சீனத்தில் களைகட்டிய சித்த மருத்துவம்! | Dinamalar

சீனத்தில் களைகட்டிய சித்த மருத்துவம்!

Added : அக் 02, 2016 | கருத்துகள் (5)
 சீனத்தில் களைகட்டிய சித்த மருத்துவம்!

உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து மற்ற நாடுகள் நிமிர்ந்து மரியாதையுடன் பார்க்கும் நாடு சீனா. அப்படிப்பட்ட சீனாவானது இந்தியாவின் மேல் மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் நமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் புத்த மதம்தான்.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில், லின்யி மாவட்டத்தில் அரசின் சார்பாக நடந்த முதலாவது மருத்துவ கருத்தரங்கிற்கு சீன அரசின் சார்பாக பல்வேறு நாடுகளின் டாக்டர்கள், பாரம்பரிய மருத்துவர்கள், தாவரவியல், நுண்ணுயிரியல் வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.இதில் இந்தியாவின் பழமை வாய்ந்த, பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவம் பற்றி பேச இந்தியாவில் இருந்து எனக்கும், கர்நாடகாவில் இருந்து டாக்டர் அருளமுதனுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
செப்.,19, 20ல் நடந்த இக்கருத்தரங்கில் பங்கேற்க சீனா சென்ற எங்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பும், விருந்தும் அளிக்கப்பட்டது. சென்றது முதல் திரும்பி வந்தது வரை எங்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரும் பொறுப்பை சைனோ இந்தோ மென்பொருள் தொழில்நுட்ப மேலதிகாரி கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ்பாபு ஏற்றுக்கொண்டார்.
சீனத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பை வாசகர்களுக்கு தெரிவிக்கும் கடமை எனக்கு உள்ளது.இந்தியாவும், சீனாவும் நாகரிகத்தால் ஒன்றுபட்டது. இரண்டு நாடுகளும் வலராற்று காலத்திற்கு முந்தைய பழமை வாய்ந்தவை.
சீனர்கள் ஆர்வம் :இந்தியாவில் தோன்றிய புத்தமதம் தற்போது சீனாவின் முதன்மையான மதமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் சித்த மருத்துவம் பற்றி ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்புகின்றனர். அவர்களின் அக்குபஞ்சர், அக்குபிரஷர், ஹிப்னாடிஸம் மற்றும் நமது சித்த மருத்துவத்தின் பிரிவுகளையும், சித்த மருத்துவத்தின் அங்கமான யோகக்கலையின் சிறப்பையும் சேர்த்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர்.
சித்தாந்தம் - தாயோயிசம், மாத்திரை - சுன், வாசி - க்ஷீ, அண்டம் பிண்டம் - ஜாங்பூ, நாடி - ஜிங், இடகலை, பின்கலை - இங்யாங், பஞ்சபூத பஞ்சிகரணம் - ஷென்ஹோ என தமிழ் மருத்துவத்திற்கும், சீன மருத்துவத்திற்கும் உள்ள தொடர்புகளை நாங்கள் விளக்கியபோது கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
சீனாவில் சித்தர்கள்:இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்ற நமது நவபாஷாண சித்தர் போகர் 'போயாங்' என்றும், 'போதி தர்மர்' என்றும் அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம். அதுமட்டுமின்றி, கொங்கணவர், புலிப்பாணி, பூனைக்கண்ணர் போன்ற சித்தர்கள் சீனாவிற்கு சென்று வந்த வரலாற்று குறிப்புகள் உள்ளன. போதி தர்மருக்கு சவோலின் கோயிலில் நினைவுச்சின்னம் அமைத்து வழிபடுகின்றனர்.
ஐந்து கி.மீ.,க்கு மேல் மலை உச்சியில் இருக்கும் அவரது சிலையை அவரது சீடர்கள் தினமும் காலையில் அரைமணி நேரத்திற்குள் நடையும், ஓட்டமுமாக சென்று வணங்குகின்றனர். அவர் கற்றுக்கொடுத்த வர்மக்கலையானது, போதி தர்மரின் 'சவோலின் குங்பூ' என்று அங்கு அழைக்கப்படுகிறது.
காஞ்சி போதிதர்மர்
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவிற்கு சென்ற போதிதர்மர் என்ற சித்தர், 14 ஆண்டுகள் யாரிடமும் பேசாமல் அமர்ந்து தியானம் செய்துள்ளார். அவரை பார்த்து வியந்த மாங்க் துறவிகள், 'உங்களை போல் நாங்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டபோது, நமது சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட உணவு முறைகள், சிலம்பம், வர்மம், களரி போன்ற கலைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்.
