உள்ளாட்சி நிலவரம் ஆளுங்கட்சியில் கலவரம்!| Dinamalar

உள்ளாட்சி நிலவரம் ஆளுங்கட்சியில் 'கலவரம்'!

Added : அக் 04, 2016
Share
பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில், 'ெஹட்செட்'டில் 'இளையநிலா' இசைமழையை பொழிந்து கொண்டிருந்தார் இளையராஜா . மொட்டை மாடியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.படபடவென படிகளில் ஏறி, மித்ரா வந்ததை பார்த்ததும், 'ஆப்' செய்தாள். பக்கவாட்டு சுவர் மீது தாவி ஏறி உட்கார்ந்த மித்ரா, ''கேள்விப்பட்டியாக்கா... நம்மூர் கல்வி
உள்ளாட்சி நிலவரம் ஆளுங்கட்சியில் 'கலவரம்'!

பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில், 'ெஹட்செட்'டில் 'இளையநிலா' இசைமழையை பொழிந்து கொண்டிருந்தார் இளையராஜா . மொட்டை மாடியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
படபடவென படிகளில் ஏறி, மித்ரா வந்ததை பார்த்ததும், 'ஆப்' செய்தாள். பக்கவாட்டு சுவர் மீது தாவி ஏறி உட்கார்ந்த மித்ரா, ''கேள்விப்பட்டியாக்கா... நம்மூர் கல்வி அதிகாரி, இப்பல்லாம் பத்திரிகையாளர்களை சந்திக்கவே தயங்குறாராம்,'' என்றாள்.
''யாரு... 'பழனியாண்டவரா', அவர் என்னைக்கு பத்திரிகைக்காரங்கள சந்திச்சாரு?'' என்றாள்.
அதற்கு மித்ரா, ''எல்லார்கிட்டயும் சுமூகமா நடந்திருந்தா, பிரச்னைகள கையாள்றது எப்படின்னு தெரிஞ்சிருக்கும். 2015 கல்வியாண்டு நல்லாசிரியர் விருது தயாரிக்கற பட்டியல் சர்ச்சையால, கல்வி அதிகாரியோட பதவி உயர்வையே நிறுத்தி வச்சிருக்காங்களாம். பத்திரிகைக்காரங்கள சந்திச்சா, 'குண்டக்க மண்டக்க' கேப்பாங்களோன்னுதான் சந்திக்க தயங்கறாராம்,'' என்றாள்.
''நானும் ஒரு கல்வித்துறை நியூஸ் சொல்றேன்,'' என்ற முத்தாய்ப்புடன் தொடங்கிய சித்ரா, ''தொடக்கக் கல்வித்துறைல, தொடர்ந்து தேர்வு வினாத்தாள் 'லீக்' ஆயிட்டே இருக்குதாம். இதுவரை யார் மேலயும் ஆக்ஷன் எடுக்காததால, ஒவ்வொரு வருஷமும் தொடர்ந்து நடக்குதாம்,'' என்றாள்.
''கீழ் லெவல்ல சின்னதா தொடங்குற, இது மாதிரி தப்புகளை கண்டுக்காததாலதான், மேல்மட்டத்துலயும் அங்கங்கே நடக்குது, சரி...சரி, மேட்டர சொல்லு,'' என்று ஆர்வமானாள் மித்ரா.
''தொடக்ககல்வித்துறைல, முதல்பருவ தேர்வு வினாத்தாளை, பிரைவேட் பிரிண்டிங் பிரஸ்ல பிரிண்ட் பண்ணுனாங்க. ஆனா தேர்வுக்கு முன்னாடியே, வினாத்தாள் நகல் வெளியாயிருச்சாம். இதே மாதிரி போன வருஷமும், அஞ்சாம் கிளாஸ் வினாத்தாள் வெளியாச்சாம். இதை பற்றி, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, ஆசிரியர் சங்கம் புகார் பண்ணியிருக்காம்,'' என்றாள் சித்ரா.
''புகார்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது...சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில இருந்து, நம்மூரு ஆர்ட்ஸ் காலேஜூக்கு வந்திருக்கற அஞ்சு பேர்ல ஒருத்தருக்கு, யு.ஜி.சி., கல்வித்தகுதி இல்லையாம். இதை பத்தி மேலிடத்துக்கு, புகார் போயிருக்கறதால, கல்வித்தகுதி இல்லாம டபாய்க்கறவங்களுக்கு சிக்கல்தான்,'' என்றாள் மித்ரா.
