மாஜியின் ராஜ்ஜியம்...! எதிர்கோஷ்டிக்கு பூஜ்யம்...!| Dinamalar

மாஜியின் ராஜ்ஜியம்...! எதிர்கோஷ்டிக்கு பூஜ்யம்...!

Added : அக் 04, 2016
Share
""உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு பார்த்தியா'' என்றபடியே உள்ளே வந்தாள் சித்ரா.""தேர்தல் வந்ததால, அதிகாரிகள் பாடுதான் ரொம்ப திண்டாட்டமாயிடுச்சு,'' என, பேச்சில் பொடி வைத்தாள் மித்ரா.""மனு தாக்கல் ஆரம்பிச்சதில் இருந்தே, அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் திண்டாட்டம் தான். அ.தி.மு.க., தலைமை அறிவிச்ச நேரத்தில் மாஜி அமைச்சர், தன்னோட
மாஜியின் ராஜ்ஜியம்...! எதிர்கோஷ்டிக்கு பூஜ்யம்...!

""உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு பார்த்தியா'' என்றபடியே உள்ளே வந்தாள் சித்ரா.
""தேர்தல் வந்ததால, அதிகாரிகள் பாடுதான் ரொம்ப திண்டாட்டமாயிடுச்சு,'' என, பேச்சில் பொடி வைத்தாள் மித்ரா.
""மனு தாக்கல் ஆரம்பிச்சதில் இருந்தே, அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் திண்டாட்டம் தான். அ.தி.மு.க., தலைமை அறிவிச்ச நேரத்தில் மாஜி அமைச்சர், தன்னோட ஆதரவாளர்களோட வந்து, மனு தாக்கல் செஞ்சார். இரண்டு மண்டல வார்டுகளுக்கான வேட்பாளர்களும், கட்சிக்காரங்களும் வந்து, நகரையே ஸ்தம்பிக்க வெச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""இது வெளியே நடந்த கூத்து; உள்ளே நடந்த சங்கதி தெரியுமா,''என்று மித்ரா கேட்க, ""அங்கே என்ன ஆச்சு'' என்று ஆவலுடன் கேட்டாள் சித்ரா.
""மனு தாக்கலுக்கு, வேட்பாளரையும் சேர்த்து, மொத்தம், அஞ்சு பேர் மட்டுந்தான் அறைக்குள் அனுமதிக்கணும். ஆனால், இதையெல்லாம் யாரும் பெரிசா கண்டுக்கல. மாஜி அமைச்சர் மனு தாக்கல் செஞ்சபோது, அமைச்சர் ஒருவர், எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர், இரண்டு பி.ஏ.,க்கள் அப்புறம் கட்சி நிர்வாகிகள்னு, அறையே நிரம்பி வழிஞ்சது,'' என்று, மித்ரா கூறினாள்.
""அதெல்லாம் ஆளும் கட்சி விவகாரம்னு, அசட்டையாக இருந்திருப்பாங்க,'' என்றாள் சித்ரா.
""அப்படித்தான் நினைச்சு, இருந்துட்டாங்க. ஆனா, இதை போட்டோ ஆதாரத்தோட, மாநில தேர்தல் அலுவலகத்துக்கு புகாரா அனுப்பியிருக்காங்க. தேர்தல் கட்டுப்பாட்டு அறையில இருந்த, உதவி தேர்தல் அலுவலர் தமிழ்செல்வனை, வறுத்து எடுத்துட்டாங்களாம். அவரோ, "வெளியே இருந்த போலீசார் தடுக்கல; நான் என்ன செய்ய முடியும். இனிமே கவனமா இருக்கேன்'னு சொல்லி சமாளிச்சாரம்,'' என்று சொன்ன மித்ரா, ""ரொம்ப நாளா காணாமல் போயிருந்த மருமகன், திரும்பவும் களத்தில் இறங்கிட்டாரு'' என்றவாரே, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
""மாஜி மினிஸ்டரோட அக்கா மகன் தான். ஒரு வருசம் முன்னாடி, பல்வேறு சிக்கலில் சிக்கிய அவரை, கட்சியில் இருந்து நீக்கினாங்க. இப்ப, மீண்டும் களப்பணியில் இறங்கீட்டாரு. தன்னோட மருமகன் இருந்தால் அதிர்ஷ்டம்; நம்பிக்கையாவும், திறமையாவும் செய்வார்னு, மீண்டும் களத்திலே இறக்கிவிட்டிருக்காங்களாம்,'' என்று, மித்ரா விவரித்தாள்.
""ஆளுங்கட்சிக்காரங்க, வழக்கம் போல், தடபுடலாக தேர்தல் பணியை துவங்கிட்டாங்க. ஆனா, மத்த கட்சிக்காரங்க மத்தியில், பெரிய சுறுசுறுப்பை காணோமே,'' என்றாள் சித்ரா.
""எதிர்க்கட்சிகளுக்கு, வெற்றி கிடைக்குமான்னு சந்தேகம் இருக்கு. இதனால, ஆரம்பத்தில் இருந்தே, மந்தமா இருக்காங்க. தி.மு.க., கூட்டணி, மக்கள் நலக்கூட்டணின்னு, யாரிடமும் மேயர் வேட்பாளர் தொடர்பா, எந்த அறிகுறியும் தென்படலை. வாய்ப்பு கிடைக்கிற வார்டில், பெயரளவுக்கு போட்டியிட்டு, கிடைக்கும் ஓட்டுக்களை தக்க வெச்சுட்டா போதும்னு பல வேட்பாளருங்க இருக்காங்க,'' என, மித்ரா கூறினாள்.
""சூரியக் கட்சியிலே, முக்கிய நிர்வாகிகள் யாரும் சீட் கேட்கலையா? சட்டசபை தேர்தலுக்கு பலரும் போட்டி போட்டாங்களே' என்றாள் சித்ரா.
""அந்தக் கட்சியில, பதவி அனுபவித்த பலரும், இப்போதைக்கு நேரம் சரியாக இல்லைன்னு சொல்லி நழுவீட்டாங்க. தனியாக ஜெயிச்சாலும், மேயர் பதவி கிடைக்கறது சிரமம். வெறும் கவுன்சிலராகி, என்ன செய்யறதுன்னு தான், இந்த தயக்கத்துக்கு காரணம்' என, மித்ரா கூறினாள்.
""இரண்டு கட்சியிலுமே, அதிருப்தி வேட்பாளருங்க நிறைய இருக்காங்க போலிருக்கே,'' என்றாள் சித்ரா.
""ஆமா, சிட்டிங் கவுன்சிலர் சிலர், தங்களுக்கு சீட் கேட்டு போராடியும் எதுவும் நடக்கலை. மனு போட்டு வைப்போம்; வாய்ப்பு கிடைச்சா சின்னம் வாங்குவோம்; இல்லைனா, தனிப்பட்ட முறையில் பலத்தை காட்டுவோம்னு, கடைசி நாள் வரை காத்திருக்கும் முடிவில் சிலர் இருக்காங்க. ஒருசில வார்டுல, உள்ளடி வேலையும் நடந்திருக்கு. இதெல்லாம், மனு வாபஸ் பெறும் போது தான் தெரிய வரும்' என்றாள் மித்ரா.
""தேர்தல் நேரம்னா எல்லாத்தையும் மறந்திடுறாங்க...'' என்றாள் சித்ரா.
""அப்படி என்னத்த நீங்க மறந்துட்டீங்க'' என்று கேட்டாள் மித்ரா.
""உள்ளாட்சி தேர்தலில் "பிஸி'யா இருக்கறதால, முதல்வர் மருத்துவமனையில இருந்தும் கூட, கட்சிக்காரங்க ஒண்ணும் பெரிசா பூஜை, வழிபாடுனு எதுவும் செய்யல. எல்லோரும், வார்டு தேர்தல் வேலையில இறங்கிட்டாங்க.
""வீரராகவப்பெருமாள் கோவிலில், தன்வந்திரி யாகம் நடத்த ஏற்பாடு செஞ்சும், யாரும் கலந்துக்கலைனு சொன்னாங்க. அதற்கு பதிலா, கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு போய், சில நிர்வாகிகள் மட்டும் வழிபாடு நடத்திட்டாங்க... இதுல என்ன அரசியல்னு தெரியலை'' என்றாள் சித்ரா.
