மதுரை மாநகராட்சி வேட்பாளர் தேர்வில், முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி ஆதரவாளர்களை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஓரங்கட்டி உள்ளார். இதனால், அழகிரி, கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்பு செயலராக இருந்தவர், அழகிரி. லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, பின், நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
ஆத்திரம் : லோக்சபா மற்றும் சட்ட சபை தேர்தல்களில், அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களுக்கு, 'சீட்' கொடுக்கப்படவில்லை; ஆதரவாளர்களின், கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டன.
இதனால், பொருளாளர் ஸ்டாலின் மீது, அழகிரி ஆத்திரத்தில் உள்ளார். அதை கண்டுகொள்ளாத ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் பலரையும், தன்பக்கம் இழுத்தார். இதனால், அழகிரி ஆதரவு வட்டம் சுருங்கியது; ஒரு சிலர் மட்டுமே, தொடர்ந்து, அழகிரி பின்னால் இருக்கின்றனர். இதில், தற்போதைய மாநகராட்சி கவுன்சிலர்கள், நான்கு பேர் அடக்கம். அவர்கள், இம்முறையும், விருப்ப மனு கொடுத்து காத்திருந்தனர். ஆனால், மதுரை மாநகராட்சி வேட்பாளர்கள் பட்டியலில், அழகிரி ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதோடு நில்லாமல், 77வது வார்டில், பாண்டிச்செல்விக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இவர், ஏற்கனவே அழகிரி ஆதரவாளராக இருந்து, ஸ்டாலின் முகாமுக்கு தாவிய, 'மிசா' பாண்டியனின் மனைவி.
ஒருவேளை, தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று, மாநகராட்சியை பிடித்தால், பாண்டிச்செல்வியை மேயராக்கவும், ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மகிழ்ச்சி : இதன்படி, ஒட்டுமொத்த அழகிரி கூடாரத்தையும், மதுரையில் காலி செய்து விடலாம் என, ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளார். இந்த நடவடிக்கையால், மதுரையில் உள்ள, ஸ்டாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். ஆனால், அழகிரி கடும் கோபத்தில் உள்ளார். 'விரைவில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து, ஸ்டாலின் மீது புகார் கூற உள்ளார்' என, அழகிரி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -