகள், 25 ஆயிரத்து, 426 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். சராசரியாக, நாள் ஒன்றுக்கு, ஏழு பேர் இவ்வாறு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது, வரதட்சணை கொடுமை, வறுமை, காதல் தோல்வி போன்ற காரணங்களால் ஏற்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கையை விட அதிகம்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, மதுப்பழக்கம் மட்டும் ஆண்டுதோறும், 8 சதவீதம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக பிரபல மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் பெருகி வருவது, சமூக ஆர்வலர்கள் மத்தியில், கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சில நட்சத்திர ஓட்டல்களில், நவ நாகரிக மங்கையருக்கென, தனி, 'பார்'கள் நடத்தி, இந்திய கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றனர். உலக உற்பத்தியில், 50 சதவீத, 'விஸ்கி'யை குடித்து, தீர்ப்பது இந்தியர் தானாம். மதுவின் கொடுமையால் ஏற்படும் புற்றுநோய் உட்பட பல வித நோய்கள், கடன் தொல்லை, மணமுறிவு, தற்கொலை, சாலை விபத்து, பாலியல் வன்முறை போன்ற எதிர்மறையான சம்பவங்கள் அன்றாடம் நடப்பதை கண்கூடாக காண்கிறோம்.அடுத்து, நம் இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான சக்தியை வீணடிப்பதில் முன்னோடியாக இருப்பவை, சினிமா, கல்லுாரி காதல், மொபைல் போன் மற்றும் சமூக வலை தளங்கள்.இந்திய இளைஞர்களிடம் மதுப்பழக்கத்தை துாண்டுவதில், சினிமா மிகப் பெரிய பங்கு வகிப்பதாக, துபாயில் நடைபெற்ற இதய நிபுணர்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.சினிமாவில் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் போலியான சாகசங்களை உண்மையென நம்பி, ஏமாந்து, தங்கள் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கிறது இளைஞர் கூட்டம். சினிமா நடிகர்களின் கட் - அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தும், வெறித்தனமான அவர்கள் விசுவாசமும்; கல்லுாரி பெண்களும் இளைஞர்களுக்கு நிகராக, திரையரங்குகளில் விசிலடித்து, ஆரவாரம் செய்யும் அவலமும் சீரழிவின் உச்சகட்டம். தங்களை கதாநாயகனாக பாவித்து, மூர்க்கத்தனமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி, விபத்துக்குள்ளாகி தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இளைஞர்கள் ஏராளம். கடந்த ஆண்டு, அதி வேகத்தில் வண்டி ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்துகள் மூலம், நம் நாட்டில், 75 ஆயிரம் இளைஞர்கள் இறந்திருக்கின்றனர்.இன்றைய கல்லுாரி காதல், தமிழகத்தில் புதிதாக நாமகரணம் செய்யப்பட்ட ஆணவக்கொலைகள், கவுரவக் கொலைகள் போன்ற புது அத்தியாயங்களை துவங்கி வைத்திருக்கிறது. ஒருதலை பட்சமாக காதல் வயப்பட்டு, காதலுக்கு இசைவு தெரிவிக்காத கன்னியர் மீது, 'ஆசிட்' வீசியும், நடுரோட்டில் வெட்டி சாய்த்தும், தங்கள் பழியை தீர்த்துக் கொள்ளும் மிருகங்களாக மாறி விடுகின்றனர், இன்றைய சில இளைஞர்கள். மொபைல்போனில் தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞரின் மனதை கெடுத்து நாசம் செய்யும் முக்கிய வேலையை, சமூக வலைதளங்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. 30 சதவீதம் இளம் பெண்களும், இணையதளங்களில் வெளியாகும் தரக்குறைவான பாலியல் படங்களை பார்ப்பதில் மோகம் கொண்டிருப்பதாக வந்துள்ள செய்தி, அதிர்ச்சியை தருகிறது. ஆபத்தான சூழ்நிலைகளிலும் கூட, அலைபேசி கேமராவில், சுயமாக தங்களை படம் எடுக்கும், 'செல்பி' மோகத்தால், உயிரிழந்தோர் பலர். தங்கள் அபரிமிதமான சக்தியை, இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அரசு வேலையை எதிர்பார்த்து, கால விரயம் செய்வதை தவிர்த்து, சுயதொழில் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற எளிய துறைகளில் கூட, சில படித்த இளைஞர்களும், பெண்களும், மிகப் பெரிய அளவில் சாதித்து வருவதை பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானிகளாக மூன்று பெண்கள் அவதாரம் எடுத்திருப்பது, பெண் இனத்துக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது. இளைஞர்கள் கனவு காண்பதோடு மட்டுமல்லாமல், அறிவுத்திறனையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து, பிரச்னையை கண்டு அஞ்சாமல், கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற உறுதியோடு, லட்சியப் பயணத்தை தொடர அவர்கள் முன் வந்தால், விவேகானந்தர் தேடிய இளைஞர்களை, இந்தியாவை வல்லரசாக்கும் வல்லுனர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
- மருத்துவர் டி.ராஜேந்திரன் -
சமூக ஆர்வலர்


இ-மெயில்: rajt1960@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X