ஆளுங்கட்சி ஆபீசில் "காச்...மூச்...!' எதிர்க்கட்சி ஆபீசில் "கப்...சிப்...!'

Added : செப் 27, 2016
Advertisement
வெயில் நேரத்தில் வெளியே சென்று வீடு திரும்பிய சித்ராவுக்கு, தாகம் தணிக்க தண்ணீர் கொடுத்தாள் மித்ரா. அதை வாங்கி குடித்து, களைப்பாறிய சித்ரா, ""தண்ணீர் கொடுத்ததும்தான், தேர்தல் வெற்றிக்கு தண்ணில மிதக்க விட்ட சம்பவம் ஞாபகத்துக்கு வருது,'' என்றாள்.""தேர்தல் நடக்கறத்துக்கு முன்னாடியே வெற்றிக்கு விழாவா<,''என்று வியப்புடன் கேட்டாள் மித்ரா.""உள்ளாட்சி தேர்தல்
ஆளுங்கட்சி ஆபீசில் "காச்...மூச்...!' எதிர்க்கட்சி ஆபீசில் "கப்...சிப்...!'

வெயில் நேரத்தில் வெளியே சென்று வீடு திரும்பிய சித்ராவுக்கு, தாகம் தணிக்க தண்ணீர் கொடுத்தாள் மித்ரா. அதை வாங்கி குடித்து, களைப்பாறிய சித்ரா, ""தண்ணீர் கொடுத்ததும்தான், தேர்தல் வெற்றிக்கு தண்ணில மிதக்க விட்ட சம்பவம் ஞாபகத்துக்கு வருது,'' என்றாள்.
""தேர்தல் நடக்கறத்துக்கு முன்னாடியே வெற்றிக்கு விழாவா<,''என்று வியப்புடன் கேட்டாள் மித்ரா.
""உள்ளாட்சி தேர்தல் கவனிப்பு தான் இப்போதே துவங்கிடுச்சே. ஆனா, நான் சொல்லறது, சட்டசபை தேர்தல் வெற்றிக்கான பார்ட்டியாம்,'' என்று சித்ரா சொன்னாள்.
""சட்டசபை தேர்தல் வெற்றிக்கு இப்போது என்ன உபசரிப்பு; யார் கொடுத்தாங்க' என, ஆர்வத்தோடு கேட்டாள் மித்ரா.
""தெற்கில் ஜெயிச்சவர் தான், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களை குஷிப்படுத்த, வேன் ஏற்பாடு செஞ்சு, மேட்டுப்பாளையத்தில உள்ள தீம் பார்க்குக்கு ஒட்டுமொத்தமா அழைச்சுட்டு போனாராம். ஒருநாள் பூராவும், தண்ணில விளையாடினாங்களாம்,'' என்றாள் சித்ரா.
இருவரும் நடந்தபடியே, அருகில் உள்ள காய்கறி கடைக்கு, துணிப்பையுடன் சென்றனர். ""திருப்பூரில், பிளாட்பாரக் கடை, தள்ளு வண்டி வியாபாரிகள் எல்லாம் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க தெரியுமா,'' என்று மித்ரா கேட்டாள்.
""ஏன், வியாபாரிகளுக்கு சிறப்பு திட்டம் அறிவிச்சிருக்காங்களா,'' என்றாள் சித்ரா.
""அதெல்லாம் ஒன்னுமில்லே. தள்ளு வண்டிகள்ல, சில கவுன்சிலர்கள் மாமூல் வாங்கீட்டு இருந்தாங்க. தேர்தல் வர்றதால, கட்சிக்காரங்க பிசியாக இருக்காங்க. அதனால், கொஞ்சம் நாள் அவங்க தொந்தரவு இல்லாமல் இருக்கலாமுன்னு நினைக்கறாங்க,'' என்று மித்ரா கூறினாள்.
""அடுத்து வர்றவங்களாவது, இதுமாதிரி இல்லாம இருக்கணும், அதுசரி, ஒப்பந்தக்காரர் செய்த ஆக்கிரமிப்பு தெரியுமா,'' என்று, அடுத்த விஷயத்துக்கு சித்ரா தாவினாள்.
""எந்த ஒப்பந்ததாரரு? என்ன செஞ்சாரு'' என்ற மித்ராவின் பேச்சில், ஆவல் வெளிப்பட்டது.
""செட்டிபாளையம் பகுதியில, சாக்கடை கால்வாய் வேலை, எட்டு மாசமா, பாதியில் நிக்குது. அங்க, ஒரு வீட்டின் பாத்ரூம், பொது இடத்தில இருந்தது தான், அதுக்கு காரணமாம். அந்த வீட்டு ஓனர், மாநகராட்சி ஒப்பந்தக்காரர். கால்வாய்க்கு குழி தோண்ட வந்த பொக்லைனை, தன் வீட்டு பாத்ரூம் பாதிக்காமல், சுற்றி வளைத்து குழி தோண்ட வெச்சிருக்கார்.
