கொள்ளை போலீசு... தொல்லை ஆரம்பம்!| Dinamalar

கொள்ளை போலீசு... தொல்லை ஆரம்பம்!

Added : செப் 27, 2016
Share
ஜாகிங் செல்ல தயாராக, சாக்ஸ் அணிந்து கொண்டிருந்தாள் சித்ரா. ''நான் வந்துட்டேன்னு சொல்லு... எப்படி போனேனோ, அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...'' என்று, ரஜினி ஸ்டைலில் கூறியபடி, 'என்ட்ரி' கொடுத்தாள் மித்ரா.''என்ன மித்து, 'கபாலி' காய்ச்சல் இன்னும் தீரலையா?'' சிரித்தபடி கேட்டாள் சித்ரா.அதற்கு மித்ரா, ''இது கபாலி பாதிப்பு இல்லக்கா... சிட்டியில இருந்து
கொள்ளை போலீசு... தொல்லை ஆரம்பம்!

ஜாகிங் செல்ல தயாராக, சாக்ஸ் அணிந்து கொண்டிருந்தாள் சித்ரா. ''நான் வந்துட்டேன்னு சொல்லு... எப்படி போனேனோ, அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...'' என்று, ரஜினி ஸ்டைலில் கூறியபடி, 'என்ட்ரி' கொடுத்தாள் மித்ரா.
''என்ன மித்து, 'கபாலி' காய்ச்சல் இன்னும் தீரலையா?'' சிரித்தபடி கேட்டாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''இது கபாலி பாதிப்பு இல்லக்கா... சிட்டியில இருந்து எலக்ஷனுக்கு முன்னாடி டிரான்ஸ்பர்ல போன, இன்ஸ்பெக்டர்கள் பலரும் திரும்பி வந்திருக்காங்க. அவங்க சொல்லப்போற டயலாக்கை சொல்லிப்பார்த்தேன்,'' என்றாள்.
''டிரான்ஸ்பர்னு சொன்னதும், இன்னொரு விஷயம் ஞாபகம் வருது...புதுசா போட்ட டிரான்ஸ்பர்ல, கோவை சரகத்துல இன்ஸ்பெக்டர் எண்ணிக்கை அதிகமா வந்திடுச்சாம். திரும்ப அனுப்பினா மேல்மட்டம் வரை பதில் சொல்லணும்னு, ஸ்பெஷல் பிரிவுக்கெல்லாம் இன்ஸ்பெக்டர் நிரப்பிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஆமா...ஐ.ஜி., டிரான்ஸ்பர்ல போகும்போது, இன்ஸ்பெக்டர்களுக்கும் டிரான்ஸ்பர் போட்டாங்களே...அது என்னாச்சு?'' என்று
கேட்டாள் மித்ரா.
''அந்த லிஸ்ட்ட அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க. அந்த லிஸ்ட்ல இருந்த, சில இன்ஸ்பெக்டருங்க பேரு, இப்ப வெளிவந்த புது லிஸ்ட்லயும் இருக்கு. நேர்மையான இன்ஸ்பெக்டருங்க சிலபேரு மனு குடுத்தும், டிரான்ஸ்பர் லிஸ்ட்ல பேரு வரலையாம்,'' என்றாள் சித்ரா.
''நம்மூர் குற்றப்பிரிவு போலீஸ்காரங்க, பாக்கெட்டை நிரப்ப செய்ற டெக்னிக்கை பார்த்தால் புல்லரிக்குதுக்கா,'' என்றாள் மித்ரா.
''அப்படி என்ன புது டெக்னிக்?''- கேட்டாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''முன்னாடியெல்லாம், நகை திருட்டு கும்பலை பிடிச்சா, நகைக்கடைகளை குறி வச்சு நகை, கரன்சியை கறப்பாங்க சில போலீஸ்காரங்க. இப்ப, பைக் திருட்டு கும்பலை பிடிச்சா, குற்றவாளிகிட்ட பேசி, பழைய இரும்பு கடைகளுக்கு கூப்பிட்டுப்போயி விசாரிக்கிறாங்க. திருட்டு பைக்கை உங்க கடையிலதான் வித்துருக்கான்னு சொல்லி கறக்குறாங்களாம்,'' என்றாள்.
''ப்பூ...இது மட்டும் தான் உனக்கு தெரியுமா? நம்மூரு போலீஸ் ரேஞ்சே, இப்ப வேற. அதிக வண்டிக பார்க் பண்ணியிருக்கற இடத்துல, குற்றப்பிரிவு போலீஸ்காரங்க சிலபேரு, பழைய குற்றவாளிகளை வச்சு பைக் திருடுறாங்க. அந்த பைக்குகளை, பார்க்கிங் ஸ்டாண்டுல 'என்கொயரி பைக்'னு சொல்லி நிறுத்திர்றாங்க. பைக்கை பறிகொடுத்தவரு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா, ரெண்டு, மூணு தடவை அலைய விட்டுட்டு, அஞ்சாயிரம், பத்தாயிரம்னு பறிச்சிட்டு, ஏதோ இவங்களே கண்டுபிடிச்ச மாதிரி, பார்க்கிங் ஸ்டாண்டுல நிக்குற பைக்கை குடுத்து அனுப்புறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஆமா...சேலத்துல இப்படி திருடுன ஒருத்தன், போலீஸ் பத்தி விலாவாரியா சொன்னத, 'வாட்ஸ்ஆப்'ல பார்த்தேன். அதை இப்ப நம்மூர்லயும் 'பாலோ' பண்றாங்களா... கொடுமை!'' என்று அங்கலாய்த்தாள் மித்ரா.