''அவருக்கு மட்டுமா சிக்கல்...ஆளுங்கட்சியில 'சிட்டிங் கவுன்சிலரா' இருந்து, வர்ற எலக்ஷன்ல மறுபடியும் போட்டி போடறவங்களுக்கும், இந்தவாட்டி சிக்கல்தான்,'' என்று 'சஸ்பென்ஸ்' வைத்தாள் சித்ரா.
''விவரமா சொல்லு அக்கா,'' என்றாள் மித்ரா.
''வர்ற தேர்தலுக்கும் 'திருமங்கலம் பார்முலா' வை பின்பற்ற, ஆளுமையுள்ள கட்சிக்காரங்க பிளான் பண்ணியிருக்காங்களாம். வார்டு வாரியா, மேலிடத்துல இருந்து 'சப்ளை' பண்ண போறாங்களாம். மறுபடியும் போட்டி போடற, 'சிட்டிங்' கவுன்சிலர்களுக்கு எதுவும் கிடைக்காதாம்,'' என்றாள் சித்ரா.
''அஞ்சு வருஷம் சம்பாதிச்சதுல ஒரு 'சின்ன பகுதிய', அடுத்த அஞ்சு வருஷத்துல சம்பாதிக்கப் போற தொழிலுக்கு, முதலீடா போட சொல்றாங்கன்னு சொல்லு,'' என்று கண் சிமிட்டினாள் மித்ரா.
''ஆளுங்கட்சிக்குள்ள இந்தவாட்டி ரொம்ப பேரு போர்க்கொடி துாக்கியிருக்காங்களே...,'' என்று இழுத்தாள் சித்ரா.
''அதுவா... 'சீட்' கெடைக்காத அதிருப்தியில ஆதரவாளர்கள கூட்டிட்டு வந்து, கண்ணீர் வடிக்கிறாங்க. மாத்துக்கட்சியை சேர்ந்தவங்களுக்கு வாய்ப்பு கொடுத்ததால கோபம். எதிர்ப்பாளர்களை சரிக்கட்ட எம்.எல்.ஏ.,க்களால முடியலை. இப்ப, கட்சி ஆபீஸ் பக்கமே தலைகாட்டுறதில்ல,'' என்றாள் மித்ரா.
''மேயர் பதவியை கைப்பத்திருவாங்களா...?'' - கேட்டாள் சித்ரா.
''நுாத்துக்கு நுாறுன்னு இலக்கு நிர்ணயிச்சிருந்தாலும், இப்ப இருக்கற நெலைமையில கொஞ்சம் கஷ்டம்தான். ஆளுங்கட்சிக்காரங்க ரொம்பவே மெனக்கெடணும். வேட்பாளருங்க, ஜனங்க மத்தியில இருக்கிற அதிருப்தியால, 40 'சீட்' காலியாகிடும்னு கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க. வேற கட்சியில இருந்து வந்தவங்கள 'காலி' பண்ணவும், ஒரு குரூப் முடிவு செஞ்சிருக்கு,'' என்று பதிலளித்தாள் மித்ரா.
''எதிர்க்கட்சிக்காரங்கள எப்படி சமாளிக்கப் போறாங்க?'' என்று மறுபடியும் கேள்வி எழுப்பினாள் சித்ரா.
''எதிர்க்கட்சிக்காரங்க வலுவா இறங்கினா, வைட்டமின் 'ப' சப்ளை செஞ்சு, ஓட்டை அள்ற பிளான் இருக்கு. தேர்தல் நியாயமா நடந்தா, போராடித்தான் ஜெயிக்கணும்னு, அவங்க கட்சிக்காரங்களே கவலைப்படுறாங்க,'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் சரி... மாநகராட்சிக்குள்ள ஒரு அதிகாரிக்கு தேர்தல் பணி ஒதுக்கலையாமே...,'' என துருவினாள் சித்ரா.