""ஒரு கட்சியில "சீட்' வேணும்னு போராட்டம் நடத்துறாங்க... சில கட்சியில, கொடுத்த "சீட்' வேண்டாம்னு அடம்பிடிக்கறாங்க,'' என்றாள் மித்ரா.
""அது எந்த கட்சியில அந்த அதிசயம் நடக்குது?'' என்றாள் சித்ரா
""தமிழ்நாடுனு துவங்குற மாநில கட்சியிலதான். கொஞ்சம் வார்டுல போட்டியிடலாம்னு, முக்கிய நிர்வாகிகள் பெயரை அறிவிச்சிருக்காங்க. ஆனா, என்னால தேர்தலில் நிற்க முடியாது; வேட்பாளர மாத்திடுங்கனு மறுக்க ஆரம்பிச்சுட்டாங்க. வேற வழியே இல்லாம, வேட்பாளரா அறிவிச்சாச்சு; நின்னுதான் ஆகணும்னு கண்டிப்பா சொல்லியிருக்காங்க... எல்லாருக்கும் எம்.எல்.ஏ., ஆகத்தான் ஆசை,'' என்றாள் மித்ரா.
""எம்.எல்.ஏ.,னு சொன்னதும் ஞாபகம் வருது... திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வுல, எம்.எல்.ஏ., ரெகமண்ட் பண்ணுன ஆட்களுக்கு "சீட்' கிடைக்கலையாம். எல்லா பதவியும், மா.செ., விருப்பப்படிதான் கொடுத்திருக்காங்க. குறிப்பா, வடக்கு, தெற்கு எம்.எல்.ஏ., பரிந்துரை எதுவுமே எடுபடலயாம்'' என்றாள் சித்ரா.
""குமரன் பிறந்த நாள் விழாவுக்கு, பேரணி நடத்த அனுமதி கிடைக்கலையாம்,'' என்றாள் மித்ரா.
""அரசாங்கம் கூட நினைவு நாளை அரசு விழாவா அனுசரிக்குது... பிறந்த நாளை கொண்டாடினா, போலீசுக்கு என்ன இடைஞ்சலோ தெரியலை. ஊர்வலம் நடத்த அனுமதியில்லைனு கைய விரிச்சுட்டாங்கனு, புலம்பினாங்க,'' என்றாள் சித்ரா.
""விருந்து வச்சதால... மண்டல தலைவருக்கு "சீட்' கிடைக்கலைனு பேசிக்கறாங்க..'' என்றாள் மித்ரா.
""விருந்து வச்சா நல்லது தானே?'' என்று பதட்டமாக கேட்டாள் சித்ரா.
""சமுதாயக்கூடம் திறப்பு விழா, நகர்நல மைய கட்டடம் திறப்பு விழாவுனு, ஒரு நாள் முழுவதும் திருப்பூர்ல விழா நடந்துச்சு. முதன் முதலா நடந்த விழாவுல, அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வச்சாரு. எம்.எல்.ஏ., ஒருத்தர் உத்தரவு போட்டதால, மதிய விருந்து, 54வது வார்டுல நடந்திருக்கு. கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சாப்பிட்டுட்டு போயிருக்காங்க. இப்ப, அந்த விருந்து வச்சதே, அவருக்கு "சீட்' கிடைக்காம போக காரணமாகிடுச்சு. விருந்து வச்சு கொண்டாடற அளவுக்கு ஆகிட்டாங்களானு கோபப்பட்டு, இதுவரைக்கும் "சீட்' கிடைக்கலைனு, கட்சிக்குள்ள ஒரே பேச்சா இருக்கு...'' என்றாள் மித்ரா.
""பெரிய கோவில் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு, ஆளும்கட்சிக்குள்ளயே இரண்டு வார்டுகளில் போட்டி அதிகமாக இருக்குது. அதனால, "ப' வைட்டமின் அதிகமா செலவு செஞ்சாத்தான், பதவிங்கற நிலைமையாகிடுச்சு... அதனால, சொத்த வித்தாவது பதவிய பிடிக்கணுங்கற வெறி கிளம்பிடுச்சு... எப்படியோ வாக்காளர்களை குளிர்விக்க போறாங்க...'' என்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X