இந்த மருத்துவ கலையானது, 'போதி தர்மரின் சாயோலின் மருத்துவம்' என்று அங்கு அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் டாக்டர் செந்தில்வேலை, சாயோலின் நிர்வாகத்தினர் தற்போது தொடர்பு கொண்டு போதி தர்மர் பற்றிய பல்வேறு விளக்கங்களை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்து வந்திருந்த எங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, சித்தர்கள் பிறந்த புண்ணிய பூமியில் இருந்து நாங்கள் வந்துள்ளதாக பெருமைப்பட்டு கொண்டனர்.
பிறநாட்டவருக்கும் குங்பூ நமது நாட்டின் வர்மக்கலை போல், சீனாவில் சாயோலின் குங்பூ பிரபலமாக உள்ளது. இதை புத்த மரபாகவே சீனர்கள் வணங்குகின்றனர். நாம் சாமியார்கள் என்று சொல்வது போல், புத்த துறவிகளை 'மாங்க்' என்று சீனர்கள் அழைக்கின்றனர். கி.பி.791ல் இருந்து 1580ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்ட 248 மாங்க் சமாதி துாபிகள் அங்கு காணப்படுகின்றன.
சீனாவில் ஏறத்தாழ 5 நாட்கள் 3000 கி.மீ., துாரம் சுற்றினோம். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என மரங்கள் காணப்பட்டன. நகரில் பல இடங்களில் மரங்களை சுற்றி சாரம் கட்டுவது போல் முட்டு வைத்திருக்கின்றனர். என்னவென்று கேட்டபோது வியப்பாக இருந்தது. வனப்பகுதியில் இருந்து மரங்களை வேரோடு தோண்டி, நகர்ப்பகுதிகளில் சாலையோரங்களில் நட்டு பராமரிக்கின்றனர்.
சமஅளவில் சித்த மருத்துவர்கள் :பாரம்பரிய சீன மருத்துவத்திற்கு அரசு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம். ஆனால் இலவச சேவை இல்லை. தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் இல்லை. ஆங்கில மருத்துவர்களும், சீன பாரம்பரிய முறை மருத்துவர்களும் சம அளவில் பணிபுரிகின்றனர்.
வலிப்பு, தண்டுவட கோளாறு, புற்றுநோய், இருதயநோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு இரு மருத்துவர்களும் சேர்ந்து சிகிச்சை அளிக்கின்றனர். பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள் பாரம்பரிய சீன மருத்துவத்தை கூடுதலாக 3 ஆண்டுகள் படித்து, தங்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.
மூலிகைக்கு நோபல் :பிற நாடுகளில் இருந்து ஆங்கில மருந்துகளை வாங்குவதில்லை. அனைத்து வித ஆங்கில மருந்துகளையும் அரசு, தனியார் மருந்து நிறுவனங்கள் தாங்களே தயாரிக்கின்றன. ஒவ்வொரு மருந்து செய் நிலையத்திலும் ஆங்கில மருந்துகளுக்கு சமமாக பாரம்பரிய மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன. உலகளாவிய காப்புரிமை பதிவு செய்கின்றனர். அப்படிதான் சீனாவின் பாரம்பரிய மூலிகை மருந்துக்கு நோபல் பரிசு கிடைத்தது. மருந்து நிறுவனங்கள், தங்களது ஆரோக்கியமான இளம் பணியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி கொடுத்து ராணுவத்திற்கு தயார் செய்கிறது. இதற்கு மாநில அரசு கூடுதல் பங்களிப்பை தருகிறது.
காலை உணவு 7:00 மணி, மதிய உணவு 12:00 மணி, இரவு உணவு 6:00 மணி என்று சரியாக உட்கொள்கின்றனர். 7:00 மணிக்கு பின், பல நகர் தெருக்கள் அமைதியாகி விடுகின்றன. 60 ஆண்டுகள் பழமையான தனியார் கட்டடமாக இருந்தாலும், அரசே இடித்து அப்புறப்படுத்தி விடுகிறது. எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த கட்டடங்களே உள்ளன. மின்தடை எங்கும் இல்லை. கட்டடங்கள் இரவு மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.
தொழில் நுட்பமுன்னேற்றம்
கட்டடத்தில் சூரியஒளி தகடு பதிக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் சீனர்கள் முன்னேறி இருக்கின்றனர். நாம் பயன்படுத்தும் பார்கோடு, மணி டிரான்ஸ்பர் என அனைத்தையும் 1999ம் ஆண்டு முதலிருந்தே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் பெரும்பாலான பொருட்கள் மிகவும் மலிவாக கிடைக்கிறது. 10 ஆயிரம் ரூபாய் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாத செலவிற்கு போதுமானது.பணி நேரம் போக மற்ற நேரங்களில் வெளியில் சென்று உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர். டாக்சி டிரைவர், பஸ் டிரைவர், போலீஸ், டூரிஸ்ட் கைடு என அனைத்திலும் பெண்களே அதிகம் வேலை செய்கின்றனர்.
தனது இயற்கை வளத்தை தக்கவைத்துக்கொண்டது. தமது பாரம்பரிய உணவுமுறை, மரபு மருத்துவம், தாய்மொழியை மறந்துவிடாமல் இன்றும் பின்பற்றுவதே சீனா, பிறநாட்டை சாராமல் தனித்துவமாக இயங்குவதற்கு முதன்மையான காரணம் என உணர முடிந்தது.- டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்சித்த மருத்துவ நிபுணர்மதுரை, 98421 67567

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X