உறவுகள் உருவாகட்டும்
உறவுகள் உருவாகட்டும்

உறவுகள் உருவாகட்டும்

Added : அக் 03, 2016 | கருத்துகள் (2) | |
Advertisement
''வெறுப்பது யாராக இருந்தாலும்நேசிப்பது நீங்களாகவே இருங்கள்''--அன்னை தெரசா.கிரேக்க மாமேதை அரிஸ்டாட்டில் ''யார் ஒருவர் சமூகத்தில் வாழ முடியவில்லையோ அல்லது யார் தேவைகளே இல்லாதிருக்கிறாரோ அவர் கடவுளாக இருக்க வேண்டும். இல்லையேல் விலங்காக இருக்க வேண்டும்'' என்று கூறினார். மனிதனுக்கு தேவை அதிகம். அவன் மற்றொருவர் தயவில்லாமல் வாழ முடியாது. சமூகத்தை சார்ந்தே
உறவுகள் உருவாகட்டும்

''வெறுப்பது யாராக இருந்தாலும்

நேசிப்பது நீங்களாகவே இருங்கள்''

--அன்னை தெரசா.

கிரேக்க மாமேதை அரிஸ்டாட்டில் ''யார் ஒருவர் சமூகத்தில் வாழ முடியவில்லையோ அல்லது யார் தேவைகளே இல்லாதிருக்கிறாரோ அவர் கடவுளாக இருக்க வேண்டும். இல்லையேல் விலங்காக இருக்க வேண்டும்'' என்று கூறினார். மனிதனுக்கு தேவை அதிகம். அவன்

மற்றொருவர் தயவில்லாமல் வாழ முடியாது. சமூகத்தை சார்ந்தே தனியொருவனின் வாழ்க்கை மையப்புள்ளியாகி விடுகிறது.


''ஒரு பிடி உணவிலே உலக ஒற்றுமை

கண்டிடு,உழைப்பினால் பதில் உலகத்திற்கு தந்திடு''

என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். ஒரு பிடி உணவை கையில் எடுத்து

பார்த்தீர்களேயானால், பல கோடி மக்களுடைய ஒற்றுமை அந்த ஒரு பிடி உணவில் இருப்பதை காணலாம். அந்த அரிசியை விளைவித்தவர்கள், அந்த அரிசி விளைவதற்குரிய நிலத்தை பண்படுத்தியவர்கள், அதை பண்படுத்துவதற்கு வேண்டிய கருவிகள் செய்தோர் என பலர் அடங்கியிருக்கின்றனர். இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் பல கோடி மக்கள் இணைந்திருக்கிறார்கள்

.

உறவுகள் : நம் வாழ்க்கை பெரியதா, சிறியதா என்பதை உறவுகளே தீர்மானிக்கும். குடும்ப உறவுகளும், சமூக தொடர்புகளும், ஒவ்வொரு தனி மனிதரின் வெற்றிக்கும் சாதனைக்கும் பின்பும் கட்டாயம் இருந்து வரும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் நம் அனைவரின் வாழ்வில் ஒரு தொடர்கதை. அந்த உறவுகளை பின்னும் நுாலிழைகளாக நம் உணர்வுகள் பின்னப் படுகிறது. ஒரு முறை விவேகானந்தர், அமெரிக்காவிற்கு கிளம்பி கொண்டிருந்தார்.

அதற்கு முன் அன்னை சாரதா தேவியிடம் ஆசி பெற விரும்பினார். அன்னை ''நீ அமெரிக்காவில் போய் என்ன செய்ய போகிறாய்?'' என்று வினவ, தாம் தர்மத்தின் செய்தியை அந்த நாட்டில் பரப்ப போவதாக கூறினார். சமையல்கட்டில் இருந்த அன்னை, ''அந்த கத்தியை எடுத்துக்கொடு'' என்று காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கேட்க, கத்தியை எடுத்து கூர்மையான

பகுதியை தன் பக்கம் வைத்து கொண்டு அதன் பிடியின் பக்கம் அன்னையிடம் விவேகானந்தர் கொடுக்கிறார்.கத்தியை வாங்கி கொண்ட அன்னை ''என் ஆசி உனக்கு உண்டு'' என்றார். கத்தியை கொடுத்ததற்கும், ஆசி வாங்கியதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்று வினவ, அன்னை ''பொதுவாக கத்தியை அல்லது எந்த கூர்மையான பொருள்களையும் நாம் எடுத்து கொடுத்தோ மென்றால், கூர்மையான பகுதியை நாம் வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால், ஒரு வேளை கத்தி குத்த நேர்ந்தால் அது கொடுப்பவரைத்தான் குத்தும். வாங்குபவரை அல்ல; இதுதான் தர்மம்''

கத்தியின் கூர்மை பகுதி போலத்தான் நமது உணர்ச்சிகள். அதன் கூர்மையான பகுதி, மற்றவர்களை பதம் பார்த்து விடாமல் செய்வதுதான் நமது மனத்தின் நிலைப்பாடு. இதை பக்குவமாய் செயல்பட அறிந்து கொண்டால், உறவுகள் தொடர்கதை. உணர்வுகள் சிறுகதையாக மாறி விடும்.


