சினிமா என்பது பெரியவர்கள் மட்டும் பார்த்து ரசிக்க கூடிய கலை வடிவம், என்ற சிந்தனை போக்கு இந்திய திரைக்கலைஞர்கள் மத்தியில் உள்ளது. அதனால் தான், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் இங்கு அதிகம் எடுக்கப்படுவதில்லை. இங்கு பெரியவர்கள் பார்க்கும் படங்களைத்தான் சிறுவர்களும் பார்க்கின்றனர். இதனால், விபரீதமான எண்ணங்களும், சிந்தனை போக்குகளும் இந்திய குழந்தைகளிடம் உருவாகுகின்றன.
ஆனால், மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளின் கற்பனை திறனையும், ரசனையையும் மேம்படுத்தும் வகையில் மிகச்சிறந்த திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதனால், குழந்தைகளின் கற்பனை உலகம் அவர்களுக்குள் இயல்பாக விரிகிறது.
குழந்தைகளின் சினிமா குறித்த சிந்தனை போக்கை, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் உருவாக்கும் நோக்கத்தோடு, கோவை திரைப்பட இயக்கம் சார்பில், கோவையில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழா நடத்தப்படுகிறது சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள அருணா திருமண மண்டபத்தில் நடக்கும் இவ்விழா, அக்., 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, மாலை 6:00 மணிக்கு நான்கு நாட்கள் நடக்கின்றன.
இதில், ஈரான், ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளை சேர்ந்த சிறந்த சிறுவர் திரைப்படங்கள் தேர்வு செய்து திரையிடப்படுகிறது. திரைப்படவிழாவை இயக்குனர் பாலாஜி சக்திவேல், 9ம் தேதி மாலை 5.00 மணிக்கு துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில் முதல் படமாக இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய 'சில்ட்ரன் ஆப் ஹெவன்' என்ற ஈரான் நாட்டு திரைப்படம் திரையிடப்படுகிறது.
இதுகுறித்து, கோவை திரைப்பட அமைப்பின் செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், ''குழந்தைகள் அற்புதமான கனவுகளோடும், கற்பனைகளோடும், கதைகளோடும் இவ்வுலகிற்கு வருகின்றனர். அவர்கள் கனவுகளை வளப்படுத்தும் விதமாக இந்த சிறுவர் திரைப்பட திருவிழா' நடததப்படுகிறது.
இதில், சிறுவர்களுக்கான நீதி போதனைகள், நல்லொழுக்கங்களை போதிக்கும் திரைப்படம், சுற்றுச்சூழல், கானுயிர் நேசிப்பை வளப்படுத்தும் திரைப்படம், சிறுவர்கள் அகவுலகில் பிரவேசித்து சிந்தனையை வளப்படுத்தும் திரைப்படம், சிறுவர்களின் கற்பனை வளத்தை மேம்படுத்தும் திரைப்படம் என உலகிலேயே தலை சிறந்து ஐந்து சிறுவர் திரைப்படங்கள் இவ்
விழாவில் திரையிடப்படுகின்றன. சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். இதற்கான அனுமதி கூப்பன் ஆனந்தாஸ் ஓட்டல் கிளைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்'' என்றார்.
வாங்க குட்டீஸ்! முதல் முதலாக நல்ல சினிமா பார்ப்பதற்கு.