''அது தெரியாதா உனக்கு அக்கா... மேற்கு மண்டலத்துல, ஒரு உதவி கமிஷனர் இருந்தாரு. வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரி. கொஞ்ச நாளைக்கு முன்னால, ஆளுங்கட்சிக்காரங்க சொன்னாங்கன்னு, வடவள்ளில பப்ளிக் டாய்லெட்டை, நடுராத்திரில இடிச்சு தரைமட்டம் ஆக்கிட்டாங்க. அங்க வசிக்கிறவங்க அதிர்ச்சியாயிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''ம்ம்...அப்புறம்?'' - சித்ராவுக்கு ஆவலை அடக்க முடியவில்லை.
''தி.மு.க.,காரங்க பிரச்னையை பெருசு பண்ணிட்டாங்க. ஜனங்களும் அதிருப்தியாயிட்டாங்களாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகிட்ட கேட்டதுக்கு, வருவாய்த்துறையில வேலை பார்த்த நெனைப்புல, பதில் சொல்லியிருக்காரு. சரி, இனியும் இவரை வச்சிருந்தா வேலைக்கு ஆகாதுன்னு, எலக்ஷன் ஒர்க்கும் குடுக்காம இருந்தாங்க. இப்ப, மாநகராட்சி பணியில இருந்தே விடுவிச்சிட்டாங்க...,'' என்றாள் மித்ரா.
''போனவாட்டி ரெண்டு பேர நியமிச்சா மாதிரி, இந்தவாட்டியும் உதவி தேர்தல் அதிகாரிகளா, ஆளுங்கட்சிக்கு சாதகமானவங்களா போட்டுருக்காங்களாமே...,'' என கேட்டாள் சித்ரா.
''ஆமா அக்கா... அதெல்லாம் மேலிடத்து உத்தரவாம். ஸ்டேட் எலக்ஷன் கமிஷன் ஆர்டரையும் மதிக்கணும்; மேலிடத்தையும் அனுசரிச்சு போகணும். இல்லைன்னா நிம்மதியா துாங்க முடியாதே... அதான், குனிஞ்சும், வளைஞ்சும், நெளிஞ்சும் போறாங்க,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.
''சரியா சொன்ன. நான் ஒரு மேட்டர் சொல்றேன். மாநகராட்சிய ஆளும் கட்சி தக்க வைக்கலேன்னா, முக்கியஸ்தருக்கு சிக்கல் வரும்ங்கறதால, ஜெயிச்சே ஆகணும்னு அவர் வார்டு, வார்டா ரவுண்ட் அடிக்கறாராம். அவர் கூடவே வார்டுக்குப் போய் ஓட்டு கேக்கறதுக்கு, கட்சி வேட்பாளர்கள்லாம் மணிக்கணக்குல வார்டுல காத்துக் கிடக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஹவுசிங் யூனிட் ஆபீஸ்ல, லேடி ஸ்டாப்லாம் காத்துக் கிடக்கறது போலயா?'' என்று கேட்டாள் மித்ரா.
''இதென்ன புதுக்கதை? அவங்க எதுக்கு காத்துக் கிடக்காங்க?'' - புருவத்தை சுருக்கினாள் சித்ரா.
''தினமும் சாயங்காலமானா, உடற்பயிற்சி, வாக்கிங் பண்ணப் போறேன்னு கிளம்புற முக்கிய பொறியாளர், திரும்பி வர்ற வரைக்கும் எல்லாரையும் 'வெயிட்' பண்ண சொல்றாராம். எட்டு மணி சுமாருக்கு, அவர் வந்த பிறகுதான் 'பைல்' லாம் கையெழுத்தாகுதாம். சீக்கிரமா வீட்டுக்கு போக முடியாம, 'லேடி ஸ்டாப்' லாம் புலம்பித் தீர்க்கறாங்க,'' என்றாள் மித்ரா.
''சரி...சரி, அதெல்லாம் கிடக்கட்டும்...வர்றியா, சாரதாம்பாள் கோவிலுக்கு போலாம்,'' என்றாள் சித்ரா.
இருவரும் ஸ்கூட்டரில் கிளம்பினர். ஸ்கூட்டர் ஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டில் திரும்பியதும், நிறைய கார்கள் வரிசைகட்டி நின்றன.
''என்னாச்சு மித்து?'' என்று கேட்டாள் சித்ரா.