''இது மாதிரிதான் மதுக்கரை லிமிட்டுல, காரை கடத்தி நாலு கோடி ரூபா கொள்ளையடிச்ச போலீஸ் கதையும். கொள்ளைக்கு முந்தின நாளு, கரூர் போலீஸ்காரங்களுக்கு, நம்மூர்ல ரூம் போட்டுக் குடுத்து, 'ரூட் மேப்' சொல்லிக் குடுத்தது, 'செல்வத்துக்கு ராஜாவான' போலீஸ் 'இன்ஸ்' ஒருத்தர்தானாம்.
'நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்' னு சொல்லிட்டு திரிஞ்ச அவரோட வண்டவாளத்தை பார்த்து, டிபார்ட்மென்டே இப்ப சிரிக்குதாம்,'' என்றாள் சித்ரா.
''கடைசில, நம்ம போலீஸ் கமிஷனர் பயந்தது நடந்துருச்சு,'' என்றாள் மித்ரா.
''எதை சொல்றே?'' என்று கேட்டாள் சித்ரா.
''சமீபத்துல நடந்த ரோல்கால் மீட்டிங்ல, 'வெளி மாவட்டத்துல இருந்து டூட்டியாவோ, பேமிலியாவோ போலீஸ்காரங்க வந்தா, உயர் அதிகாரிங்களுக்கு தகவல் சொல்லிட்டு ரூம் போடுங்க; நீங்களா ரூம் போட்டு குடுத்து, அவங்க செய்யற தப்புக்கு நீங்களும் சேர்ந்து மாட்டிக்காதீங்க'னு சொல்லியிருந்தாராம். இப்ப, அவரு சொன்னது போலவே நடந்திருச்சுன்னு, போலீஸ்காரங்கல்லாம் பேசிக்கறாங்க,'' என்றாள் மித்ரா.
''கமிஷனர் நினைச்சது பலிச்சுருச்சு... ஆனா, நம்ம எஸ்.பி., நினைக்கறது ஒண்ணு; நடக்கறது இன்னொண்ணா இருக்கு,'' என்றாள் சித்ரா.
புருவத்தை சுருக்கிய மித்ரா, ''இதென்ன மேட்டர்?'' என்றாள்.
அதற்கு சித்ரா, ''சிறுவாணி ஆற்றுக்கு குறுக்கே அணை கட்ட, ஆனைகட்டி வழியாத்தான் மணல், சிமென்ட், கல் கொண்டு போறதுக்கு எஸ்.பி., 'செக்' வச்சாங்க. ஆனா, மதுக்கரை வழியா கேரளாவுக்கு மணல், ரேஷன் அரிசியெல்லாம் ஜோரா கடத்தறாங்க. போலீசுக்கு மாமூல் போறதால கண்டுக்கறதில்லை. இந்த செக்போஸ்ட்டையும், எஸ்.பி., கவனிச்சா நல்லா இருக்கும். ஆமா, இன்னொரு விஷயம். உள்ளாட்சித் தேர்தல்ல, யாருக்கு வெற்றின்னு ஒவ்வொருத்தரும், சீட் வாங்க போட்டி போடறாங்கன்னு கேள்விப்பட்டேனே,'' என்றாள்.
''ஆமாக்கா...அசெம்ப்ளி எலக்ஷன்ல, சீட்டு கிடைக்கும்னு நம்பிக்கையில இருந்த பல பேரு, கவுன்சிலருக்கு போட்டி போட சான்ஸ் கிடைச்சா போதும்னு, அமைச்சர சுத்தி, சுத்தி வர்றாங்க,'' என்றாள் மித்ரா.
''மேயர் பதவிய தாய்க்குலத்துக்கு ஒதுக்குனதால, அந்த கனவுல இருந்தவங்க பலபேரு செம அப்செட். நம்மூரு அரசாங்க வக்கீலு ஒருத்தருக்கு, லோக்சபா, அசெம்ப்ளி எலக்ஷன்ல போட்டி போட சான்ஸ் கிடைச்சும், கடைசி நேரத்துல கை நழுவி போச்சு; மேயர் பதவி அவருக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கறதா, கட்சிக்காரங்க பேசிட்டிருந்தாங்க. ஆனா கடைசி நேரத்துல, அந்த சான்சும் இல்லாம போனதால, அவர் செம அப்செட்,'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.
