இந்த நாள் ரமேஷ்க்கு இனிய நாள்...

Updated : செப் 30, 2016 | Added : செப் 30, 2016 | கருத்துகள் (9)
Share
Advertisement
இந்த நாள் ரமேஷ்க்கு இனிய நாளாகட்டும்...மஸ்குலர் டிஸ்ட்ரபி எனப்படும் தசை சிதை நோயால் பாதிக்கப்பட்டு, இந்த சமூகத்தால் ஒடஒட விரட்டப்பட்டு, ஒரு கிராமத்தில் ஒரங்கட்டப்பட்டு, நம்பியவர்களால் உறிஞ்சப்பட்டு, வறுமை நிலையில் இருந்தாலும் இந்த சமூகத்திற்கு நான் ஏதாவது செய்வேன், செய்தே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் தன் வாழ்க்கையை ந(க)டத்துபவர்தான் ரமேஷ். இப்போது 36 வயதாகும்
 இந்த நாள் ரமேஷ்க்கு இனிய நாள்...

இந்த நாள் ரமேஷ்க்கு இனிய நாளாகட்டும்...

மஸ்குலர் டிஸ்ட்ரபி எனப்படும் தசை சிதை நோயால் பாதிக்கப்பட்டு, இந்த சமூகத்தால் ஒடஒட விரட்டப்பட்டு, ஒரு கிராமத்தில் ஒரங்கட்டப்பட்டு, நம்பியவர்களால் உறிஞ்சப்பட்டு, வறுமை நிலையில் இருந்தாலும் இந்த சமூகத்திற்கு நான் ஏதாவது செய்வேன், செய்தே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் தன் வாழ்க்கையை ந(க)டத்துபவர்தான் ரமேஷ்.
இப்போது 36 வயதாகும் ரமேஷ் 27 வயது வரை சராசரியாக சந்தோஷமாக பழநியில் வாழ்ந்த இளைஞர்தான்.அப்பா நாகேந்திரன் அம்மா கலைமணி ஆகியோருக்கு ஒரே மகன்

தமிழ் மீது உள்ள பற்று பாசத்தின் காரணமாக கல்லுாரியில் தமிழ் வரலாறு எடுத்து படித்தவர்.பட்டதாரியானபிறகுதான் தெரிந்தது தான் படித்த படிப்பிற்கு தமிழ்த்தாய் திருநாட்டில் எங்கும் வேலை கிடைக்காது என்பது.
எதற்கு வேலை பார்க்கணும் சொந்த தொழில் செய்வோம் என்று ஆரஞ்சு மிட்டாய் தயாரித்து அதை கடைகளுக்கு விற்பனை செய்துவந்தார்.இவரது ஆரஞ்சு மிட்டாய்க்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆரஞ்சு மிட்டாயை காசு கொடுத்து வாங்க முடியாத கிராமப்புற குழந்தைகளுக்கு பாக்கெட்டில் போட்டு கொண்டு போய் இலவசமாக கொடுப்பதிலும்,பத்திரிகைகளில்வரும் இவர்களுக்கு உதவுங்கள் விளம்பரத்தில் வருபவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு பணம் அனுப்பவதிலும் சந்தோஷம் கண்டுவந்தார்.
சொந்த தொழில்,கவுரமான வருமானம்,பிறருக்கு உதவும் சுபாவம் கொண்ட நம்ம பையனுக்கு நல்லபடியாக திருமணம் செய்துவைத்துவிடுவோம் என்று பெற்றோர் நினைத்தபோதுதான் அந்த விபரீதம் வெளிப்பட்டது.

ரமேஷ்க்கு அடிக்கடி காலில் வலி ஏற்பட்டது, சாதாரண வலி என்று உதாசீனப்படுத்தினார்,ஒரு நாள் நடக்கமுடியாமல் டாக்டரிடம் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு போனபிறகுதான் இவருக்கு 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' எனப்படும் தசை சிதை நோய் வந்துள்ளது தெரிந்தது.
தசைச்சிதைவு நோய் வந்தால் அடிக்கடி கீழே விழ நேரிடும், விழுந்தால் தானாக எழ முடியாது. படி ஏற முடியாது. கழிப்பறையில் உட்காரமுடியாது உட்கார்ந்தால் எழமுடியாது. நடக்க முடியாமல் போய்விடும்.வயது ஏற ஏற உடல் எடை கூடி தனக்கும் மற்றவர்களுக்கும் சிரமத்தை உண்டாக்கும்.ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாக்கி இதய தசையை தாக்கி இறப்புக்கு கொண்டு சென்றுவிடும்.