உறவுகள் மேம்பட...


l அடுத்தவர் திறமையை அடையாளம் காணுங்கள். அதை வளர்த்து கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.

l மற்றவரின் பிரச்னையை செவி கொடுத்து கேளுங்கள். இவ்வாறு செய்தாலே, அவர்கள் பிரச்னையின் தாக்கத்திலிருந்து வெளி வந்து தங்களுக்கு தாங்களே பிரச்னை களுக்கு தீர்வு காண முடியும்.

l மற்றவர்களை மாற்ற முயலாதீர்கள். அவர்களுடன் பொருந்திக் கொள்ள முயலுங்கள்.

l வெற்றிக்கான பெருமையை, பலனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வெற்றிகளை குவிக்க அவர்களுடைய தொடர் ஒத்துழைப்பு தேவைப்படும்.

l எதிராளியின் முக்கியத்துவத்தை அவர் உணரும்படி செய்யுங்கள்.

l உரிய நேரத்தில் உரிய முறையில் பாராட்டுங்கள். பாராட்டு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களிடம் மட்டுமல்ல உங்களிடமும்.

l அடுத்தவர் செய்கிற உதவிகளை நினைவில் வையுங்கள். நன்றியை செயலில் வெளிப்படுத்துங்கள்.

l புன்னகையும் இன்சொல்லும் இக்கட்டான நிலைகளை லேசாக்கி விடும்.

l சொற்கள் ஆற்றல் மிக்கவை. விளைவுகளை உண்டு பண்ணக்கூடியவை. எதையும் பேசுவதற்கு முன் சிந்தித்து கொள்ளுங்கள். சொற்களை அளவாக தேர்ந்து பயன்படுத்துங்கள். நான் சொல்வதே சரி என வாதிடாதீர்கள். வாதத்தில் பெறுகிற வெற்றியை விட உறவு முறியாமல் பார்த்து கொள்வது முக்கியம்.

l அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், அனுசரித்து போதல் இவற்றில் உறவு வளரும். அகந்தை, கோபம், பொறாமை, வெறுப்பு இவற்றால் உறவு நலிவடைந்து போகும்.

l மனித உறவுகளை மேம்படுத்த, கணிசமான நேரத்தை செலவிடுவோம்.

l எது அவர்களுக்கு தேவையோ, அதை அவர்களுக்கு கொடுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் முன் வருவார்கள்.

l அடுத்தவர் மனதில் இடம்பிடிக்க அவர்கள் மதித்து போற்றும் கருத்துக்களை செயல்களை பற்றி பேசுவதுதான்.

l நம் உறவுகள் நமக்கு செய்யும் ஒவ்வொரு நற்செயல்களுக்கு நாம் நன்றிகளை தொடர்ந்து தெரிவித்து வந்தால், அதுவே உறவுகளின் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.


சாத்தியம் : 'உறவுக்கு முடிவேயில்லை' என்கிறார் தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி.

உறவினர்கள் மாறலாம், ஆனால், உறவுகள் தொடரும்.

அன்பு, இரக்கம், உண்மை, உற்சாகம், தைரியம், நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய வற்றை கைக்கொள்வது நல்லது தான். வெறுப்பு, பொறாமை, சோர்வு,பொய்மை, பயம், சந்தேகம், கவலை ஆகியவற்றை நீக்கிவிடுவது அதைவிட நல்லதுதான். ஆனால், அது சாத்தியமா? எளிதில் இயலுமா? என்று கேட்கிறீர்களா? முற்றிலும் சாத்தியமே. மிக மிக எளிதானது தான்.

சுய கருத்தேற்றம், மனச்சித்திரம் ஆகிய இரண்டு வழியில் நீங்கள் எந்த நல்ல குணத்தையும் சேர்த்து கொள்ள முடியும். எந்த தீய குணத்தையும் விட்டுவிட முடியும்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகள் ''ஒரு மனிதன் துன்பப்படும்போது, அவனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட அவனுக்கு உதவி செய்கிற கரங்களே மேலானவை,'' என்று கூறுகிறார். நாம் நம் உறவுகளை அன்பு கொண்டு, சக மனிதனை நம் தீய உணர்ச்சி கொண்டு தாக்காமல், உறவுகளை மேம்படுத்துவோம்.

சக மனிதனை நேசிக்காத படிப்போ, பணமோ, புகழோ அவமானத்திற்கு உரியது.

அனைவரையும் நேசிப் போம், உறவுகளை மேம்படுத்துவோம்.


அ.ஹேமாமாலினி, கல்லுாரி முதல்வர்

ஆ.தெக்கூர். hema_shg@yahoo.co.in.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Ganesan Rajaram - madurai ,இந்தியா
04-அக்-201621:58:21 IST Report Abuse
Ganesan Rajaram மனித உள்ளங்களில் மறைந்து போய் வருகின்ற மனித நேயம் மீண்டும் மலர தினமலர் என் பார்வை வழியாக நல்ல உறவுகளை உருவாக்கினால் நிச்சயம் மனித நேயம் மீண்டும் சிறக்கும். உறவுகளை பற்றி சான்றோர்களின் மேற்கோள்களை மிக அழகாக எடுத்துரைத்து என் போன்ற வாசகர்களுக்கு இக் கட்டுரை மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தினமலருக்கும் கட்டுரையாளருக்கும் வாழ்த்துக்கள். - கணேசன் ராஜாராம் , தல்லாகுளம், மதுரை
Rate this:
Cancel
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
04-அக்-201618:30:58 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. அற்புதமான கட்டுரை. சக மனிதனிடம் நேசம் காட்டி, அமைதிக்கு வித்திட்டு, நிம்மதியாய் வாழ வலியுறுத்தும் அருமையான கருத்துக்கள். சக மனிதனை நேசிக்காத படிப்போ, பணமோ, புகழோ அவமானத்திற்கு உரியது. இன்றைய இயந்திரமயமான உலகில், அனைவரும் சந்தோஷமாய் இருக்க இந்த கட்டுரை வழிகோலும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X