''அதெல்லாம் சரி, மேயர் பதவிய லேடீசுக்கு ஏன் ஒதுக்குனாங்களாம்?'' - கேட்டாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''இன்னொரு அதிகார மையம் உருவாக கூடாதுங்கிறதுல, ரொம்பவும் கவனமா இருக்காங்க. அனுசரிச்சு போற ஆட்களை நியமிக்கணும். பெண்களா இருந்தா சொல்படி கேப்பாங்கன்னு, மேலிடத்துல நெனைக்கிறாங்க. கட்சியில சீனியரா இருக்கற, 'மாஜி' கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கெடைக்கும்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.
''மாநகராட்சி வடக்கு துடியலுார் வட்டாரத்துல உள்ள ரெண்டு வார்டுகள்ல, சிட்டிங் கவுன்சிலர்களுக்குதான் 'சீட்'னு, அந்த கவுன்சிலருங்களே புரளி கிளப்பிட்டிருக்காங்களாம். ஊழல்ல பேரு வாங்குன, இந்த ரெண்டு கவுன்சிலருங்களுக்கும் சீட் குடுத்தா, எலக்ஷன்ல வேலை பார்க்க மாட்டோம்னு, கட்சிக்காரங்க போர்க்கொடி பிடிக்கறாங்களாம். இதுல கவிதையா பேரு வச்சிருக்கற கவுன்சிலர், மாஜி மேயர் செ.ம.வேலுச்சாமிக்கு சொந்தம்னு, ஆளுங்கட்சியில உள்ள எதிர்கோஷ்டி முஷ்டி உயர்த்துதாம்,'' என்று அடுத்த எலக்ஷன் மேட்டர் சொன்னாள் மித்ரா.
அப்போது 'டிவி'யில் கமல்ஹாசன், 'வனிதாமணி...வனமோகினி...' என்று டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். சித்ரா 'டிவி' சேனலை மாற்றினாள். ரஜினியின் 'தில்லு முல்லு' படம் ஜோராக ஓடிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த சித்ரா, ''நம்ம ஜி.எச்.,ல ஒரு ஸ்டாப்போட தில்லுமுல்லு கூடிருச்சாம்,'' என்றாள்.
''யாரு அக்கா அவரு?'' - கேட்டாள் மித்ரா.
''டெண்டர் வேலைகளை கவனிக்கிற ஒருத்தர், டெண்டர் விண்ணப்பங்கள்ல இருக்கற விபரங்களை, முதல்லயே பிரிச்சு பார்த்து, தனக்கு சாதகமான ஆளுங்களுக்கு தகவல் சொல்லிர்றாராம். இதுக்காக கணிசமா ஒரு தொகையையும் வாங்கிக்கிறாராம். இதை தெரிஞ்ச ஆஸ்பத்திரி நிர்வாகம், சரியான ஆதாரம் கிடைக்கட்டும்னு வெயிட் பண்ணிட்டிருக்காம்,'' என்றாள் சித்ரா.
அப்போது வீட்டின் முன் பிச்சை கேட்டு வந்த ஒருவர், 'அப்பனே...முருகா...வேல்முருகா இந்த உலகத்தை காப்பாத்துய்யா...தர்மம் போடுங்க சாமி' என்று கூறியபடி மணி அடித்தார்.
'டிவி' யை செய்தி சானலுக்கு மாற்றினாள் சித்ரா. அதை பார்த்த மித்ரா, ''என்னக்கா, தேர்தல் நேரத்துல கார்ப்பரேஷன் பி.ஆர்.ஓ.,வை மாத்திட்டாங்கன்னு சொல்றாங்க?'' என்றாள்
''ஆமா, சென்னைக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க; ரிட்டயர்மென்டுக்கு இன்னும் ஒம்பது மாசம்தான் இருக்கு; இங்கேயே அமைதியா கழிச்சிடலாம்னு நெனைச்சிருந்தாரு. திடீர்னு தூக்குனதால சோகமாயிட்டாரு. முக்கியஸ்தரோட, ஏதாவது உரசல் ஏற்பட்டிருக்கலாம்னு அதிகாரிங்க மட்டத்துல பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளா பார்த்து, தேர்தல் பணிக்கு போட்டிருக்காங்களாமே,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.
''உண்மைதான். உள்ளாட்சி தேர்தலாச்சே... அதிகாரிங்களுக்கு உதவியா இருந்தாதானே, காரியம் சாதிக்க முடியும். 100 வார்டு பத்தியும், சல்லடையா அலசி ஆராய்ஞ்சிருக்காங்க. எதிர்க்கட்சிக்காரங்க 'டாமினேட்' செய்யற இடங்கள்ல, அதிகாரிகளை வச்சு, தங்களுக்கு சாதகமா கச்சிதமா வேலைய முடிக்க 'பிளான்' போட்டு வச்சிருக்காங்க. தி.மு.க.,காரங்களும் உன்னிப்பா கவனிச்சுக்கிட்டுதான் இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''சரி...சரி...கிளம்புக்கா...வெயில் ஏறுது,'' என மித்ரா கூறவும், இருவரும் ஜாகிங் புறப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X