''அதையேன்க்கா கேக்கறே... கோர்ட் இருக்கறதால மூணு ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்காங்க. எல்லாம் மலை உயரத்துக்கு இருக்கு. ஒவ்வொரு வண்டியும் ஏறி இறங்கி போறதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிருது. கார்ப்பரேஷன் ஆபீசர்ங்க இதையெல்லாம் கவனிச்சு, ஸ்பீடு பிரேக்கர் உயரத்தை குறைச்சா நல்லா இருக்கும்,'' என்றாள்.
''சிட்டில போஸ்டர்லாம் பயங்கரமாயிருக்கே...'' என ஆளுங்கட்சி போஸ்டரை பார்த்து வாயை பிளந்தாள் சித்ரா.
''அ.தி.மு.க.,வுல போஸ்டர் ஒட்டி, கோஷம் போட்டு போராடுறவங்க, அப்படியே தான் இருக்காங்க. உதாரணத்துக்கு, கட்சியில பல வருஷமா இருக்கறவங்களுக்கு சீட் குடுக்காம, கட்சிக்கு வந்து ஒரு வருஷம் கூட ஆகாத, ஒருத்தருக்கு அஞ்சாவது வார்டுல 'சீட்' குடுத்துருக்காங்களாம். 'ஜெ., வந்தா' இவங்களை எல்லாம் தூக்கி வீசிருவாங்கன்ற நம்பிக்கைல, அதிருப்தியாளர்கள்லாம் சென்னைக்கு 'பேக்ஸ்' அனுப்பிட்டே இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''தி.மு.க., காரங்க என்ன சொல்றாங்க?'' என்றாள் சித்ரா.
''நல்லா 'பைட்' பண்ணுனா, மாநகராட்சில தி.மு.க.,வுக்கு ஒரு சான்ஸ் இருக்குன்னு, ஜோசியக்காரன் சொல்லிட்டான் போலிருக்கு. அந்த வார்டு எனக்கு வேணும்; இந்த வார்ட கூட்டணிக்கு கொடுக்க கூடாதுன்னு கட்சி ஆபீசுல மல்லுக்கட்டிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''ம்ம்...அப்புறம்?''-ஆர்வத்துடன் கேட்டாள் சித்ரா.
அதற்கு மித்ரா,''ஆபீசுல ஆலோசனை செஞ்சா சரிப்பட்டு வராதுன்னு, இன்னோவா கார்ல சிட்டிய ரவுண்ட் அடிச்சுட்டே ஆலோசனை பண்ணியிருக்காங்க. தி.மு.க.,வுலயும் 'சீட்' வாங்கறதுக்கு, முன்னாள் நிர்வாகி ஒருத்தருக்கும், வாரிசு அரசியல்வாதி ஒருத்தருக்கும், பல லட்சத்தை கொட்டி கொடுத்திருக்காங்க,'' என்றாள்.
''எலக்ஷன் நெருங்கிருச்சி...டாஸ்மாக் மதுக்கடைகள மூடுற மேட்டர, எதிர்க்கட்சிகள்லாம் மறந்துட்டாங்களா என்ன?'' என்று வேறு மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''நீ சொல்றது சரிதான்க்கா. கடைய மூடினாலும், 24 மணி நேரமும் சரக்கு விக்கிற கடைங்க கூடிட்டே இருக்கு. மதுக்கரை மார்க்கெட்ல இருந்து, பாலத்துறை போற வழியில, 'எல் அண்டு டி' பைபாஸ் ரோடு பக்கத்துல, ஒரு டாஸ்மாக் மதுக்கடை இருக்கு. இதுக்கு பக்கத்துல ஒரு பெட்டிக்கடை இருக்கு. டாஸ்மாக் கடை மூடியிருக்கற நேரத்துல, பெட்டிக்கடைய டாஸ்மாக் கடையா மாத்திர்றாங்க. பின்னணில ஆளுங்கட்சி பிரமுகர் இருக்கறதால, போலீசும் வாங்க வேண்டியத வாங்கிட்டு கண்டுக்கறதில்லை,'' என்றாள் மித்ரா.
''இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா மித்து?'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் சித்ரா.
அதற்குள் சாரதாம்பாள் கோவில் வந்திருந்தது. இருவரும் இறங்கி செருப்புகளை கழற்றி விட்டு, கோவிலுக்குள் நுழைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X