எதிரியாகவே இருந்தாலும் தவித்த வாய்க்கு தண்ணீர் தருவதே நம் பண்பாடு. திண்ணை ஓரத்தில் பானைகளில் நீர் நிரப்பி, வழிபோக்கர்களுக்கு தாகத்தை போக்கிய தமிழர்கள், அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்கு கையேந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு நீர் வரும் முக்கிய நதிகளான காவிரி, கர்நாடகாவிலும், பாலாறு, ஆந்திராவிலும் உற்பத்தி ஆகின்றன. தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது; பாலாற்றில் புதிய அணைகளைக் கட்டி, தமிழகத்தை வறட்சி மாநிலமாக்கப் பார்க்கிறது, ஆந்திரா. முல்லைப் பெரியாறு அணையில், கேரளா பிரச்னை செய்கிறது. நாம் மனுவைச் சுமந்த படி நீதிமன்ற படிக்கட்டுகளில், ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறோம்.
நேரு, பிரதமராகப் பொறுப்பேற்றதும், பல திட்டங்களைத் தீட்டினார். ஒவ்வொரு திட்டத்தின் கீழும் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என, விரும்பினார். அதற்காக ஏற்படுத்தப்பட்டவை தான், பக்ரா நங்கல் நாகார்ஜுன சாகர், ஹிராகுட், வைகை அணை போன்ற அணைகள்.
அப்போது அவர், 'இந்த நதி பஞ்சாபில் இருக்கிறது; அது, ஆந்திராவில் இருக்கிறது' என, பார்க்கவில்லை; இந்தியாவிற்குள் இருக்கிறது என யோசித்தார்.
தமிழகத்துக்கு நீர் வழங்குமாறு கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு இடுகிறது. அங்குள்ள குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல் கட்சிகள் சில, மக்களை துாண்டி விட்டு போராட்டம் நடத்துகின்றன; பேருந்தை உடைக்கின்றனர்; கடைகளை நொறுக்குகின்றனர்; மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு செய்கின்றனர். கர்நாடக அரசு, அதையே காரணமாகக் காட்டி, மேல் முறையீடு செய்து, ஒவ்வொரு முறையும் தண்ணீரை நிறுத்தப் பார்க்கிறது. இதுவே ஒவ்வொரு முறையும் அவலமாக தொடர்கிறது. இந்நிலை மாற, 70 ஆண்டு சுதந்திர தேசத்தில் வழியே இல்லையா என்றால், இருக்கிறது, அதற்கு ஒரு அருமையான உபாயம்.
நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உற்பத்தியாகும் முக்கிய நதிகள் யாவும் நாட்டின் சொத்தாக அறிவிக்க வேண்டும். மொழி வாரியாக, நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள நதிகள் அனைத்தும் இந்தியத் தாயின் சொத்து என, அறிவிக்க வேண்டும். அதை ஒரு மாநிலம் மட்டும் சொந்தம் கொண்டாடக் கூடாது என, அறிவுறுத்த வேண்டும். ராணுவம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, விமானம், சுரங்கம் என, பல துறைகளை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல, நதிகளையும் தன்
கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கத் தான் நிறைய பணம் தேவைப்படும். நதிகளை தேசியமயமாக்க, செலவே கிடையாது; ஒரே ஒரு கையெழுத்து போதும். நதிகளை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நீரை பங்கீடு செய்ய வேண்டும். இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது தானே நம் ஒவ்வொருவரின் கனவு. அணு ஆயுதம், ராணுவ பலம் மட்டுமே இந்தியாவை வல்லரசாக்கி விடாது. வறுமை ஒழிப்பு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, சுகாதாரம், கல்வியறிவு போன்றவையும் அவசியம். மனிதனின் முக்கிய தேவையான உணவு உற்பத்திக்கு தேவையான தண்ணீரைக் கேட்டு, ஒரு மாநிலம் கையேந்துவதும், தர மறுக்கும் இன்னொரு மாநிலம், போராட்டம் நடத்துவதும், வல்லரசு நாட்டின் லட்சணங்களாக கருத முடியாது.
மத்தியில் ஆளும் எந்தக் கட்சியாக இருந்தாலும், மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு என்ன லாபம்... எத்தனை எம்.பி.,க்கள் கிடைப்பர்... என, குறுகிய நோக்கில் பார்க்காமல், 'பரந்த பாரதம்!' என்ற நிலையில் பிரச்னையை அணுகினால், நதி நீர் பங்கீட்டில் பிரச்னை இருக்காது; இருக்கும் பிரச்னைகளும் விரைவில் தீரும்.
- லலிதாமதி -
எழுத்தாளர்
இ-மெயில்: eslalitha@gmail.com