உடல் இயக்கத்திற்கு பிசியோதெரப்பி ,விரல்களை ஒருங்கிணைக்க ஆக்குபேஷனல் தெரப்பி, ஹைட்ரோ தெரப்பி' , யோகா தெரப்பி, ப்ளே தெரப்பி' என வரிசையாகச் சிகிச்சைகள் விடாமல் கொடுக்கப்படவேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியாக ஊக்கம் தந்துகொண்டே இருக்கவேண்டும். இதற்கு இன்று வரை மருந்து கிடையாது, பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக்கொள்ள நிறைய பொறுமையும் பணமும் வேண்டும்


அன்றாடம் வீட்டிற்கு பிசியோதெரபிஸ்ட்டை வரவழைத்து ஐநுாறு ஆயிரம் ரூபாய் கொடுத்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.யாரால் இதெல்லாம் முடியும் வாழ்க்கை போகும் வரை போகட்டும் என்றே பலர் இருந்துவிடுவர்,பின் இறந்துவிடுவர்.

இந்த விஷயம் தெரிய வந்ததும்,அப்ப இனி உங்களால வீட்டு வாடகை தரமுடியாது காலி செஞ்சுக்கிரீங்களா? என்று பழநியில் குடியிருந்த வீட்டு ஒனர் சொன்னதும் ஆறாயிரம் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தற்போது பழநிக்கு பக்கத்தில் உள்ள பெரியகலையம்புதுார் கிராமத்தில் இரண்டாயிரம் ரூபாய் வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.அப்பாவின் பென்ஷன் பணம் ஐயாயிரத்தில் வீட்டு வாடகை உணவு மற்றுமுள்ள செலவுகளை சமாளிக்கவேண்டிய சூழ்நிலை.
வயது முதிர்ந்த, செயல்பாடுகள் குறைந்துவிட்ட பெற்றோர்கள் இருவரையும் பார்த்துக்கொள்ளவேண்டும், தன்னையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலையில் ரமேஷ் கொஞ்சமும் மனம் தளராமல் நகர்ந்து நகர்ந்தே எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்.

ஒரு சின்ன ஸ்டூல் ஒன்றை வைத்துக்கொண்டுள்ளார் அதையும் போகுமிடத்திற்கு கொண்டு போவார் போகவேண்டிய இடம் வந்ததும் அதில் உட்கார்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குவது,காலையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது,பின் அடுப்பை பற்றவைத்து சமையல் செய்து பெற்றோருக்கு கொடுப்பது, அவர்களுக்கான காலை நேரபணிவிடைகளை செய்வது பின் வீட்டை சுத்தம் செய்வது பாத்திரம் விலக்குவது பிறகு தனது நோய்க்கான பயிற்சி செய்வது என்று இயங்கிவருகிறார்.
இவரது ஆரஞ்சு மிட்டாய் சுவையில் மயங்கியவர் பலர் வீட்டில் இருந்தே மிட்டாய் தயாரித்து கொடுக்காலாமே என்று சொல்ல, கடன் வாங்கி மிட்டாய் தயாரித்து ஒருவரை சம்பளத்திற்கு வைத்து மிட்டாய் சப்ளை செய்துவந்தார்.ஒரு வாரம் கழித்து ஆயிரம் ரூபாய் மதிப்பு மிட்டாய்களுடன் அவர் ஒடிப்போய்விட்டார்.

நம்ம நிலை தெரிஞ்ச நம்மள இப்பிடி ஒருத்தர் ஏமாற்றிவிட்டாரே என்று நொந்து போயிருந்த ரமேஷிடம் தெரியாத ஆளை வச்சா அப்பிடித்தான் நடக்கும் தெரிஞ்ச ஆளை வச்சுக்குங்க என்று சொல்லி நமக்கு தெரிஞ்ச நல்ல பையன் என்று ஒருவரை இவரிடம் சேர்த்துவிட்டனர்.
ஒரு மாதம் கழித்து சம்பளம்,சைக்கிள், மிட்டாய் மற்றும் மிட்டாய் விற்ற வசூல் பணத்துடன் போன அந்த 'நல்ல பையன்' இன்று வரை கண்ணில் படவில்லை.இதற்கு மேல் கடன் பட்டு தொழில் நடத்த முடியாது என்று தொழிலைவிட்டுவிட்டார்.

தொழில் நின்று போய்விட்டது என்றோ,கடனாகிவிட்டது என்றோ,இந்த நிலையிலும் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்றோ கூட ரமேஷ் கவலைப்படவில்லை. மாதம் மாதம் அரசுப்பள்ளி குழந்தைகள் பலருக்கு தான் இலவசமாக தந்துவந்த ஆரஞ்சுமிட்டாயை இனி தரமுடியாமல் போய்விட்டதே என்றுதான் இப்போதும் நினைத்து ரமேஷ் வருத்தப்படுகிறார்.
இப்போது இவரிடம் இருப்பது யாரானாம் பறிக்கமுடியாத தமிழ் அறிவு.இதை வைத்து தின,வார,மாதம் போன்ற தமிழ் இதழ்களுக்கு நகைச்சுவை துணுக்குகள்,கதைகள்,கவிதைகள் எழுதிவருகிறார்.இவரை படைப்புகளை ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டு அதற்கான சன்மானம் வழங்கினாலே போதும் எனது வாழ்க்கை கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும்.

(முதல் கட்டமாக நான் பணியாற்றும் தினமலருக்கு கவிதைகள் மற்றும் நகைச்சவை துணுக்குகள் எழுதிதரும்படி நான் கேட்டுக்கொண்டுள்ளேன்,மற்ற ஊடகங்களும் வழிகாட்டவேண்டுமாய் தயவு செய்து வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்)
ரமேஷ் செய்துவரும் இன்னோரு அற்புதமான வேலை மஸ்குலர் டிஸ்ட்ரபி நோய் பாதித்தவர்களுக்கு கவுன்சிலிங் செய்து உற்சாகம் கொடுப்பது, இவரது ஊக்கமான பேச்சு காரணமாக பல குடும்பங்களில் நிகழ இருந்த தற்கொலைகள் தடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது பெரிய விஷயம்.தான் சொல்வதைவிட நடிகர் ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் சொன்னால் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்கும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் இதைச் சொல்வேன்.

நேற்று என்பது கடந்து போன நாள்,நாளை என்பது கற்பனையான நாள், இன்றைய நாளே கையிலிருக்கும் நாள் இந்த நாளை இனிய நாளாக அமைத்துக்கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கும் ரமேஷிடம் பேசுவதற்கான எண்:9750474698.அவரது மின்னஞ்சல்:rameshsudalai1980@gmail.com
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSK - CARY,யூ.எஸ்.ஏ
13-அக்-201601:04:04 IST Report Abuse
VSK இதுபோன்ற நல்ல செய்திகளை வெளியிடும் முருகேஷ் அவர்களைப் பாராட்டுகிறேன்.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
07-அக்-201612:26:40 IST Report Abuse
ravi கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் - உங்களை அந்த அளவுக்கு எல்லா நலன்களையும் கொடுத்து உங்களிடமிருந்து கீழ்த்தரமான வார்த்தைகளையும் வாங்கிக்கொள்கிறானே - அவன் தான் கடவுள் - நல்லா இருக்கும்போது மற்றவர்களுக்கு உதுவுபவனே கடவுள் - நிச்சயம் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அந்த வரிசையில் இருக்கமாட்டார்கள் - ரமேஷ் எல்லா நலன்களையும் பெற்று வாழனும் - அருகில் இருப்பவர்கள் கொஞ்சம் உதவி செய்தால் நன்றாய் இருக்கும் - திருடர்கள் கொஞ்சம் கண்ணியத்தோடு பணத்தில் கொழுப்பவர்களிடம் திருடர்கள் - வாழ்க உங்கள் தொண்டு - ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா
06-அக்-201601:09:06 IST Report Abuse
Thiyagarajan Srimbhs நமது நெப்போலியன், திருநெல்வேலி ல் இதற்கு என மருத்துவமனை நடத்தி வருகிறார். தினமலர் மூலம் செய்தி வந்தது.இவர் அங்கு மருத்துவம் பார்க்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X