'யாதும் ஊரே யாவரும் கேளிர்'| Dinamalar

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

Updated : நவ 04, 2016 | Added : அக் 05, 2016 | கருத்துகள் (2)
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

''யார் உழைப்பால் நாம் வாழ்கின்றோமோ அந்த மக்களின் துயரங்கள் நம்மை அலைக்கழித்து நமது நாடி நரம்புகளில் எல்லாம் கலந்து நம்மை துாங்க விடாமல் செய்கின்றதோ, அதுவே நாட்டுப்பற்றின் ஆரம்பம்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.
மனிதன் என்பவன் தனிமரமல்ல. அவன் தானாய் உருவாகவில்லை. சமூகத்தினால் மனிதனாய் உருவாக்கப்படுகிறான். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் இடம், இவையெல்லாம் நமக்கு முன்னே இருந்தவர்கள் சிந்திய வியர்வை துளிகளாய் கிடைத்தவைதாம். வியர்வை துளிகளை சிந்தியவருக்கு நாம் வெண்சாமரம் வீச வேண்டும் என்பதில்லை. இயந்திர உலகில் ஓடுகின்ற ஓட்டத்தில் ஒரு துளி நேரத்திலாவது உழைத்தவர்களை நம் நெஞ்சில் நிறுத்திப் பார்ப்போம்.


முகமறியா மனிதர்கள் :

''மண் திணிந்த நிலனும், நிலன் ஏந்திய விசும்பும்விசும்பு தைவரு வளியும், வளித்தரைஇய தீயும்தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்துஇயற்கை போலப்,'' என்பது புறநானுாறு.நீரில்லாமல் உயிர் வாழ முடியாது. உடலும் வாழாது. அந்த உடலுக்கு உணவு கொடுத்தவரே உயிர் கொடுத்தவர் ஆவார். நிலத்திலே விளையும் பயிர்களுக்கு, நீர் உணவாக அமைகிறது. பச்சையாக உணவினை உண்டு வந்த மனிதன். தனது அறிவின் துணை கொண்டு உணவு சமைத்தான். பின்னர் தனது அறிவின் திறத்தால் பயிர் விளைவித்து வேளாண்மை செய்து, இவ்வுலகத்தில் உயிரையும், உடலையும் நிலை நிறுத்தி வாழ்ந்து வாழ்வித்தான்.இவ்வாறாக ஒரு முறையான வாழ்க்கையை வாழ்வதற்கு முன் ஆதிமனிதன் கூட்டம் கூட்டமாய் காட்டில் விலங்கோடு விலங்காய் திரிந்தபோது, அவர்களுள் சிலர் ஒரு மரத்தின் இலையையோ, காயையோ, கனியையோ பறித்து உண்டு, வாழ்வு கண்டு, அவ்விடத்திலேயே மரணத்தைத் தழுவியிருக்கலாம். இவ்வாறு எத்தனை எத்தனையோ முறை நிகழ்ந்த உயிரிழப்புகளின் மூலமாகத்தான் எவையெல்லாம் விசத்தன்மையுடையவை? எவை எல்லாம் மனிதர் உண்ணுதற்குரியவை? என்று மனிதனால் வரையறுக்க முடிந்தது. இப்படியாக எத்தனை உயிர்கள், இவ்வுலகம் வாழ உயிர்த்தியாகம் செய்திருக்கும். சிந்தித்துப் பார்ப்போம். இந்த முகமறியா மனிதர்களின் உழைப்பை மூலதனமாக கொண்டு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த தியாகிகள் தங்களது அனுபவத்தையும், சாதனைகளையும் விதையாய், இவ்வுலகம் வாழ விதைத்து விட்டு சென்றிருக்கின்றனர். விதைகள் முளைத்து மரமாய் வளர்ந்து அதன் பயனை மட்டும் பெற்று கொண்டால் போதுமா? அதனை பாதுகாத்தும், நமது பங்கிற்கு எதையாவது இவ்வுலகிற்கு நல்லதை விட்டு செல்லவும் வேண்டுமல்லவா?


எது நம் கடமை :

''மனிதன் உண்பனவெல்லாம் மனிதனாக மாறுவது மாபெரும் விந்தையல்லவா?,'' என்றார் ஓர் அறிஞர். நாம் உண்ணும் உணவும், அருந்தும் பானமும், நமது நரம்பாக, தசையாக, எலும்பாக, மொத்தத்தில் நாமாக மாறுவது விந்தையான விஷயமன்றோ? இந்த உடலையும் உயிரையும் நமக்களித்த நம்முடைய பெற்றோருக்கு மட்டுமா நாம் கடமைப்பட்டிருக்கிறோம்? உணவு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். சிந்தனை விரிய விரிய நமது கடமையும், காலத்திற்கேற்றபடி விரிவடைந்து கொண்டிருக்கும். நாம் இங்கு வாழ, நமக்கு தேவையானதை இங்கிருந்து எடுத்து கொள்வதை போல, இம்மண் வாழ நமது பங்களிப்பையும் கொடுக்க வேண்டுமல்லவா? தன்னுடைய இனிமையான குரலால் அழகாகப்பாடி, இவ்வுலகத்தை இன்பத்தில் துய்க்க வைக்கும் பாடகன், அதனைப்பாட எத்தனை நாள் சாதகம் செய்திருப்பான்? எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய துாக்கம் மறந்து, குடும்பம் துறந்து, ஆராய்ச்சிக்கே தங்களை அர்பணித்து, இவ்வுலகிற்கு அறிவியல் உண்மைகளை எடுத்துக் காட்டியிருக்கின்றனர் தெரியுமா? விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை தேடி அளித்திருக்கின்றனர். மனிதராய் பிறந்ததன் வாழ்வியல் தத்துவத்தை, இவர்கள் நமக்கு சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். பெருந்துன்பம் தரும் கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து, மருத்துவத்துறையில் பல சாதனைகள் படைத்து மனிதகுலத்தின் துயரை போக்கிய அந்த மாமனிதர்களை இவ்வுலகம் மறக்கத்தான் முடியுமா?