""ஏற்கனவே வளைவான குறுகிய ரோடு, விபத்து ஏற்படுமுன்னு, அங்க இருக்கறவங்க, அதை கண்டிச்சு, போராட்டம் நடத்தியிருக்காங்க. போலீஸ், மாநகராட்சி அதிகாரிங்க வந்து, பேச்சு நடத்தி பிரச்னையை முடிச்சிருக்காங்க,''என்று, மூச்சுவிடாமல் சித்ரா ஒப்பித்தாள்.
""பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கணும்னு சட்டம் போட்டாங்க; ஆனா, எல்லா பதவிகளையும் பெண்களுக்கே ஒதுக்கிட்டாங்க,'' என்ற, மித்ராவின் பேச்சு, உள்ளாட்சி தேர்தல் பக்கம் திரும்பியது.
""அதனால, உனக்கென்ன கஷ்டம்? நீயும் ஒரு வார்டுல நிக்கலாமே?'' என்று, சித்ரா கேட்டாள்.
""ஒவ்வொரு மாவட்டத்துலயும், இடஒதுக்கீடு செஞ்சது, அந்தந்த மாவட்ட செயலாளர் வசதிக்குத்தான் நடந்திருக்கு. அவங்களுக்கு யாரும் இடைஞ்சல் செய்யக்கூடாதுன்னு, மாவட்ட ஊராட்சி தலைவர் உட்பட, முக்கியமான பதவிகளை மாத்தி, இப்படி ஏற்பாடு செஞ்சிருக்காங்க. எப்படியிருந்தாலும், ஆண்கள் தானே உள்ளாட்சி நிர்வாகம் பார்க்க போறாங்க; பதவியில யார் இருந்தா என்ன?'' என்றாள் மித்ரா.
""இடஒதுக்கீடு விஷயம் தெரியாம, அ.தி.மு.க.,நிர்வாகிகளுக்கு சங்கடமா பேச்சு,'' என்றாள் சித்ரா.
""ஆளுங்கட்சியில, ஏமாளி நிர்வாகிகளா?'' என்று கிண்டலாக கேட்டாள் மித்ரா.
""ஆமா. மாவட்ட செயலாளருக்கு வேண்டியவங்களுக்கு, இடஒதுக்கீடு விவரம் தெரிஞ்சிடுச்சு. ஏமாந்த நிர்வாகிகளுக்கு தெரியலை. எந்த வார்டுக்கு பணம் கட்டறதுனு தெரியாம, யூனியன் ஆபீஸ் போய் கேட்டிருக்காங்க. தெரியாதுனு சொல்லி அனுப்பிட்டதால, ஆண் வார்டு எது, பெண் வார்டு எதுன்னு தெரியாம பணத்தை கட்டி, இப்போ முழிச்சுக்கிட்டு இருக்காங்களாம்,''என்றாள் சித்ரா.
""அ.தி.மு.க., ஆபீசில, காச்... மூச்சுன்னு சத்தமாம். தெற்கு தொகுதியில பேனர் வச்சதுல, சில பெயர் விடுபட்டது சம்பந்தமா, பகுதி செயலாளர் கேட்டிருக்காரு. அது, அப்படியே பெரிசாகிடுச்சு. சத்தம் ஓவரானதும், மாவட்ட செயலாளர் கண்டிச்சு அனுப்பியிருக்காரு. அப்புறம் திருப்பூர் மேயர் வேட்பாளர் அறிவிப்பு வந்ததும், எல்லாத்தையும் மறந்துட்டு,"பொன்னாடை' அரசியல் ஆரம்பிச்சிடுச்சு,'' என்றாள் மித்ரா.
""ஆளுங்கட்சியில மா.செ., நிக்கறார்; எதிர்க்கட்சியில யாராம். "கப்...சிப்...'ன்னு இருக்குதே?'' என, சித்ரா கேள்வி எழுப்பினாள்.
""அங்க, "மாஜி' நிக்கறது சந்தேகமாம். சட்டசபை தேர்தலில், முன்னாள் தோழருக்கு வாய்ப்பு கொடுக்கல. அதனால, அவருதான் மேயர் வேட்பாளரா இருப்பார்னு சொல்றாங்க. திருப்பூர் மாநகராட்சிய பொறுத்த வரை, "தேர்தலுக்கு முன்; தேர்தலுக்கு பின்' என்று, எதிர்க்கட்சிகள், இரண்டு கூட்டணி நிலைப்பாட்டை எடுத்திருக்காங்க. ம.ந.கூ.,வும், தி.மு.க., கூட்டணியும், வெவ்வேறு திசையில போட்டியிட்டாலும், "ஆளும்கட்சியை வீழ்த்தணும்'னு ஒரே இலக்கோடு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
""இன்னொன்னு தெரியுமா? "சிட்டி மம்மி', 51வது வார்டுல போட்டியிட பணம் கட்டியிருக்காங்க. மறுபடியும் வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ, மேயரா இருந்தவங்க, 11 ஆயிரம் ரூபா கட்டித்தானே ஆகணும்?'' என்று சொன்ன சித்ரா, ""மித்ரா, நான் கிளம்பறேன். போய் சமையல் செய்யணும்,'' என்றவாறே நடையை கட்டினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X