மனிதம் செய்வோம் :

மனிதராய் பிறந்த நாம், நம் சக மனிதருக்கு உதவுவது எப்படி? மனிதரை மனிதராய் மதிக்கும் பண்பை முதலில் நாம் கற்று கொள்ள வேண்டும். பணம் என்ற காகிதத்தில் பற்று கொண்டு, பட்டு பகட்டு மோகம் கொண்டு, எளியவரை எள்ளி நகையாடுவதும், உழைக்கும் வர்க்கத்தை கண்டால் ஒதுங்கி போவதும், மனிதம் மறைந்து போகின்ற செயல்கள் ஆகும். அரிசியும், கோதுமையும், கம்பும், கேழ்வரகும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு பெயரில் உணவாய் உட்கார்ந்திருந்தாலும் அதை உருவாக்கியவன், அழுக்கேறிய உடை அணிந்து, வெயிலிலும் மழையிலும் வாடும் உழைப்பாளி தானே! பொதுநலம் போற்றுவோம் மானுட சமுத்திரம் மிகப்பெரியது. இதில் ஒரு துளியாவது இருக்கட்டும் உனது பங்கு. அதற்கென்று சேர்த்து வைத்த பொருளை எல்லாம் இச்சமூகத்துக்கு அப்படியே கொடுத்து விட்டு போகச் சொல்லவில்லை. சேர்த்ததில் ஒரு பகுதியாவது செலவழிப்போம் நம் சமூகத்துக்கு. பெரும்பாலான உலகியல் பிரச்னைகளுக்கு காரணம் நாம் நம் சுய நலத்தை மட்டுமே நம் சிந்தையில் வைத்திருப்பதால் தான். ஒரு வறண்ட பாலைவனத்தில் நடந்து வருகின்ற வழிப்போக்கன் கண்களில் ஒரு அடிகுழாய் தென்படுகின்றது. அதன் அருகே குவளையில் நீர் இருப்பதையும் பார்க்கிறான். தாகத்தில் தவித்து கொண்டிருந்த அம்மனிதன் மகிழ்ச்சியில் வேகமாய் அதைப்பருக எண்ணி எடுக்கையில், அதன் அருகே 'இக்குவளையில் உள்ள நீரை அடிகுழாயில் ஊற்றி அடித்தால், அதிகமாய் வரும் நீரை குடித்து விட்டு மீண்டும் குவளையை நிரப்பி வைத்து செல்லவும்,' என்று எழுதி இருந்தது. அடிகுழாயில் நீரை ஊற்றி வரவில்லையெனில் தாகத்தால் தவிக்க வேண்டி வருமே என்று வழிப்போக்கன் நினைத்து, குடிக்க எத்தனிக்கையில் மனசாட்சி உறுத்த, அந்த நீரை நம்பிக்கையுடன் அடிகுழாயில் ஊற்றி அடிக்கிறான். சிறிது நேர முயற்சிக்குப்பின் தண்ணீர் வருகிறது. தாகம் தீரக்குடித்தவுடன் மீண்டும் அந்த குவளையை நிரப்பி வைத்து விட்டு செல்கிறான். அதுபோல் தான் நம்மில் பலர் நமக்கென்ன? எது எப்படியோ நடந்து விட்டது போகிறது? நம் காரியம் முடிந்தால் சரி என்ற எண்ணத்தில் வாழ்கின்றோம். நம் முன்னோர்கள் அவ்வாறு நினைத்திருந்தால் நாம் இவ்வாறு வாழ முடியுமா?


அர்ப்பணிப்பே அறம் :

மனிதனுடைய வாழ்வியல் மிகவும் முக்கியமானது. தான் மேற்கொள்ளும் வேலையில் மனநிறைவோடு செய்வது ஆகும். மன நிறைவின்றி செய்யும் வேலை குறைவின்றி முடியுமோ? தனி மனித உழைப்பு இச்சமூகத்திற்கு தேவை. இந்த உழைப்பு கடமையாக மட்டுமல்லாமல் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி அர்ப்பணித்தவர்கள் மட்டுமே, இங்கே தங்களுடைய தடத்தை பதிய வைத்து சென்றிருக்கிறார்கள். அதனால் தான் நாம் நம்முடைய மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை நம் நெஞ்சங்களில் சுமந்து கொண்டிருக்கிறோம்.''மானுட சமுத்திரம் நானென்று கூவு,'' என்றார் பாரதிதாசன். பெறுவதும் தருவதுமாய் வளர்வது தான் வாழ்க்கை. எவ்வாறு கோள்களின் இயக்கம் அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகுவதில்லையோ, அதுபோல் மனிதனின் வாழ்வானது சமூகத்தை சார்ந்தே அமையும். அச்சமூகத்துடனான மனிதனுடைய உறவு பலப்பட பாலமாய் அமைவது அன்பு மட்டுமே. அதற்கு ஒவ்வொரு மனிதனும் மானுட சமுத்திரத்தில் ஐக்கியமாவதால் மட்டுமே இது சாத்தியம். அப்போது தான் 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனார் கூற்றுக்கு உண்மையான பொருள் அமையும்.
- அ.லட்சுமி, ஆசிரியை,

போடி. 99767 72768We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X